Sunday 6 October 2013


முள்றியின் டைரி 19 : வீழ்வேனென்று நினைத்தாயோ 



எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும்ங்க. மழைன்னா யாருக்குத்தான் பிடிக்காது ராசான்றீங்களா?...கரெக்ட். ஆனா, என்னோட 'பிடிக்கும்ங்க' வுக்குப் பின்னால  ஒரு  Flash Back  இருக்கே. இப்ப புரிஞ்சிருக்குமே, இந்த டைரி எதை பற்றின்னு.  Very Good.

தேவகோட்டை என்னும் ஊர், திருச்சி  - ராமேஸ்வரம் ஹைவேயில் உள்ளது. என்னுடைய பள்ளிப்பருவம் முழுவதும் கழிந்தது இந்த ஊரில்தான். அப்போது நாங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சீஸனுக்கு சீஸன் மாறும். கிட்டிப்புல், பம்பரம், கோலி, கம்பாத்தா (இது ஒரு சூப்பர் டூப்பர் விளையாட்டு . இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். சரியா? ), ஹாக்கி, பூப்பந்து, எறிபந்து , கால்பந்து, ட்ரையாங்கோ (  I Spy  மாதிரி. ஆனால் விதி முறைகள் வேறு). இந்தியனாகப் பிறந்து விட்டு கிரிக்கெட் விளையாவிட்டால் எப்படி....கிரிக்கெட்டில்தான் நாங்கள் வீதி வீட்டு வீதி , ஊர் விட்டு ஊர் மேட்ச் எல்லாம் நடத்தி வெற்றிக் கொடி நாட்டுவோம். அப்படி ஒரு முறை விளையாட்டாக  விளையாடப் போய் , அது ஒரு பெரிய மானப் பிரச்சினையாகப் போய் விட்டது.

அப்போது நான் 7 - வது படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் டவுனில், ஆர்ச்சுக்கு  அருகில் ஏதோ ஒரு வேலையாகப் போய்க் கொண்டிருந்தேன்.  "ஏ ...பாலமுரளி கோலமுரளி" என்று யாரோ என்னை அழைத்த மாதிரி இருந்தது. இவ்வளவு செல்லமாக யாரடா நம்மை  அழைப்பது என்று திரும்பினேன். பார்த்தால், இருதய ராஜ், ராமதுரை மற்றும் சரவணன் என்னை நோக்கி ஒடி வந்து கொண்டிருந்தார்கள். "என்னடா... நக்கலா" என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டே என் நடையை வேகமாக்கினேன். ( இந்த இருதய ராஜ், ராமதுரை, சரவணன்  மூவரும் எங்கள் ஊருக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ள ராம நகர் கிரிக்கெட் டீமின்  Players. ஒரு மாதத்திற்கு முன்னால்தான்  அவர்களை ஒரு மேட்சில் தோற்கடித்திருந்தோம். அத்தோடு வந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. நாங்கள் ஜெயிச்ச திமிரில் அவர்களை ஏகத்துக்கும்  நக்கல் பண்ணி அனுப்பி விட்டோம். இன்று நான் மட்டும் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டேன் ) .


என் நடையின் வேகத்தைக் கவனித்த பிசாசுகள், எங்கே,  விட்டால் நான் ஒடி விடுவேனோ என்ற பயத்தில் வேகமாக ஒடி வந்து என்னை வளைத்து விட்டார்கள் ( எப்படித்தான் Mind Reading பண்ணுவாய்ங்கெளோ ) . சரி ..சரண்டர் ஆகி விடலாமென்று, என்னடா வேணும் உங்களுக்கு என்றேன் - கொஞ்சம் உதார் டோனில் ( உள்ளே  இருகின்ற உதறலை வெளியே காண்பிக்காமலேயே ).டேய்..போன மேட்சில்தான் ஏதோ லக்குல ஜெயிச்சுட்டீங்க .....இன்னொரு மேட்ச் விளையாடலாம், வர்றீங்களாடா என்றான் இருதயராஜ். ( ப்பூ ...இவ்வளவுதானா ???? நான் கூட என்னவோ ஏதோன்னு நெனச்சுட்டேன். நம்ம வடிவேலு இருந்திருந்தா " நல்லா பீதியக் கெளப்புறாய்ங்கெடான்னு" சொல்லியிருப்பார்.  அதுசரி ..."நம்ம லக்குல ஜெயிச்சது இந்த Dogs - க்கு எப்படி தெரிஞ்சது" ன்னு எனக்கு ஒரே ஆச்சரியம்).

