முள்றியின் டைரி 18:
என் ICU அனுபவங்கள்:
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வெச்சார் வள்ளுவரு சரிங்க...
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு....
என்ற கண்ணதாசனின் பாட்டு ஒன்று உண்டு. ரொம்ப கரெக்ட். நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, உட்கார்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியே சிரித்தாலும், நம்மை வேறு ஒரு லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள். ஆனால், அதேசமயம், அந்தப் பிரச்சினை முடிந்து கொஞ்ச நாள் கழித்து அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தால், விழுந்து விழுந்து சிரிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு சின்ன புன்னகையாவது நம் முகத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.
2007 – எனக்கு ஒரு கேவலமான வருடம். ஒரு நாள், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி. நாம் இன்று ஏதாவது வாய்வு ஏற்படுத்தும் சாப்பாடு ஏதேனும் சாப்பிட்டோமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். வாழைக்காய் பொறியல் சாப்பிட்ட ஞாபகம் வந்தவுடன் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தேன் ( நான்தான் முன்னயே சொல்லியிருக்கேன்ல, நாங்கல்லாம் ரொம்ப ப்ரைட்டுன்னு). ஆனால் வலி வேறு மாதிரி இருந்தது. நண்பர்கள் சிலரின் யோசனையால் நேரே Nairobi Hospital சென்றேன். நம்ம ஊர் Apollo Hospital மாதிரி இங்கு Nairobi Hospital. இந்த நாட்டு President, Vice President, Prime Minister, பாலமுரளி போன்ற பெரிய மக்கள் போகின்ற Hospital ( ஹி…ஹி... ஹி...ச்சும்மா டமாசு…..).
நான் போய்ப் பார்த்த டாக்டர், பரேஷ் பட்டேல் என்னும் ஒரு இந்திய வம்சாவளி டாக்டர். ஏகப்பட்ட டெஸ்ட்டுகள் எடுத்து விட்டு, உங்களுக்கு கண்டிப்பாக இதயத்தில் அடைப்பு உள்ளது. அதன் Severity தெரியாதலால் உடனே ஆஞ்சியோ எடுத்துப் பார்த்து விட வேண்டும் என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வைத்து விட்டார் ( நான் ரொம்ப ப்ரைட்டுன்னு முன்னால் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்). மறுநாள் காலை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிப் போய் விட்டார்கள்.
சும்மா சொல்லக் கூடாது, ஆபரேஷன் தியேட்டர், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ரொம்ப கலை ரசனையுடைய ஒரு பணக்காரரின் Reading Room போல அமர்க்களமாக இருந்தது ( Don’t judge a book by its cover என்று என் பெண் அடிக்கடி சொல்லும் பழமொழி ஏனோ அன்று எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை). அசந்து விட்டேன் ( நான் ஏன் இவ்வளவு ரசித்து சொல்கிறேன் என்பது பின்னால் உங்களுக்குப் புரியும்). நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று Procedure – ஐ விளக்கினார்கள் ( இங்கு அது ஒரு பொதுவான Practice . சில சமயம் கொஞ்சம் டூ மச்சாக விளக்கி நம்மை பயமுறுத்தியும் விடுவார்கள்).
கொஞ்ச நேரத்தில் தொடையில் ஒரு ட்யூபை சொருகி ஒரு டையை செலுத்தினார்கள். அந்த ‘டை’ இதயத்தில் உள்ள அடைப்புகளை எல்லாம் தனிப்படுத்திக் காட்டிவிடும் என்று எனக்குச் சொல்லியிருந்தார். ஏனோ என் கேஸில் அது வேலை செய்யவில்லை. அவருக்கோ பயங்கர ஷாக். உடனே டாக்டர். கரியூக்கி என்பவருக்கு ஃபோன் பண்ணி அழைத்தார். டாக்டர் கரியூக்கி ரொம்ப சீனியர் போலிருக்கு. வந்த ஒரிரு நிமிடத்திலேயே விஷயம் என்ன என்று கண்டு பிடித்து விட்டார். இது Blood Clot. அதை க்ளியர் பண்ணாமல் Blockage – ஐப் பார்க்க முடியாது என்று ஒரு புத்தகத்தை எடுத்து அவருக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டார் ( Yes…எனக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிய போது ஏற்பட்ட அதே அனுபவம்). இது போல விஷயங்கள் எனக்கு மட்டும்தான் நடக்குமா, இல்லை ரொம்பப் பேருக்கு நடக்குமா என்ற குழப்பத்தில் நான் கண்ணை மூடிப் படுத்திருந்தேன். அதைக் கரைக்காமல் ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் “ பேக் அப்” ( ???) என்று சொல்லி என்னை ICU – விற்கு அனுப்பி விட்டார்கள்.
