Sunday 25 August 2013

முள்றியின் டைரி 17: சில கனவுகள்.....


என்னுடைய சென்ற டைரியில் “ கனவுகளே கனவுகளே காலெமெல்லாம் வாரீரோ...” என்ற பாடலைக் குறிப்பிட்டு என்னுடைய சில இனிய நினைவுகளைப் பற்றி எழுதிருந்தேன். ஆனால் கனவுகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஞாபகம் இருக்கா ? அந்த கோடிட்ட இடங்களை நிரப்பவே இந்த டைரி.

எனக்கு 2 கனவுகள் அடிக்கடி வரும்.

முதல் கனவு, கொஞ்சம் வயலன்ட். நம்ம ராஜபாளையம் நாய் போல ஒரு ஆக்ரோஷமான அல்சேஷன் நாய் அடிக்கடி என் கனவில் வரும். அதற்கு நான் செல்லமாக ( ????) ரத்தினம் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரத்தினம் என்னை கன்னா பின்னா என்று துரத்தும். அப்போது நான் ஓடும் ஓட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும்... உசேன் போல்ட்டெல்லாம் என்னங்க ஓடுறாரு. பிஸ்கோத்து ஓட்டம். நான் அவரு மாதிரி 10 மடங்கு ஸ்பீடில் ஓடுவேன். ஆனா நம்ம ரத்தினம் இருக்கு பாருங்க, அது என்னை விட ரொம்ப ஸ்பீடு. ரொம்ப அலட்சியமாக என்னைத் தாண்டி வந்து என் குரல் வளையைக் கடித்து விடும். டமாலென்று தூக்கி வாரிப் போட்டு எழுந்து விடுவேன். இந்த நைரோபி குளிரிலும் வியர்த்து ஊற்றியிருக்கும். (உடனே ஒரு சேஃப்டிக்காக என் குரல் வளையைத் தடவிப் பார்த்துக் கொள்வேன்). இந்த மார்ச் மாதம் மதுரைக்குப் போயிருக்கும் போது, என் மைத்துனர் வீட்டில் இருக்கும் ரோஸி என்ற நாயை செல்லமாகத் தடவிக் கொடுக்கப் போய், அது என் புறங்கையை நன்றாக ஆழமாகக் கடித்து விட்டது. ஏனோ தெரியவில்லை, அதிலிருந்து நம்ம ரத்தினம் என் கனவில் வருவதேயில்லை.

கனவு நம்பர் 2. இது கொஞ்சம் கேவலமான கனவு. என்னை போலிஸ்காரர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறையிலடைப்பது போல ஒரு கனவு. இது ரொம்ப காலமாக வந்து கொண்டிருந்தது. கனவில் வரும் போலிஸ்காரர்கள் எல்லோரும் என்னை மாதிரியே ரொம்ப கலராக இருப்பதால், அவர்கள் இந்தியர்களா இல்லை ஆப்பிரிக்கர்களா என்று என்னால் கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அவர்கள் எந்த ஒரு முறையும் எனக்குக் காரணமே சொன்னதில்லையாதலால், எதற்காக என்னை கைது செய்கிறார்கள் என்றும் எனக்கு எப்போதும் புரிந்ததேயில்லை.

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு பிஸினஸ் மீட்டிங்கிற்காக மோலோ என்னும் ஊரிற்குச் செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய டிரைவருக்கு உடல் நலம் சரியில்லாதலால் காரை நானே ஓட்டிச் செல்லலாம் என்று முடிவெடுத்து ( எல்லாம் கெரகம்தான்...வேறென்ன ....), CD –யில் TMS – ன் சிவாஜி ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தேன். லிமுரு வியூ பாயிண்ட் முடிந்து கார் மலை இறக்கத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. நான் TMS – ன் வெண்கலக் குரலில் லயித்திருந்தலால், கார், ஸ்பீட் லிமிட்டான 100 – ஐத் தாண்டி 130 KM- இல் போய்க் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை.

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில், ஏதோ தாவூத் இப்ராஹிமைப் பிடிப்பது போல என்னை (ரேடார்) பொறி வைத்து ஒரு போலிஸ் கூட்டம் சுற்றி வளைத்துப் பிடித்து விட்டது ( இங்கு இப்படித்தான். மலை இறக்கத்தில் போகும்போதுதான் ஓவர் ஸ்பீடுக்காகப் பிடிப்பார்கள்). அதில் ஒரு போலிஸ் ஆஃபிஸர் நம்ம P.S. வீரப்பா போல ஒரு கர்ண கடூரமாக சிரிப்பு சிரித்துக் கொண்டே என்னை நெருங்கினார். முதலில் நான் அவரை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை ஏதோ காமெடிப் போலிஸ் போல நினைத்து ரொம்ப கேஷுவலாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை விடுவதாக இல்லை. ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே விஷயம் வேறு மாதிரிப் போய்க் கொண்டிருந்ததை உணர்ந்து, நம்ம இந்தியர்கள் ஸ்டைலில் பேசிப் பார்த்தேன். வந்திருந்தவர் Mr. கடமை கண்ணாயிரம் போலிருக்கு. “யேஏஏஏஏஏஏஏய்......யாரைப் பார்த்து ????? ” என்று நம்ம ஊர் தாதா மாதிரி ஒரு சவுண்டைக் கொடுத்தார். “சரி.....நடத்துங்கடா “ என்று மனதில் நினைத்துக் கொண்டே, சரி சார், கேஸ் புக் பண்ணுங்கள் என்றேன். நான் ஏதோ சார்ஜ் ஷீட்டைக் கையில் கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். பார்த்தால், போலிஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போய்  கேஸ் புக் பண்ணி, மாட்டுக் கொட்டடி மாதிரி ஒரு இடத்தில் என்னை மாதிரி ஒரு 10 பேரை அடைத்து வைத்து விட்டார்கள். கிட்டத்தட்ட ½ நாள் வைத்திருந்து விட்டு, கோர்ட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் “யுவர் ஆனர்” என்றெல்லாம் சொல்ல வைத்து ஒரு 3500 ஷில்லிங்  ஃபைன் கட்ட வைத்துத்தான் விட்டார்கள்.

சொல்லக் கூடாது – Touch Wood, அதற்குப் பிறகு எனக்கு அந்த போலிஸ் கனவு வருவது கிடையாது. 

மனோதத்துவ ஆராய்ச்சியாளர் சிக்மன் ஃப்ராய்ட், கனவைப் பற்றிச் சொல்லும் போது, உங்கள் ஆழ் மனதில் புதைந்திருக்கும் சில விஷயங்களே உங்களுக்கு கனவு வடிவத்தில் வெளி வருகின்றன என்கிறார். அப்படிப் பார்த்தால் நம்ம ரத்தினமும், இந்த ஊர் போலிஸ்காரர்களும் எப்படி என் ஆழ் மனதில் புகுந்தார்கள் என்று தெரியவில்லை.

இப்ப நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே, நான் எப்படி, “ கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ” என்று பாட முடியும்?

வெ.பாலமுரளி.

No comments:

Post a Comment