Saturday, 3 August 2013

முள்றியின் டைரி 15: சில நினைவுகள்......


கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ...
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ ....
நிம்மதியைத் தாரீரோ....


என்று கண்ணதாசனின் ஒரு பாடல் உண்டு - உத்தமன் படத்தில். எனக்கு  அந்த வரிகளோடு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த வரையில் எல்லா கனவுகளுமே சுகமாக இருப்பதுமில்லை, எல்லா நினைவுகளுமே சுமையாக இருப்பதுமில்லை. அது சரி...நம்மில் எத்தனை பேர் பழைய நினைவுகளை அடிக்கடி அசை போடுகின்றோம் ? என்னைக் கேட்டால் , நம்மில் பல பேர் நம் நினைவுகளையே  ரசிப்பதில்லை. ஏதோ ஒரு விரக்தி, ஒரு சலிப்பு... நம்ம என்னத்த கண்ணையா  போல...


எனக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் , சில இனிய ( அல்லது Interesting) நினைவுகளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்து  விடுவேன். சில நிமிடத்துக்குள்ளேயே மனசு உற்சாகமடைந்து விடும். அதிலும், சில இடங்களுடன்  சில பாடல்களும் அல்லது சில இடங்களுடன்  சில நினைவுகளும் கை கோர்த்து வரும் பாருங்கள். சுகமாக இருக்கும்.  அந்த மாதிரி சில இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.


1985 ம் வருடம் நண்பர்களுடன் வைகை அணைக்கு சென்றிருந்தேன். சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க நான் மட்டும் மேலேயே நிற்க, என்னுடன் வந்த அனைவரும் கீழே சென்று விட்டார்கள். தனிமை என்றால் அப்ப்ப்ப்ப்ப்ப்படி  ஒரு தனிமை. அப்போதுதான் இதயக்கோயில் படம் வந்த புதிது. அதில் வரும் "வானுயர்ந்த சோலையிலே" பாடலை கீழே ஒரு ஸ்பீக்கர்  செட்டில் போட, நான்  என்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் மட்டுமே அணையின் மேலே நின்றிருந்தேன். மிகச் சரியாக சூரியனும் அதே நேரத்தில் மறைய....Believe me...Just an amazing experience. அதில் இருந்து எப்போது நான் அந்தப் பாட்டைக் கேட்டாலும் என் மனசு இறக்கை கட்டி வைகை அணைக்குப் பறந்து விடும் - என் கேமராவுடன்.


2005 என்று ஞாபகம். எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" படித்து விட்டு கங்கை கொண்ட சோழபுரம் செல்ல முடிவெடுத்தேன். போறதுதான் போறோம், ஒரு வித்தியாசமான முறையில் போவோமே  என்று முடிவெடுத்தேன்.


கையில் கொஞ்சூண்டு பணம் மட்டும் எடுத்துக் கொண்டு என் கேமரா மற்றும் Tripod  சகிதம் கிளம்பிவிட்டேன். எந்தக் காரணம் கொண்டும் காரில் செல்வதோ, நல்ல ஒரு ஹோட்டலில் தங்குவதோ ,  பெரிய உணவகங்களில் சாப்பிடுவதோ கூடாது என்று முடிவெடுத்தேன். ஒரு Typical நாடோடி போல சென்று வருவதே என் பயணத்தின்  நோக்கம். 