(வழக்கம்போல )  அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், என்ன லக்குலையா? என்னங்கடா ... ...நாங்க அடிச்ச நாலு ஆறெல்லாம் மறந்து போச்சா என்றேன் . நான் அதைச் சொன்னதும் அவெய்ங்கெ அப்படியே டெர்ரர் ஆயிடுவாய்ங்கென்லாம் நான் பேராசைப் படவில்லை. ஏதோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்ற மன நிலையில் மட்டுமே இருந்தேன். அவர்கள் அதை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டார்கள். " நாலு , ஆறா  ????? டேய் இவென் அடிக்கிற ஜோக்கைப் பாருங்கடா....அந்த கேவலமான  De Britto  பிட்சுல  யாரு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்டா " என்றான் சரவணன். " அப்புறம் ஏண்டா நீங்க ஜெயிக்கலை" என்றேன் ( புடிச்சமா ....பாயிண்டை...). " சரி விடுடா....இந்த வாரம் மேட்சுக்கு வர முடியுமா முடியாதா " என்றான் ராமதுரை. " மத்த பசங்களை கேட்டு விட்டுத்தான் சொல்ல முடியும் " என்றேன் ( நல்ல வேளை... நிலைமை  நான் நெனச்ச அளவுக்கு மோசமாக இல்லை)." சரி, வாங்கடா அவன்தான் பயப்படுறான்ல " என்றான் இருதய ராஜ். அவன் என்னை உசுப்பி விடுவது புரியாமலேயே நான் " பயமா, எனக்கா....???? " என்று லேசாக ஒரு ஆச்சரியம் காட்டி விட்டு " சரிடா....வர்ற ஞாயிறு  N.S.M.V.P.S Ground - இல் 9 மணிக்கு மேட்சுடா " என்று கமிட் பண்ணி விட்டேன். நகரத்தார் ஸ்ரீ மீனாட்சி வித்யாஸாலய பரிபாலன சங்கம் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற  N.S.M.V.P.S  எங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள பள்ளி. பெரிய  Ground . 

அவர்கள்  வந்த நோக்கம் நிறைவேறியதில் சந்தோஷமாகப் போய் விட்டார்கள். அவர்கள் போன பிறகுதான் " ஆகா ...கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டு விட்டோமோ" என்று எனக்குத்  தோன்றியது ( அப்பவே லேட் Thinking தான் ).  சரி வருவது வரட்டும் என்று நகர்ந்து விட்டேன். நீங்க சொன்னா நம்ப மாட்டிங்கங்க ...வீட்டுக்கு வந்ததும் " எங்கேடா ஊர் சுற்றி விட்டு வருகிறாய் " என்று எங்க அப்பா போட்ட சத்தத்தில்  நான் நெஜம்மாலுமே அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டேன். சமர்த்தாக படிக்க உட்கார்ந்து விட்டேன்.

அந்த பொல்லாத  Black Sunday"  யும் வந்தது. நான் குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டு எங்க அம்மாவிற்கு ஏதோ உதவி செய்து கொண்டிருந்தேன். வெளியே பார்த்தா " பாலமுரளி , கோலமுரளி , பயந்தாங்கொள்ளி, கொயந்தாங்கொள்ளி என்று ( செல்லமாகக் ) கத்திக் கொண்டிருந்தார்கள்". எனக்கு ஒரு நொடியில் பொறி தட்டியது. ஆ....ஹா.....இந்த ஏழரைகளை மேட்சுக்குக் கூப்பிட்டிருந்தோமெயென்று. தட தடவென்று ஒடி வந்தேன். ( நல்லவேளை வீட்டில் எங்க அப்பா  இல்லை. இருந்தால் பிறந்தநாள் கொண்டாடியிருப்பார் பிறந்தநாள் ).

