Thursday 1 December 2011

முள்றியின் டைரி 10 - இது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா?

நான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக்கொண்டிருந்தேன் (தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை.  50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல் கயிறு S.Ve. சேகர் போல எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூணே மூணுதான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும்?).

என்னுடன் வேலை செய்யும் ஒரு பொறியாளன் தன்னுடைய நண்பன் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறினான். “திருமணமாகி அந்த மனைவி” மூலமாகக் குழந்தைகள் இருக்கிறதா” என்று நம்ப முடியாமல் கேட்டேன் ( Yes. ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் “திருமணம்” செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது அசாதாரண விஷயம்). என் கேள்வியைப் புரிந்து கொண்ட என் பொறியாளன் தன் நண்பன் ஒரு நல்ல குடும்பஸ்தன் என்றும் ரொம்பப் பொறுப்பானவன் என்றும் சான்றிதழ் கொடுத்தான். இரண்டுமே இங்கு பெரிய விஷயம் என்பதால் அவனை உடனே Interview- விற்கு வரச் சொன்னேன்.

அவனும் வந்தான். சிறிது நேரம் பேசினோம்.  நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் அவனிடம் இருந்ததாகத் தோன்றியது. சினிமா படங்களில் வரும் MD போல (ம்க்கும்….அது வேறயா?) குரலை வைத்துக் கொண்டு You are appointed Gentle Man என்று சொல்லி விட்டு அவன் முகத்தில் சந்தோஷ ரேகையைத் தேடினேன்.

அவன் மிகவும்  Casual –ஆக, Sir, நான் உங்கள் கம்பெனியில் சேர வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் என்றான். “இதென்ன கலாட்டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சொல் என்றேன். நான் மிகவும் மதப் பற்றுள்ளவன் என்றான். Good என்றேன். எங்கள் சர்ச்சில் உள்ள சர்வீஸ் கமிட்டியில் நான்தான் Leader என்றான். Very good என்றேன். எந்த ஒரு சனிக் கிழமையும் என்னால் கடவுளைப் பிரார்த்திக்காமல் இருக்க முடியாது என்றான். நான் கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு சனிக்கிழமை பிரார்த்தனைதானே, நன்றாகப் பிரார்த்தியப்பா. எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள் என்றேன். இதில் என்ன பிரச்சினை என்றேன். அவன் உடனே லலிதா ஜூவல்லரி விளம்பரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல அதுதான் விஷயம் அதில்தான் விஷயம் என்றான். அவனைக் குழப்பத்தோடு பார்த்தேன். சனிக்கிழமை நான் காலை 8 மணிக்கெல்லாம் சர்ச்சுக்குப் போய்விடுவேன் என்றான். நான் பரிதாபமாக அப்போ வேலை….. என்று இழுத்தேன்.

நான் சனிக்கிழமை வேலைக்கு வரமுடியாது. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றான். எனக்கு தேவர் மகன் கமல் சொன்னது போல உள்ளே இருக்கும் மிருகம் லேசாக எட்டிப் பார்த்தது. ஏம்பா கடவுளுக்குச் சமமாக கடமையும் முக்கியமில்லையாப்பா என்று சொல்லி விட்டு நம்ம “கொக்கென நினைத்தாயா கொங்கனவா” கதையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவனுக்கு என்ன புரிந்ததோ….சாரி சார் எனக்கு சர்ச் ரொம்ப முக்கியம் என்றான் (ஒரு வேளை நம்ம கதையைக் கேட்டு பயந்து விட்டானோ?).

நான் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, ஒருவேளை நான் உன் கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன செய்வாய் என்றேன். அவன் சிறிதும் அசராமல் உங்கள் வேலையே வேண்டாமென்று போய்விடுவேன் என்கிறான். நான் பொறுமையிழந்து, எலேய் கடவுள் பெயரைச் சொல்லி நீ வேண்டுமானாலும் பசியோடு இருக்க உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அந்த கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உன் மனைவியையும் குழந்தைகளையும் பட்டினி போட யாரடா உனக்கு அந்த உரிமையைத்தந்தது மானிடப் பதரே என்றேன் மனோகரா கண்ணாம்பாள் ஸ்டைலில்(நெஜ்ம்மாகவே டென்ஷன் ஆயிருச்சுங்க).

அவன் கொஞ்சம் கூட அசராமல் உங்களுக்குக் கூட (?????????) தெரிந்த இந்த அல்ப விஷயம் ஜீசஸுக்குத் தெரியாதா…..அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி விட்டு என் கையை குலுக்கி விட்டுப் போய் விட்டான்.
அன்று இரவு எனக்குக் கொஞ்சம் கூடத் தூக்கம் வரவில்லை. நல்ல ஒரு  Candidate –ஐ விட்டு விடோமே என்பதற்காக அல்ல. மஜா படத்தில் விக்ரம் பேசுவதாக ஒரு வசனம் வரும் “இது என்ன ஜென்மம்டா” என்று- அதை நினைத்து.

நண்பர்களே….இப்போது இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு எனக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

வெ.பாலமுரளி.

2 comments:

  1. ithu குருட்டு நம்பிக்கை...

    he is the fool ever... if the god know that he will look after the family, that the same god may gave this opportunity for him to join this job...

    what to more than this.

    ReplyDelete
  2. ஆஹா நல்ல நகைச்சுவையாக சொல்லி இருக்கீங்க. வேலை வேண்டும் என்று தேடுபவர்களைவிட வேலைக்கு ஆட்களைத்தேடும் பாடு தான் ரொம்ப கஷ்ட்டமோ.

    ReplyDelete