அங்கு செல்வதற்கு முதல் நாள் வரை கங்கை கொண்ட சோழபுரம் எங்கு இருக்கிறது என்று ஐடியாவே இல்லை. என் சகோதரி Dr அகிலாவின்  உதவியால், மதுரையில் இருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் போய் அங்கிருந்து சிதம்பரம் பஸ்ஸில் ஏறினால் க.கொ. சோ. புரம் போய் விடலாம் என்று தெரிந்து கொண்டேன். மதுரையில் பஸ்ஸில் ஏறிய முதலே நல்ல மழை. காலை 7 மணிக்கு கிளம்பிய நான், க.கொ.சோ.புரம் பொய் இறங்கிய போது மணி மதியம் 4. சிலு சிலுவென்று மழை தூறிக் கொண்டிருந்தது.  கோயிலுக்கு  எதிரில்  4 டீக்கடைகள் மட்டுமே  இருந்தன. க.கொ.சோ.புரம் கிராமம் 4 கி.மீ. தள்ளி உள்ளே இருக்கிறது.  எனக்கோ செம பசி.. அதில் ஒரு கடையில்  ஏறி சாப்பிட எதாவது உள்ளதா என்றேன். அவர் கடையில் இது போல யாருமே கேட்டது இல்லை போலிருக்கிறது. என்னை ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்து விட்டு டீ, காப்பி மட்டும்தான் சார் இருக்கு என்றார். நான் ரொம்ப சோர்வாக , சரி ஒரு டீ போடுங்கள் என்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ , சார்,  வீட்டில் எங்களுக்காக பண்ணிய லெமன் ரைஸ் இருக்கு சாபிடுவீர்களா  என்றார். என் கண்ணில் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சம். சரி என்றேன். அந்த மழை நேரத்தில், அந்தக் காட்டுக் கோயிலைப் பார்த்துக் கொண்டே , அந்த சிறிய டீக்கடையில் லெமன் ரைஸ் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதே,ஆஹா.... அது எந்த ஒரு  5 நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத ஒரு சுகானுபவம். 


அன்று சும்மா சுற்றி  மட்டும் பார்த்து விட்டு களைப்பின் மிகுதியால், அருகில் இருந்த ஜெயங்கொண்டம் கிளம்பி விட்டேன். அங்கும் சரியான மழை. அங்கிருந்த ஒரு ஆட்டோக்காரரிடம் தங்குவதற்கு ஏதேனும் ஹோட்டல் இருக்கிறதா என விசாரித்தேன். அவர் ஒரு லாட்ஜின் பெயரைச் சொல்லி ( கிருஷ்ணவேணி என்று ஞாபகம்) அந்த லாட்ஜ்தான்  சார் இந்த ஊரிலேயே சூப்பராக இருக்கும் என்றார். அந்த அடை மழையில் எனக்கு பெரிதாக சாய்ஸ் ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. சரி என்று அந்த லாட்ஜூக்கே  சென்றேன்.  பாடாவதி என்றால் அதரப் பாடாவதி (இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலமுரளி?). சரி...நம் பயணத்தின் நோக்கமே அதுதானே என்று பொறுத்துக் கொண்டு அங்கிருந்த  ஒருவரிடம் போய் ஒரு ரூம் கிடைக்குமா என்றேன். எப்படிப்பட்ட ரூம் வேண்டும்? ஆர்டினரியா, டீலக்ஸா இல்லை சூப்பர் டீலக்ஸா என்றார். நான் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.


என்னங்க வித்தியாசம் என்றேன் அப்பாவியாக. ஆர்டினரி என்றால் ஸ்டீல் கட்டிலும் ஃபேனும்  மட்டும் இருக்கும் (அதில் ஸ்டீல் கட்டில் என்று சொல்லும்போது அவர் மூஞ்சியில் அப்படி ஒரு பெருமிதம். எல்லாம் நேரம்லேய்  என்று நினைத்துக் கொண்டேன்) , டீலக்ஸில் கொசுவர்த்திச் சுருளும் குளிப்பதற்கு வென்னீரும் வைத்துக் கொடுப்போம் என்றார். என்னால் ஆவலை அடக்க முடியாமல், அப்ப சூப்பர் டீலக்ஸ்? என்றேன். சூப்பர் டீலக்ஸில் டிவி யும்  இருக்கும் என்றார். அடக் கெரகமே என்று நினைத்துக் கொண்டு , சரி சூப்பர் டீலக்ஸே கொடுங்கள் என்றேன். கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும் பரவாயில்லையா என்றார் ( என்னை விட மாட்டாய்ங்கெ போலிருக்கே). எவ்வளவு என்றேன். நூத்தி நாற்பது ரூபாய் ஆகும் பரவாயில்லையா என்றார் ( நான் இருந்த கோலத்திற்கு , இவனால் 140 ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது என்று அவருக்கு தோணியிருக்க வேண்டும்). அதுசரி..சூப்பர் டீலக்ஸ் 140 என்றால் மத்த ரூமெல்லாம்   எவ்வளவு என்றேன். 100 மற்றும் 120 என்றார். (இனி  அந்த லாட்ஜின்  தரத்தை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)....இந்த லட்சணத்தில் ரூம் சர்வீஸ் வேறு...அவ்வப்போது வந்து டீ வேண்டுமா காப்பி வேண்டுமா என்று. என் வாழ்க்கையில் அந்த இரவை மறக்கவே முடியாது.....அதிலிருந்து எப்போது மழை பெய்தாலும் எனக்கு கங்கை கொண்ட சோழபுரம், அங்கு சாப்பிட்ட லெமன் ரைஸ், கிருஷ்ணவேணி லாட்ஜ் மூன்றும் ஞாபகத்திற்கு  வந்து விடும்.