ரொம்ப கேஷுவலாக .." ஏண்டா இங்க வந்து கத்துறீங்க ? " என்றேன் - எதுவுமே நடக்காதது போல. " ஏண்டா 9 மணிக்கு வரச் சொல்லி விட்டு , என்ன கிண்டலா ?" என்றான் இருதயராஜ். " 9 மணிக்கா ...???? என்ன வெளையாடுறீங்களா ....நான் 10 மணிக்குன்னுல சொல்லியிருந்தேன்..." என்றேன் ரொம்ப கூலாக ( முரளி ...உனக்குத்தான் பொய் சொல்லத் தெரியாதேடா.....எப்படி இது ?????) . அவர்களிடம் ஒரு சிறிய குழப்பம் தெரிந்தது. நம்மதான் ஒரு புள்ளி வெச்சா , கோடு போட்டு ரோடு போட்டு பஸ் விட்ருவோமே. நான் ரொம்ப  Confident - ஆக ஒரு லுக் விட்டேன். அதில் ஒரு கொழுந்து, " ஆமாண்டா அவன் 10 மணிக்குன்னுதான்  சொன்னான்" என்றது ( அவனுக்கு அவெய்ங்கெகிட்ட என்ன காட்டமோ ....) . தில்லானா மோகனாம்பா படத்தில் பத்மினி " நலந்தானா " என்று கண்ணாலேயே கேட்பாரே , அது போல நானும் அவனுக்கு கண்ணாலேயே " நன்றி நண்பா " என்றேன்.

 என்ன தோன்றியதோ, அவர்களும், " சரி ஒழுங்கா 10 மணிக்கு வந்து சேருங்க " , (இல்லாட்டா பிச்சுப்பிட்டோம் பிச்சு) என்று (சொல்லாமல்) சொல்லி விட்டுச்  சென்றார்கள். அவர்கள் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம் , எங்க அப்பா சைக்கிளை ( திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டு  குரங்குப் பெடலைப் போட்டுக் கொண்டு எங்க டீமில் உள்ள அனைவரின் வீடுகளுக்கும் சென்றேன். என் நேரம்....பாதிப் பேர் வர முடியாது என்று சொல்லி விட்டார்கள். " எங்க அப்பா விட மாட்டார்டா" " படிக்கணும்டா" " எங்க மாமா ஊரில் இருந்து வந்திருக்கார்டா" " எங்க அம்மாவோட சந்தைக்குப் போகணும்டா" என்று ஆளாளுக்கு ஒரு காரணம். தேறியவர்கள் மொத்தம் ஐந்தே ஐந்து பேர்தான். நல்லவேளை எங்க டீம் கேப்டன் ரவியும் அதில்  ஒருத்தன்.அவன்தான் அந்த ஐடியாவை முதலில் சொன்னான். " ஏண்டா... நம்ம மேட்சுகளில் எல்லாம் பந்து பொறுக்கிப் போடுவார்களே  சுட்டிக் குமார், குட்டை வெங்கடேசு,  முனீசு, மணி ..அவெய்ங்கெளெயும் சேர்த்துக்கிட்டா என்னடா ? " என்றான்.  " என்னடா சீரியஸாத்தான் சொல்றீயா ?" என்றேன். "ஆமாண்டா....வா கூப்பிடுவோம் " என்றான். மேற்சொன்ன பொடியனுகளுக்கு நம்பவே முடியலை. உற்சாகமாகக் கிளம்பினார்கள். 


இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று நாங்களும் ( சோர்வாக)  Ground -  க்குள் நுழைந்தோம். Ground - இல் நுழைந்ததுதான் தாமதம், ராமநகர் டீமின் அனைவரும் எங்களைப் பார்த்து கெக்கலி போட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் ( எங்களுக்கே சிரிப்பாகத்தான் இருந்தது). " டேய் ...முரளி...என்னடா பால்குடி மறக்காத பச்ச புள்ளைங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திருக்க ? நம்ம விளையாடப் போறது கார்க் பால்லடா , லப்பர் பால்ல இல்ல , தெரியும்ல ???" என்று கொக்கரித்தார்கள் ( எங்க ஊர்ல ரப்பரை லப்பர் என்றுதான் ஸ்டைலாக ( ????) அழைப்போம். லப்பர் பால், அழி லப்பர்.....). தெரியும்டா....சின்ன மொளகாய்க்குத் தான் காரம் ஜாஸ்தின்ற மாதிரி ஏதோ சொல்லிச் சமாளித்த ஞாபகம். 