அதைக் கரைப்பதற்காக மருந்து கொடுத்து விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக் கொண்டு போய் Blood Clot கரைந்து விட்டதா என்று செக் பண்ணினார்கள். கரையவில்லை என்றதும் திரும்ப ICU –விற்குக் கூட்டி வந்து விடுவார்கள். ஒவ்வொரு முறையும் அதே Procedures…எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது....சில சமயம் நானே கூட அவர்களை ஞாபகப் படுத்தியதும் உண்டு – என்ன இன்னைக்கு ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போகவில்லையா என்று. கிட்டத்தட்ட 10, 15 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கே இந்த நாடகம் போரடித்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக Ballooning என்னும் ஒரு ப்ராசஸ் மட்டும் பண்ணி விட்டு என்னை Discharge செய்து விட்டார்கள். மறுபடியும் வலி வந்தால் உடனே வந்து விடுமாறும், இன்னும் ஒரு வாரத்திற்கு எங்கேயும் ட்ராவல் பண்ண வேண்டாமென்றும் அட்வைஸ். நான் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.
உடனே ஆளாளுக்கு “ நான்தான் அப்பவே சொன்னேன்ல இந்தியா போகச் சொல்லி” என்று அட்வைஸ் மழை. நாமாகப் போகாவிட்டால் இவெய்ங்கெளே நம்மை பார்சல் பண்ணி அனுப்பி விட்ருவாய்ங்கென்னு நானும் உடனே கிளம்பி விட்டேன். இந்தியாவுக்குப் போய்ப் பார்த்தாத்தான் தெரியுது, நைரோபியே தேவலை என்று. அவ்வளவு கேலிக் கூத்துகள்.
இந்தியாவில் நான் போய் இறங்கிய இடம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை. அந்தக் காலத்தில் வாரச் சந்தை என்று ஒன்று நடக்கும். இப்ப உள்ள Generation அதையெல்லாம் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி யாரேனும் பார்த்ததில்லை என்று வருத்தப் பட்டால், உடனே மதுரை மீனாட்சி மிஷனைப் போய் பாருங்கள். வாரச் சந்தை என்றால் என்ன என்று புரிந்து விடும். அப்புறம் எதுக்கு ராசா அங்க போன என்கிறீர்களா? சில தவறான கணக்குகள்தான்....வேறென்ன. வீட்டிற்குப் பக்கத்தில் உள்ளது. அங்கு உள்ள Senior Cardiologist எங்கள் உறவினர். So, Special Treatment கிடைக்குமே என்ற ஒரு நப்பாசை.
அவர், நான் நைரோபியிலிருந்து கொண்டு போன மெடிக்கல் ரிப்போர்ட்டை எல்லாம் பார்த்து விட்டு, உடனே ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போய் விட்டார். நான் இந்த இடத்தில் அந்த ஆபரேஷன் தியேட்டரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சென்னையில் ஒரு தெரு முழுக்கக் காயலான் கடைகளாகவே இருக்குமே – அது என்ன பெயர், கண்ணம்மா பேட்டையா சௌகார்பேட்டையா? எனக்கு அது போல ஒரு தெருவுக்குள் நுழைந்த மாதிரியே ஒரு ஃபீலிங். ஏதோ, முரளி வர்றாரு, முரளி வர்றாரு இடத்தைக் கொஞ்சம் க்ளீன் பண்ணுங்க என்று யாரோ
சொன்னாற்போல கொஞ்சூண்டு இடத்தை மட்டும் ஒதுக்கி ஒரு ஆபரேஷன் டேபிளைப் போட்டு வைத்திருந்தார்கள். இந்த ( அவ) லட்சணத்தில் ஏ.ஸி. வேற. எனக்கு லேசாக உதறல் எடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கோழி குருடாயிருந்தா என்ன, நமக்கு குழம்புதானே முக்கியம் என்று என்ன நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நைரோபியில் ஆஸ்பத்திரி சூப்பர், ஆனால் வைத்தியமோ.... ???? நம்ம இந்தியாவில் எதிர்மறை போலிருக்கு என்று நினைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன்.