அதேபோல் 2012 டிசம்பரில் திரும்ப ஒரு முறை க.கொ.சோ.புரம் சென்றிருந்தேன். இந்த முறை குடும்பத்தோடு. அன்று இரவு அபிஷேகத்திற்குச் சொல்லியிருந்தோம். நம் முதல்வர்(களின்) புண்ணியத்தால் கரண்ட்டும் இல்லை. அவ்வளவு பிரமாண்டமான கோயிலில் நாங்கள் மொத்தமே 8 பேர்தான் ( நாங்கள் 4 பேர் + 2 குருக்கள் + 2 வாத்தியக்காரர்கள் - நாதஸ்வரம் + மேளம்). மிகக் குறைவான வெளிச்சத்தில் அந்தப் பிரமாண்டமான லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்க, வாத்தியக்காரர்கள் " ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே ..." பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க , அது அந்தக் கோயிலின் எல்லா திசையிலும் எதிரொலித்து ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் கொடுத்தது பாருங்கள் ....செம த்ரில்லிங். இந்தியாவில் இருந்த மிச்ச சொச்ச  நாட்களில் ஒவ்வொரு முறை கரண்ட் போகும்போதும், எனக்கு க.கொ.சோ.புரத்தில் பார்த்த அபிஷேகமும் , ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே பாட்டும் ஞாபகத்துக்கு வந்து விடும்.


அதேபோல் என்னுடைய முதல் சென்னை விசிட். 1983 - இல் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து 2 மாத விடுமுறையில் இருந்தேன். என் அப்பாவிடம்  சண்டை போட்டு சென்னையில் இருக்கும் என் மாமா வீட்டிற்குச்  செல்ல அனுமதி வாங்கி விட்டேன்.முதல் முறையாக கடல் கடந்து ( ????????!!!!!!!!!) சென்னை செல்லப் போகிறோம் என்று ஒரே பர பரப்பு. என்னை விட என் அப்பாவிற்கு பயங்கர டென்ஷன். பையனை எப்படி தனியே அனுப்புவது என்று. நான் சென்ற பஸ்ஸில் தன் நண்பர் ஒருவரைப் பிடித்து விட்டார். என் அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். யோவ் கிருஷ்ணா, என் பையன் இப்போதான்யா  முதன் முதலாக மெட்ராஸ்  போகிறான். பார்த்துக்கய்யா. ...காலையில் எக்மோரில் வந்து இவன் மாமா இவனை அழைத்துக் கொண்டு போய் விடுவார் என்றார். கவலையே  படாதீங்க  சார். இவன் மாமா வரும்வரை நான் இவன் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் 10 முறை Assurity கொடுத்த பிறகே என் அப்பா அந்த இடத்தை விட்டு நகன்றார். நான் ஏகப்பட்ட கனவுகளுடன் கொஞ்சம் கூட துங்காமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டே பயணம் செய்தேன். கிட்டத்தட்ட 4 மணியளவில் எக்மோரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் வந்து இறங்கினோம்.  


