Monday, 28 January 2013

முள்றியின் டைரி 14 : நம்ம மதுரக்காரெய்ங்கெ எல்லோருமே....


எனக்குக் கடந்த 2 வருடங்களாக பணமே கையில் நிற்பதில்லை ( அதற்கு முன்னால் அம்பானி ரேஞ்சுக்கு இருந்தாயாக்கும் என்று கேட்க வேண்டாம். ஏனென்றால் அப்போதும் இதே நிலை தான்).

எனவே, சக இந்தியக் குடிமகனைப் போல் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், ஏதாவது ஒரு வங்கியைப் பிடித்து கடனை உடனை வாங்கி கோயம்புத்தூரில் ஒரு இடத்தை வாங்கிப் போட்டு விடுவதென்று. கடனே என்று அந்தக் கடனைக் கட்ட வேண்டுமென்றாவது ஏதாவது சேமித்து விடலாமென்பதுதான் Master Plan (???). அதற்கான ஆயத்த வேலைகளை ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் ஆரம்பித்தேன்.

இன்டர்நெட் மூலமாக கோயம்புத்தூரில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு ஸ்டேட் பாங்க் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. யார் யாரையோ பிடித்து அந்த வங்கியின் கிளை மேலாளரையும் பிடித்து விட்டேன். நான் கென்யாவிலிருந்து ஃபோன் பண்ணுகிறேன் என்று தெரிந்ததும் அவருக்கு அப்ப்ப்ப்ப்படி ஒரு சந்தோஷம். நான்தான் அவருடைய முதல் NRI கஸ்டமராம் (அய்யோ பாவம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.....என்ன செய்வது...விதி வலியது...).

நான்  NRI என்று தெரிந்தவுடனேயே, கென்யாவிலிருந்து மாதா மாதம் கோடி கோடியாக பணம் Transfer ஆகப் போகிறதென்று அவர் கனவு கண்டிருக்க வேண்டும். அவர் குரலில் அப்படி ஒரு சந்தோஷம். நானும் நம்ம பஞ்ச Song –ஐ (அதாங்க பஞ்சப் பாட்டு) உடனே எடுத்து விடாமல் ஒரு NRI Account Open பண்ண வேண்டும் என்று மட்டும் சொல்லி விட்டு மற்றவற்றை நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று டிஸ்கஷனை முடித்துக் கொண்டேன். அவருக்கும் சொந்த ஊர் மதுரையாம். நானும் மதுரை என்றவுடன் நாங்கள் இன்னும் Thick Friends ஆகிவிட்டோம் – ஃபோனிலேயே.


நாங்கள் பேசியபடியே அவரும் ஒரு அக்கௌண்டை ஓப்பன் பண்ணி செக் புக், இன்டர்நெட் யூசர் நேம் , பாஸ்வேர்டு எல்லாம் அனுப்பி விட்டார். சூப்பர் சர்வீஸ். அதான் டிசம்பரில் இந்தியா போகிறோமெயென்று, நானும் அதற்குப் பிறகு அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

இந்த முறை கோயம்புத்தூர் போனதும், முதல் காரியமாக அவரைப் போய் பார்த்தேன். நான் ஆறு மாதத்திற்கு முன்னால் பேசியதற்கும் இப்போதுக்கும் பயங்கர Difference. மனிதர் சூப்பர் பிஸியாகியிருந்தார். ஆனாலும், முரளி, கென்யா என்று சொன்னவுடனேயே கண்டுபிடித்து விட்டார். சூப்பர் வரவேற்பு. கொஞ்சம் உட்காருங்க சார்....சில கஸ்டமர்களை முடித்து விட்டு (???) வந்து விடுகிறேன் என்று என்னை அவர் ரூமிலேயே உட்கார வைத்து விட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

சும்மா சொல்லக் கூடாது. வந்த கஸ்டமர்களும் 20 லட்சம் 30 லட்சம் என்று FD போட்டு விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு 20 நிமிடம் கழித்து என்னுடன் பேச ஆரம்பித்தார். முரளி சார் பார்த்தீங்கள்ல...கோயம்புத்தூரில் எல்லோருமே இப்படித்தான் சார். செம Rich. நான் கிளை ஆரம்பித்து 6 மாதத்திற்குள் 75 கோடி ரூபாய் FD Collect பண்ணி விட்டேன்.Can You Imagine? என்று கேட்டு விட்டு அவரே தொடர்ந்தார். நான் இதற்கு முன்னால் நம்ம மதுரை பழங்காநத்தம் பிராஞ்சில் இருந்தேன். நம்ம மதுரக்காரெய்ங்கெ எல்லோருமே பிச்சக்காரெய்ங்கெ சார். லோனு லோனுன்னு உசுர வாங்கிருவாய்ங்கெ. ஒரே இம்சை (நம்ம வந்த நோக்கம் தெரிஞ்சிருச்சோ?) என்று சொல்லி விட்டு, அப்புறம் முரளி சார் சொல்லுங்க என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க என்றார்.
நான் ஒரு நொடி, ஒரே ஒரு நொடிதான் யோசித்தேன். டமாலென்று, ஒன்றுமில்லை சார்..சும்மா உங்களைப்பார்த்து ஹலோ சொல்லி விட்டுப் போகலாமென்று வந்தேன், நான் இன்னோரு முறை நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போது வருகிறேன் என்று சொல்லி விட்டு உடனே இடத்தைக் காலி செய்தேன்... (ஸ்ஸ்ஸ்ஸ்...அதற்குள் வியர்த்து விட்டது. எப்படித்தான் சில பேர் கடன்லேயே காலத்தை ஓட்றாய்ங்கெளோ).

அவரும், ச்சே...நாட்ல இப்படியும் சில நல்லவய்ங்கெ இருக்காய்ங்கெளே என்று நினைத்திருக்க வேண்டும்.

நான் இனி அடுத்த வங்கியைப் பார்க்க வேண்டும்.

வெ. பாலமுரளி

பி.கு : நான் இந்த முறை என் அக்கா பையன் பிரபுவைச் சந்தித்தேன்....எப்படி மாமா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்றான். “ தெரியலேப்பா...தெரியலே” ( நாயகன் ஸ்டைலில் படிக்கவும்).  

2 comments:

  1. Grt am happy abt ur blog....ur stuffs are superb ..the way you write .....it's coming to our eyes lively....also grt fan of urs....sir

    ReplyDelete