Saturday 2 November 2013

முள்றியின் டைரி 21: பீலிங்க்ஸ் - Part 1 - நானும் எங்க பாட்டியும்



October 31, 2013 at 4:53pm
நான் சின்ன வயதில் ரொம்ப ரிசர்வ்ட் டைப்புங்க.ரொம்பவும் பேச மாட்டேன். அதிர்ந்தும் பேச மாட்டேன் ( ம்க்கும் ...ஏதாவது நம்புகிற மாதிரி சொல்லு ராசா).  A Boy of few words.  ஏதாவது  ஓரிரு வார்த்தை பேசினாலும், வார்த்தைகள்  நறுக்குத் தெரிந்தாற்போல் எகத்தாளமாக வந்து விழும். இது எப்படி, யாரிடமிருந்து எனக்கு வந்தது என்று நானும் யோசித்து யோசித்துப் பார்த்து விடை தெரியாமல் விட்டு விட்டேன் ( ஓஓஓ.... Manufacturing Defect - ன்னு சொல்லு).


அப்போது நான் ரெண்டாப்போ மூணாப்போ படிச்சுக்கிட்டிருந்தேன். எங்க பாட்டி ஊரிலிருந்து வந்திருந்தார்கள். தேவகோட்டையில்  எங்கள் வீடு 'பாரதி நிலையம்', பெரிய பங்களா இல்லாவிட்டாலும், நல்ல வசதியான வீடு (' பாரதி நிலையம்' - இந்தப் பெயரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் பின்னால் சொல்கிறேன்). எங்கள் அப்பாவிற்கு தோட்டக்கலையில் நல்ல ஈடுபாடு என்பதால், வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட மரங்கள் வைத்திருந்தார் . ஏழெட்டு தென்னை மரங்கள், 2 மாமரங்கள், ஒரு கொய்யா, ஒரு பப்பாளி, ஒரு கருவேப்பிலை மரம், ஒரு எலுமிச்சை மரம், பத்து பதினைந்து வாழைமரங்கள்  என்று ஒரு தோப்பே உண்டு, வீட்டைச்சுற்றி.


வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு சின்ன கால்வாய் உண்டு. மரங்களுக்குப் போனது போக,  மீதி கழிவு நீர் அந்தக் கால்வாய் வழியாக நகராட்சியின் Sewage சிஸ்டத்தோடு கலந்து விடும். என்னதான் கழிவு நீராக  இருந்தாலும்,  எந்தக் காரணத்தைக் கொண்டும் அதில் உப்பு நீரைக் கலக்கக் கூடாது என்பது எங்க அப்பாவின் கண்டிப்பான உத்தரவு.


ரூல்ஸ் போடுவதே அதை மீறுவதற்குத்தானே. ஒரு நாள் கால்வாயின் ஓரத்தில் நின்று கொண்டு இயற்கையின் முதல் அழைப்பை ஏற்று மரியாதை செய்து கொண்டிருந்தேன் ( என்னவோ காதலுக்கு மரியாதை செய்ற மாதிரி சொல்ற ?????). அப்போது,எங்கிருந்தோ எங்க பாட்டியின் குரல் கேட்டது, "அடேய் , பேதியில போறவனே ....நின்னுக்கிட்டுப்  போகாதடா" என்று. நான் சுத்தி முத்திப் பார்த்தேன். கண்ணுக்குத் தெரிந்த வரை எங்க பாட்டியைக் காணவில்லை. சரி, பாட்டி ஏதோ Assumption - இல் அடிக்குது போல என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு " ஏன்......போனா என்ன ? " என்று நக்கலாக ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு, எதற்கும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் கடமையைத் தொடர்ந்தேன். எங்க பாட்டியும் விடாமல்,  " அட கருமாந்திரம் புடிச்சவனே, நின்னுக்கிட்டுப் போனா பிசாசு வந்து குடிச்சிரும்டா பிசாசு வந்து குடிச்சிரும் " என்றது கடமையாக. நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், " குடிச்சிட்டுப் போகட்டுமே பாட்டி. வேஸ்ட்டாத்தானே போகுது" என்றேன்.  


சொன்னா நம்ப மாட்டீங்கங்க . நம்ம சூப்பர் மேன் ஸ்டைலுல எங்க பாட்டி, எங்க இருந்தோ பாய்ஞ்சு வந்து என் முதுகுல ஒரு அப்பு அப்புச்சு பாருங்க, எனக்குப்  பொறி கலங்கி விட்டது.


அந்த சம்பவத்திற்குப்பிறகு நான் எடுத்த உறுதிமொழியை இங்கு சொல்ல வேண்டாமென்று பார்க்கிறேன்.


வெ. பாலமுரளி.

No comments:

Post a Comment