அது ரயில்வே ஸ்டேஷன் என்று தெரியாமல் ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது என்ன கட்டிடம் என்று அவரிடம் கேட்க ஆசை. ஆனாலும் எதோ ஒரு கூச்சம் வந்து தடுத்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து " அண்ணே அது என்ன கட்டடம்ணே " என்றேன். அவர் ஒரு நிமிடம் யோசிப்பது போலத்  தெரிந்தது. பிறகு நிமிர்ந்து ஒரு முறை அந்தக் கட்டடத்தைப் பார்த்து விட்டு இதுதான் கவர்னர் பில்டிங் என்றார். எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பின்னே ...வந்து இறங்கிய சில நிமிடத்துக்குள்ளேயே கவர்னர் பில்டிங்கைப் பார்ப்பதென்றால் சும்மாவா. இருந்தாலும் ஒரு சந்தேகம் " ஏண்ணே, இந்த அதிகாலையிலேயே  இவ்வளவு மக்கள் உள்ளே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்" என்றேன் அப்பாவியாக. அவர் சத்தியமாக அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. அவர் சற்று எரிச்சலுடன் " பின்ன ....கவர்னர்னா என்ன சாதாரணமான ஆளா  " என்றார். நானும் அவர் சொல்வது கரெக்ட்தானே என்று  சமாதானமாகி விட்டேன். அப்போதுதான் நான் தற்செயலாக நிமிர்ந்து அந்த கட்டடத்தின் மேலே மாட்டியிருந்த விளம்பரப்  பலகையைக் கவனித்தேன். " கவ்னர் பீடிகள்" என்று போட்டிருந்தது. சட்டென்று பொறி தட்டியது. "கவ்னர் பீடிகள்" பலகையைப் பார்த்து விட்டுத்தான் தலைவர் கவர்னர் பில்டிங் என்று என்னிடம் கதை விட்டிருக்கிறார் என்று புரிந்தது. அதையும் அவரிடமே கேட்டு விட்டேன். உடனே அவர் சுதாரித்துக் கொண்டு " ஹி...ஹி...ஹி...நானும் மெட்ராசுக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன்" என்றார். அதிலிருந்து நான் எப்போது சென்னைக்குப் போனாலும் கவர்னர் பில்டிங்கை  நினைக்காமல் இருந்ததில்லை.  


நான் ஜெர்மனி செல்லும் ஒவ்வொரு முறையும் ஹிட்லரின்  Cencentration Camp  சென்று வர வேண்டும் என நினைப்பேன். ஆனால் எதாவது ஒரு வேலை வந்து முடியாமல் போய் விடும். சென்ற  வருடம் ஏப்ரலில் ஒரு வாய்ப்பு வந்தது. இந்த முறை விட்டு விடக் கூடாது என்று முன்னாலேயே பிளான் பண்ணி அதற்கேற்றார்போல டிக்கெட்டும் புக் பண்ணி விட்டு கிளம்பினேன். நான் தங்கியிருந்தது கொலோன்  என்னும் நகரில். Concentration Camp  இருந்தது Buchenwald என்னும் ஊரில். அதை ப்யூஹன் வால்ட் என்றுதான்  உச்சரிக்கிறார்கள். கிட்டத்தட்ட 8 மணி நேரப் பயணம், ட்ரெயின் , பஸ் , கார் என்று மாறி மாறிப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. நான் அங்கு போய் இறங்கும்போது  மதியம் 2 மணியாகி விட்டது. குளிர் காற்றோடு தூறல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. ப்யூஹன் வால்ட் ஒரு மிக பிரமாண்டமான சிறைச்சாலை. இங்கு வைத்து ஏராளமான யூதர்களை சித்திரவதை செய்ததோடு, விஷ வாயு அறைகளில் ( Gas Chambers) வைத்து ஏராளமானோரை படுகொலையும்  செய்திருக்கிறார்கள். இதை ஹிட்லரே நேரில் வந்து அடிக்கடி பார்வையிடுவதும் உண்டு. அதில் பெரும்பாலான இடங்களை எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.   ஒரு நல்ல புகைப்பட  கலைஞனுக்கு அழகு அவன் எடுக்கும் இடங்களோடு அல்லது மக்களோடு  Detached ஆக இருப்பது. நான் ஒரு நல்ல புகைப்பட கலைஞனில்லை என்பது திரும்ப ஒரு முறை அங்கு  நிரூபணமாகியது.  அங்குள்ள குறுகலான அறைகளையும்,  விஷ வாயு அறைகளையும் புகைப்படம் எடுப்பதற்காக Tripod ஐ செட் பண்ணி விட்டு புகைப்படம் எடுக்க முடியாமல் திணறினேன். அங்கு நடந்திருந்த நிகழ்ச்சிகள் முகத்தில் அறைவது போல இருந்தன. அங்கு நின்றிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் என் நிலையைப் பார்த்து விட்டு என் முதுகில் ஆதரவாகத்  தடவிச் சென்றார். அதன் பிறகே நான் என் நிலை உணர்ந்து  சில படங்கள் மட்டும் எடுத்து விட்டு வெளியேறினேன். நான் கொலோன்   திரும்பும்போது நடு இரவு 2 ஆகி விட்டது. அதிலிருந்து நான் கலைஞர் டி.வி. யில்  சரித்திரம் தொடர் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ப்யூஹன்வால்ட் பறந்துவிடும்.


இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் என் வாழ்வில். அதற்காக எனக்குப் பிரச்சினைகளே இல்லை என்று அர்த்தமில்லை. எனக்கும் 1008 தலைவலிகள் உண்டு. ஆனால் அது வேறு இது வேறு என்று பிரித்து விடுவேன். 


கண்ணதாசனின் கதை ஒன்று உண்டு. கானகத்தில் புலிக்குப் பயந்து ஓடிய ஒருவன் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். கீழே விழுவதற்குள் அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு விழுதினைப் பற்றிக் கொண்டான். மேலே புலி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது கீழேயோ விஷ நாகங்கள் நெளிந்து கொண்டிருந்தன. பத்தாததற்கு அவன் பிடித்திருந்த விழுதை வேறு ஒரு எலி கருமிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த தேன் அடை ஒன்று உடைந்து அங்கிருந்த தேன் அவன் வாயில் வந்து விழுந்ததாம். அப்போது அவன் சொன்னானாம் “ ஆகா..தேன் என்ன சுவை” என்று. எப்பேற்பட்ட உண்மை.... என்னதான் பிரச்சினை என்றாலும் தேன் என்ன கசக்கவா செய்யும்?   


நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும் ரசிப்பதுதானே வாழ்க்கை, இல்லையா?


நண்பர்களே...இப்போது ஒரு சின்ன Request. எனக்காக ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நீங்களே அதிசயப்படும் அளவிற்கு உங்கள் வாழ்வில் அவ்வளவு இனிமையான  சம்பவங்கள் நடந்திருக்கும் – I bet.அதை அடிக்கடி நினைவு கூர்ந்து சந்தோஷப் படுங்கள்....வாழ்வு இனிக்கும்.


வெ. பாலமுரளி.


பி.கு: தான் உயிரோடு இருக்கும் வரை என் எழுத்திற்கு முதல் ரசிகையாயிருந்து என்னை ஊக்குவித்த என் அம்மாவிற்கு இந்த டைரிக் குறிப்பை காணிக்கையாக்குகிறேன்.  

3 comments:

 1. ஆகா..தேன் என்ன சுவை” என்று. எப்பேற்பட்ட உண்மை.... என்னதான் பிரச்சினை என்றாலும் தேன் என்ன கசக்கவா செய்யும்?


  நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும் ரசிப்பதுதானே வாழ்க்கை, இல்லையா?//
  ஆம், மிக உண்மை. சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நானும் மிகவும் ரசிப்பேன்.

  எல்லா இனிய நினைவுகளும் மிக அருமை.
  பின் குறிப்பு மனதை நெகிழ வைத்து விட்டது.

  ReplyDelete
 2. நாங்கள் மொத்தமே 8 பேர்தான் ( நாங்கள் 4 பேர் + 2 குருக்கள் + 2 வாத்தியக்காரர்கள் - நாதஸ்வரம் + மேளம்). மிகக் குறைவான வெளிச்சத்தில் அந்தப் பிரமாண்டமான லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்க, வாத்தியக்காரர்கள் " ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே ..." பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க , அது அந்தக் கோயிலின் எல்லா திசையிலும் எதிரொலித்து ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் கொடுத்தது பாருங்கள் ....செம த்ரில்லிங். //

  நாங்கள் ஆண்டு தோறும் ஜனவரி 1ம் தேதி அங்கு
  இருப்போம்.
  நீங்கள் காட்சி படுத்திய காட்சியை மனகண்முன் கொண்டு வந்தேன், மிக அருமையான காட்சி.

  ReplyDelete