வழக்கமான ( ????) Procedures. டையை செலுத்திய சில வினாடிக்குள்ளாகவே, இதயத்தில் உள்ள அடைப்புகள் எல்லாம் “உள்ளங்கை நெல்லிக்கனி” போல தெள்ளந் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது ( கொஞ்சம் டூ மச் செந்தமிழோ? ). நம்ம தமிழ்ப் படங்களில் எல்லாம் “ Congratulations !! நீங்க அப்பாவாயிட்டீங்க “ என்று ஒரு டாக்டர் சந்தோஷமாகச் சொல்லுவாரே, கிட்டத்தட்ட அதே டோனில், “ Very Good. உங்களுக்கு 4 Blockages இருக்கு “ என்றார் (ஏண்டா Blockages – க்கெல்லாம் இந்த டோன் கொஞ்சம் ஓவர்னு உங்களுக்கே தெரியலை? ). சரி டாக்டர்.... என்ன செய்யலாம் என்றேன் ( கேக் வெட்டச் சொல்லுவாரோ?). நான் என்னவோ ரொம்ப கவலைப்படுகிற மாதிரி, “ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைங்க முரளி. ஸ்டெண்ட் வைத்து சரி பண்ணி விடலாம்” என்றார். இந்த இடத்தில்தாங்க என் ரியல் கிரகம் வேலை செய்ய ஆராம்பித்தது.
பக்கத்தில் உள்ள ஒரு நர்ஸை அழைத்து, “ கௌரி, நம்பர் 2, 5, 6 , 7 ஸ்டெண்ட் எடுத்திட்டு வாம்மா” என்றார். அந்த கௌரியோ நகர்வது போலத் தெரியவில்லை. அவர் திரும்ப ஒரு முறை “ போம்மா போய் எடுத்திடு வா” என்றார், இந்த முறை கொஞ்சம் சூடாக. அந்த கௌரி ரொம்ப மெதுவாக “ ஸ்டெண்ட் டெலிவரி எடுக்கப் போன நம்ம தாமு இன்னும் வரலை சார்” என்றது. என்ன தா.......மு.....வரலையா ? என்றார் அதிர்ச்சியாக – நான் அருகில் இருப்பதை மறந்து போய். ஃபோனைக் கொண்டு வா என்றார். திடீரென்று என்ன நினைத்தாரோ, இந்தா வந்துர்றேன் முரளி என்று சொல்லி விட்டு, பக்கத்து அறைக்குச் சென்றார். அவர் அங்கிருந்து பேசுவது எனக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது ( இதுக்கு ஒழுங்கா ஆபரேஷன் தியேட்டரில் இருந்தே பேசியிருக்கலாம்). ஃபோனில் தாமு என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால், நம்ம S.Ve. சேகர் நாடகத்தில் வருவது போல மறு பக்கத்தில் பேசுவதை இவர் திரும்ப ஒரு முறை சொல்லி சரி பார்த்து விட்டுத் திட்டிக் கொண்டிருந்தார். “ எங்கடா இருக்க?” “ என்ன டீக்கடையில இருக்கியா ?” “ ஏண்டா பன்னு திண்ணு காப்பி குடிக்கிற நேரமாடா இது” “ சரி, வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்?” “ என்ன அரை மணி நேரமாகுமா?” “ ஏண்டா , இங்க நான் ஒரு உயிரோட போராடிக்கிட்டிருக்கேன், உனக்கு அங்கே பன்னும் காப்பியும் கேட்குதா ( ???????) ?” . எனக்கு அந்த ஏ.ஸி.யிலும் வியர்த்து ஊற்றுவதைத் தடுக்க முடியவில்லை. அவர் அத்தோடு நிற்கவில்லை. “ என் பேஷண்டுக்கு மட்டும் ஏதாவது ஓண்ணு ஆச்சு, மவனே உன்னை நடு ரோட்டுல வச்சு வெட்டியே கொன்னுடுவேண்டா “ என்றார் உச்சஸ்தாயில். எனக்கு வியர்வையோடு கை காலும் லேசாக நடுங்க ஆரம்பித்தது. உடனே என் அறைக்குள் வந்தவர் “ இது வேற ஒரு பிரச்சினைங்க முரளி” என்றார் ( கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்கெ). பிறகு அவரே நேராக ஸ்டோருக்குப் போய் ஸ்டாக்கில் இருக்கிற ஸ்டெண்டை எடுத்து வந்தார் ( 7 ம் நம்பர் இல்லாவிட்டால் என்ன, அதான் நம்மகிட்ட 10 – ம் நம்பர் ஸ்டாக்ல இருக்குல்ல ...). அந்தக் குளறுபடியில, ½ மணியில முடிகிற ஆப்ரேஷன் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது. ஒரு வழியாக என்னை CICU – வில் கொண்டு போய் வைத்தார்கள். என்னைத் தவிர அங்கு இருந்தவர்கள் எல்லோருமே ரொம்ப வயதானவர்கள். கிட்டத்தட்ட எல்லோருக்குமே பை பாஸ் பண்ணியிருந்தார்கள். கிராமத்தில் இருந்து வந்திருப்பார்கள் போலிருக்கு. ஆனால், சர்வ சாதாரணமாக லோ ஷூகர், ஹை ஷுகர், LDL, HDL என்று பேசிக் கொண்டிருந்தார்கள் ( இப்பல்லாம் கிராமங்களில் ரொம்ப முன்னேற்றம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்).
எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலித்ததா இல்லை ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ட்ராமாவினால் நெஞ்சு வலி போன்ற ஒரு பிரமையா என்று இனம் பிரிக்க முடியவில்லை. ஆனால் அந்த இரவு முழுவதும் ஒரு மூச்சுத் திணறலும், வலியும் இருந்து கொண்டே இருந்தன. உடனே டாக்டரைப் பார்த்து என் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். ஏனோ அங்கிருந்த Sisters யாரும் அந்த நேரத்தில் டாக்டரை அழைக்க மறுத்து விட்டார்கள் ( திட்டுவார் சார்...). காலில் ஒரு பெரிய Bandage போட்டிருந்தலால் , காலை கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது என்று வேறு கண்டிசனாகச் சொல்லி விட்டார்கள். அதுதான் உள்ளதிலேயே ரொம்பக் கொடுமையாக இருந்தது. இரவு முழுவதும் அந்த அவஸ்தையில் இருந்து விட்டு, நான் எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவியல்லை. கண் விழித்துப் பார்க்கும்போது காலை 7 மணியாகி இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து விடுவார் என்று ராஜாவிற்கு பராக் சொல்வது போலச் சொன்னார்கள். என்னால் அவரைப் பார்க்கப் போகும் பரபரப்பை ( ?????) கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.
எங்க மதுரைப் பக்கம், டாக்டர்களும் நோயாளிகளும் பேசிக் கொள்வதைப் பார்க்க வேண்டும். ஏதோ குடும்ப மெம்பர்கள் பேசிக்கொள்வது போலவே ரொம்ப தமாஷா இருக்கும். நான் இதற்கு முன்பே சில முறை அதைப் பார்த்திருந்தாலும், இந்த முறைதான் அதை பொறுமையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
டாக்டர் வந்ததும் நேரே ஒரு முதியவரிடம் போனார். “ என்ன பெரிசு...எப்படி இருக்கு” என்றார் பொத்தாம் பொதுவாக. அதற்கு அந்தப் பெரியவர் “ எதக் கேக்குற ?” என்றார் கொஞ்சம் விட்டேத்தியாக. டாக்டருக்கு சுர்ரென்று ஏறி விட்டது “ ம்ம்ம்ம்ம்...உங்கிட்ட நான் என்ன பொண்ணா கேட்கப் போறேன். நேத்து பைபாஸ் பண்ணோம்ல. அதுதான் எப்படி இருக்கு என்று கேட்கிறேன்” என்றார். அந்த இடம் லேசாகச் சூடேறியது. பெரியவர் ரொம்ப அஸால்ட்டாக “ ஒரு வித்தியாசமும் இல்ல. அப்படியேதான் இருக்கு” என்றார். டாக்டருக்கு ரொம்ப கோபமாகி விட்டது” ஏன் பெரிசு...விழுந்து விழுந்து ( ??????) பை பாஸ் பண்ணியிருக்கோம் கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியலேன்ற? “ என்று ஒரு எரிச்சலோடு சொல்லி விட்டு, அடுத்து ஒரு பாட்டியிடம் சென்றார். “ என்ன பாட்டி, எப்படி இருக்கீங்க ?” என்றார். அந்தப் பாட்டி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ சொன்னா நம்ப மாட்ட, அந்தப் பெரியவருக்கு மாதிரிதான், எனக்கும் ஒரு வித்தியாசமும் தெரியல” என்றது. அவரு ரொம்ப டென்ஷனாகிட்டாருங்க. “ என்ன எல்லோரும் சொல்லி வச்சுட்டு வந்திருக்கீங்களா” என்று எகிறினார். சொல்லி விட்டு அவரும் விடல. “ அது சரி, இப்ப இருக்கிற உன் உடல் நிலைக்கு 10 மார்க் போடச் சொன்னா எத்தனை மார்க் போடுவ பாட்டி என்றார் ?”. நான் நோயாளிகளிடம் இந்த மாதிரி யாரும் ஒரு Assessment Report கேட்டுப் பார்த்ததில்லை. So, நான் என் வலியை மறந்து அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாட்டி இந்தக் கேள்வியைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்கும் போல. உடனே, “ 8 மார்க் போடுவேன்” என்றது. டாக்டரோடு சேர்ந்து எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் அசந்து விட்டார். “ அடேங்கப்பா 80%. இதுக்கு மேல என்ன வேணும்” என்று கேஷுவலாகச் சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.