விளையாட்டு ஆரம்பித்தது. டாஸில் அவர்கள் ஜெயிக்க, பேட்டிங் பண்ண முடிவு செய்தார்கள். அவர்கள் விளையாண்டு முடிக்கும்போது கிட்டத்தட்ட 75 ரன்கள் எடுத்திருந்தார்கள். எங்கள்  ஊரில் உள்ள  மர அறுவை மில்லில் செய்த அந்த கனமான பேட்டையும் , கல்லு போல இருக்கும் அந்த கார்க் Ball -  ஐயும் வைத்து 75 ரன்கள் எடுப்பது என்பது ஒரு பெரிய சாதனைதான். அந்த நிமிடமே எங்கள் தோல்வி எங்கள் கண்களுக்குத் மிகவும் தெளிவாகத்  தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போது எங்க  Turn. வழக்கமாக ஆடும் Opening Batsman  அன்று இல்லாதலால், ரவி என்னைப் போய் விளையாடச் சொன்னான். ( நீதான எல்லாத்துக்கும் காரணம். போடா ...போய் விளையாடு). போறேன் எனக்கென்ன பயமா.....என்னோட கெட்ட நேரத்துக்கு , நம்ம  Sri Lanka  மலிங்கா  போன்ற ஒரு கெரகம் கன்னாபின்னா என்று ஒரு  Fast Bowl  போட தலைவன் முதல் பந்திலேயே அவுட். எங்கள் டீமில் நான் ஒன்றும்  Star Palyer  எல்லாம் கிடையாது. இருந்தாலும் எங்கள் டீமில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். சில சமயம், நம் ஒட்டு மொத்த இந்தியாவே சச்சின் டெண்டுல்கரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது , அவர் போன வேகத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் திரும்பிவருவாரே, அப்போது நம் மக்களோட முகத்தில் தெரியும் அதே அதிர்ச்சி, அதே இயலாமை, அதே ஏமாற்றம், எங்கள் டீமிலும் ( என்ன்ன ....சச்சினா ??????? டேய் ...வாணாம்........).

பெவிலியனுக்குத் திரும்பிய என்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. " நான் ரெடியாவதற்குள் போட்டுட்டாய்ங்கெடா" என்றேன் , ஏதாவது பேச வேண்டுமேயென்று. அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. "ம்க்கும்" என்று மட்டும் ஒரு சப்தம் வந்தது, யாரிடமிருந்தோ. 

வேறென்ன...ஒரு 25 ரன் எடுப்பதற்குள்  5 விக்கெட் போயிருந்தன.  எல்லா மக்களையும் அழைத்து ஒரு சின்ன டிஸ்கஷன் பண்ணினோம்....அதைப் பார்த்த ராமநகர் டீம் லேசாகக் கலவரமானார்கள் . எங்கள்  டிஸ்கஷனில் " தோல்வியை ஒத்துக் கொள்வோம்டா "    என்ற பேச்சே பிரதானமாக இருந்தது. எனக்கும் ரவிக்கும் மட்டும் அது மானப் பிரச்சினை. வேண்டாம்டா விளையாடிப் பார்ப்போம் என்றோம். எங்கள் டிஸ்கஷன் நீள்வதைப் பார்த்த இருதயராஜூம் , சரவணனும் , எங்கே,  விட்டால் வெறியோட ( ???) வந்து விளாசித் தள்ளி ஜெயித்து விடுவார்களோ ( ???) என்று பயந்து " என்னடா வரப் போறிங்களா இல்லையாடா....மழை வர்ற மாதிரி இருக்கு " என்று எங்களை விரட்டத் தொடங்கினான். 


அடுத்து  ரவி  களமிறங்கினான். இருதயராஜின் வாய் முகூர்த்தம், ரவி இரண்டு ரன் எடுப்பதற்குள் லேசாகத் தூறல் போட ஆரம்பித்தது.  அதைப் பற்றி நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கவலைப் படவில்லை. மழையே வந்தாலும் ஒரு 5 நிமிடத்தில் எங்கள் வீட்டுக்குப் போய் விட முடியும். ஆனால் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். தேவகோட்டையில் இருந்து ராமநகர் போகும் வழி ஒரு காட்டுப்பாதை. சொல்லிக் கொள்ளும்படி ஒரு கட்டிடமும் கிடையாது. ஒரே மரங்களும் பொட்டல் காடும்தான். மழை நேரத்தில், அதில் குரங்குப் பெடலும், டபுள் பெடலும் போட்டு வீடு போய்ச் சேருவதற்குள் விடிந்து விடும். ராமதுரைதான் முதலில் சமாதானத்திற்கு வந்தது. முடிச்சுக்குவோம்டா. விளையாட்டு ட்ரா என்றான். என்ன்ன்ன்னது ட்ராவா? சான்ஸே இல்லை. இனிமேதான் எங்க மெயினான ப்ளேயேர்ஸ் எல்லாம் விளையாடணும் என்றேன் ( யாரு.....சுட்டிக் குமாரு, குட்டை வெங்கடேசு, மணி மற்றும் முனீசு). அவர்கள் ரொம்ப இறங்கி வந்து, டேய் டேய்...மழை வருதுடா ...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கடா என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். நான் ஒரே பிடியாக மறுத்து விட்டேன். அப்போதுதான் நான் தற்செயலாக எங்க பசங்களைப் பார்க்க, அவர்கள் அனைவரும் என்னை ஒரு கொலை வெறியோடு வெறித்துக் கொண்டிருந்தார்கள். மவனே...அவர்கள் மட்டும் ஒத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடட்டும் , நீ செத்தடா என்று கண்ணாலேயே கவிதை பாடிக் கொண்டிருந்தார்கள்.

 நான் உடனே சுதாரித்துக் கொண்டேன். சரிடா...நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சுறதால கேமை முடிச்சுக்குவோம். ஆனால், திரும்ப திரும்ப நீங்க வந்து வம்பு பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் என்றேன் – என்னோட சேஃப்டிக்கு. நாங்க வேணா சத்தியம் பண்ணித் தாறோம் என்றார்கள். எனக்கு அந்த Proposal  பிடித்திருந்தது. World Cup, 20 -20 மேட்சுகளெல்லாம் முடிந்தவுடன் இரண்டு டீம்களும் எதிர் எதிர் திசைகளில் வந்து கை குலுக்கிக் கொண்டே செல்வார்களே , அதே போல, ஆனால் இங்கு ராமநகர் டீமில் ஒவ்வொருவரும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் சத்தியம் பண்ணிக் கொண்டு சென்றார்கள். சுட்டிக் குமார்தான் அந்த பிட்டைப் போட்டான், அண்ணே...சத்தியம் பண்ணியிருக்கீங்க. நீங்க மட்டும் மாறுனீங்க, நாங்க காசு வெட்டிப் போட்டுடுவோம் பார்த்துக்குங்க என்றான் ( எனக்கு, அன்றும் சரி இன்றும் சரி, காசு வெட்டிப் போடுவது என்றால் என்ன என்றே புரிந்ததில்லை). அப்படி எல்லாம் பண்ண மாட்டோம்டா என்று சொல்லி விட்டு அவர்கள் ஓடியே போய் விட்டார்கள் ( அவர்கள் அவசரம் அவர்களுக்கு). பின்னால் அவர்கள் எங்கள் வழியில் குறுக்கிடவேயில்லை.

பந்து பொறுக்கிப் போடும் பொடியனுங்களுக்குத்தான் ஒரே வருத்தம் – ஒரு நல்ல சான்ஸ் போயிடுச்சேன்னு. அவர்களை ரொம்ப புலம்ப விடாமல் கூட்டி வந்து விட்டோம்.

இப்பப் புரியுதாங்க எனக்கு மழைன்னா ஏன் ரொம்பப் புடிக்குதுன்னு.


வெ. பாலமுரளி.


பி.கு: இந்த டைரிக்கு  “வீழ்வேனென்று நினைத்தாயோ” தலைப்பை எடுத்ததற்கு பாரதியார் மன்னிக்க வேண்டும். 

No comments:

Post a Comment