அந்த நேரம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் வந்தது ( ICU – வில் மொபைல் ஃபோன், லேப்டாப் எல்லாம் அனுமதியில்லை என்று அங்கிருந்த போர்டு, நோயாளிகளுக்கு மட்டும்தான் போலிருக்கு). தான் ICU – வில் இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், ரொம்ப சத்தமாக பேச ஆரம்பித்தார். “ ம்ம்ம்.....சொல்லுங்க சிவா” என்றார். “ என்ன ..மல்ட்டி விட்டமினா?” “ COBADEX போடுங்க... நல்லது “ என்றார். அவர் சொன்னது சிவாவுக்குக் கேட்கலை போலிருக்கு. COBADEX –ஐ இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார். அப்படியும் சிவாவுக்கு சரியாகக் கேட்கலை. “ C for Cake, O for Orange, B for Ball, A for Africa, D for Donkey E for Elephant, X for X Ray” என்றார்.
சிவா, மாத்திரை பெயர் ரொம்ப நீளமாக இருக்கே என்று சொல்லியிருக்க வேண்டும். “ என்ன மாத்திரை பேர் நீளமா ???? என்னய்யா எழுதினே” என்றார் பயங்கர கோபத்துடன். “ என்ன Cake orange Ball Africa…வா ??? மூதேவி மூதேவி....நான் சொன்ன வார்த்தையில் எல்லாம் இருக்க முதல் எழுத்தை மட்டும் எழுதச் சொன்னேன்யா. நீயெல்லாம் என்னத்தைய்யா படிச்சிருக்க. வைய்யா ஃபோனை” என்று Literally கத்தினார் உச்சஸ்தாயில். “ இன்னிக்கு என்னமோ தெரியல... எல்லாம் ஒரே கெரகமா வந்திருக்கு” என்று புலம்பிக் கொண்டே என்னிடம் வந்தார். “ சொல்லுங்க முரளி உங்களுக்கு எப்படியிருக்கு” என்றார் ஒரு விரக்தியும் எரிச்சலும் கலந்த டோனில்.
நான் இங்க வர்றதுக்கு முதல் நாள் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன் சார் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு “ சூப்பர் சார். செம Improvement” என்றேன். (அவருக்கு இருந்த கடுப்பில், நான் மட்டும் உண்மையைச் சொல்லியிருந்தால், பளார் என்று ஒரு அறை விட்டிருப்பார் ). அவருக்கு உடனே வாயெல்லாம் பல்.
“ I Know …I know…நான்தான் சொன்னேன்ல, ஸ்டெண்ட் வச்சா எல்லாம் சரியாயிரும்னு. இன்னும் இரண்டு நாளில் Discharge ஆயிடலாம். ஆனால் ஒரு 2 வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு , பிறகு கென்யா செல்லுங்கள், சரியா ?” என்றார். சரி சார்...என்று பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டினேன்.
இனி எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போவது என்று யோசித்துக் கொண்டே மீனாட்சி மிஷனை விட்டு Discharge ஆனேன்.
வெ.பாலமுரளி.
பி.கு. " இவனுக்கு ஜாதகத்தில்தான் ஏதோ கோளாறு" என்று நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது.