Thursday 1 December 2011

முள்றியின் டைரி - 11 ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளயோ……

எனக்கு கடந்த 2 மாதமாக ஒரு வினோதமான உபாதைங்க. கண்ணு பயங்கரமாக பொங்கி பொங்கிக் கண்ணீராகக் கொட்டித்தள்ளுகிறது.உடம்பு ஹீட்டாகி இருக்கிறதுக்கும் சான்ஸ் இல்லை. ஏனென்றால், நான் குளிர்காலத்தில் கூட தினமும் குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கும் கோஷ்டி….வேற எப்படி??? தெரியலை.

ஆஃபிஸில் எனக்குத் தனி கேபின். So, பகல் நேரத்தில் மனசு விட்டு அழுது கொட்டி ஈஸியாக சமாளித்து விடுவேன். எப்போ பிரச்சினைன்னு கேட்டிங்கன்னா - Evening வாக்கிங் போகும்போதுதான். மாலை 6 மணிக்கு Ramco Court- இல் உள்ள அனைத்துத் தாய்குலங்களும் கம்பாக வாக்கிங் போவார்கள் ( இப்படி மாங்கு மாங்குனு நடக்குறதுக்குப் பதிலாக பகலில் வேலைக்காரிகளை நிறுத்தி விட்டு ஒழுங்காக வீட்டில் வேலையைப் பார்க்கலாம்ல? சொல்லிட்டு யாரு தப்பிக்கிறது?).

நமக்கோ Prestige Issue. அவர்களுக்கு முன்னால எப்படி கண்ணீரும் கம்பலையுமாக நடப்பது….ராமன் கண் பார்க்க சீதையோ மண் பார்த்தாள்னு கம்பர் சொன்னது போல நான் பாட்டுக்கு ஒரு MP3 – யைக் காதில் மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் கையில் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கொண்டு அவர்களை Cross செய்து விடுவேன் ( அது சரி…இதுக்கு ஏண்டா கம்பனை இழுக்குற? உனக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியல?). அவர்கள் யாரும் பார்க்காத சமயத்தில் கர்ச்சீப்பை வைத்து கண்ணைத் துடைத்து விட்டு வாக்கிங்கை Continue பண்ணுவது வழக்கமாகி விட்டது (சில சமயம் இரண்டு கர்ச்சீப் வைத்துக் கொள்வதும் உண்டு. அவ்வளவு கண்ணீருங்க).

என்னுடைய இந்த சங்கடத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை (ம்க்கும்…நேற்று வரை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்).நேற்று சாயாந்திரம் பாருங்க, வழக்கம் போல என்னுடைய நாடகத்தை நடத்திக் கொண்டு நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். MP3 வேறு வேலை செய்யவில்லை. ஒரு வயசான தமிழ்க்கார அம்மாங்க…அப்பத்தான் முதல் தடவைப் பார்க்கிறேன். ஆனா அவங்க நைரோபி வந்து 2 மாதம் ஆச்சாம் ( கடந்த 2 மாதமாக நான் யார் முகத்தைப் பார்த்தேன்…????). பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் ரொம்ப - ரொம்பன்னா ரொம்ப ரொம்ப ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தது (ஆனா நமக்குத்தான் பாம்புக் காதாச்சே) " நான் சொன்னேன்ல, அது இந்தப் பையன்தான். பாவம் , யாரு பெத்த புள்ளையோ. டெய்லி பார்க்கிறேன். குமுறி குமுறி அழுதுகிட்டே நடக்குது”.

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்னு கம்பன் சொன்னது போல நானும் கலங்கி விட்டேன் ( எலேய், திரும்ப திரும்ப ஏண்டா கம்பனை வம்புக்கு இழுக்குறே?). நான் கலங்கியது இரண்டு விஷயத்துக்காக.
1.       குமுறி, குமுறியா?
2.       “நான் சொன்னேன்ல” என்றால் என்ன அர்த்தம்? இந்த அம்மா ரொம்ப நாளா நம்ம சோகத்தைக் கவனிக்குது போல.

ஆக மொத்தம்....நம்ம கதை ஊருக்கே தெரிஞ்சிருக்குது.
நாளைக்கு முதல் காரியமாக போய் கண் டாக்டரைப்  பார்க்கணும்.

வெ.பாலமுரளி.

முள்றியின் டைரி 10 - இது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா?

நான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக்கொண்டிருந்தேன் (தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை.  50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல் கயிறு S.Ve. சேகர் போல எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூணே மூணுதான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும்?).

என்னுடன் வேலை செய்யும் ஒரு பொறியாளன் தன்னுடைய நண்பன் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறினான். “திருமணமாகி அந்த மனைவி” மூலமாகக் குழந்தைகள் இருக்கிறதா” என்று நம்ப முடியாமல் கேட்டேன் ( Yes. ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் “திருமணம்” செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது அசாதாரண விஷயம்). என் கேள்வியைப் புரிந்து கொண்ட என் பொறியாளன் தன் நண்பன் ஒரு நல்ல குடும்பஸ்தன் என்றும் ரொம்பப் பொறுப்பானவன் என்றும் சான்றிதழ் கொடுத்தான். இரண்டுமே இங்கு பெரிய விஷயம் என்பதால் அவனை உடனே Interview- விற்கு வரச் சொன்னேன்.

அவனும் வந்தான். சிறிது நேரம் பேசினோம்.  நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் அவனிடம் இருந்ததாகத் தோன்றியது. சினிமா படங்களில் வரும் MD போல (ம்க்கும்….அது வேறயா?) குரலை வைத்துக் கொண்டு You are appointed Gentle Man என்று சொல்லி விட்டு அவன் முகத்தில் சந்தோஷ ரேகையைத் தேடினேன்.

அவன் மிகவும்  Casual –ஆக, Sir, நான் உங்கள் கம்பெனியில் சேர வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் என்றான். “இதென்ன கலாட்டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சொல் என்றேன். நான் மிகவும் மதப் பற்றுள்ளவன் என்றான். Good என்றேன். எங்கள் சர்ச்சில் உள்ள சர்வீஸ் கமிட்டியில் நான்தான் Leader என்றான். Very good என்றேன். எந்த ஒரு சனிக் கிழமையும் என்னால் கடவுளைப் பிரார்த்திக்காமல் இருக்க முடியாது என்றான். நான் கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு சனிக்கிழமை பிரார்த்தனைதானே, நன்றாகப் பிரார்த்தியப்பா. எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள் என்றேன். இதில் என்ன பிரச்சினை என்றேன். அவன் உடனே லலிதா ஜூவல்லரி விளம்பரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல அதுதான் விஷயம் அதில்தான் விஷயம் என்றான். அவனைக் குழப்பத்தோடு பார்த்தேன். சனிக்கிழமை நான் காலை 8 மணிக்கெல்லாம் சர்ச்சுக்குப் போய்விடுவேன் என்றான். நான் பரிதாபமாக அப்போ வேலை….. என்று இழுத்தேன்.

நான் சனிக்கிழமை வேலைக்கு வரமுடியாது. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றான். எனக்கு தேவர் மகன் கமல் சொன்னது போல உள்ளே இருக்கும் மிருகம் லேசாக எட்டிப் பார்த்தது. ஏம்பா கடவுளுக்குச் சமமாக கடமையும் முக்கியமில்லையாப்பா என்று சொல்லி விட்டு நம்ம “கொக்கென நினைத்தாயா கொங்கனவா” கதையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவனுக்கு என்ன புரிந்ததோ….சாரி சார் எனக்கு சர்ச் ரொம்ப முக்கியம் என்றான் (ஒரு வேளை நம்ம கதையைக் கேட்டு பயந்து விட்டானோ?).

நான் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, ஒருவேளை நான் உன் கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன செய்வாய் என்றேன். அவன் சிறிதும் அசராமல் உங்கள் வேலையே வேண்டாமென்று போய்விடுவேன் என்கிறான். நான் பொறுமையிழந்து, எலேய் கடவுள் பெயரைச் சொல்லி நீ வேண்டுமானாலும் பசியோடு இருக்க உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அந்த கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உன் மனைவியையும் குழந்தைகளையும் பட்டினி போட யாரடா உனக்கு அந்த உரிமையைத்தந்தது மானிடப் பதரே என்றேன் மனோகரா கண்ணாம்பாள் ஸ்டைலில்(நெஜ்ம்மாகவே டென்ஷன் ஆயிருச்சுங்க).

அவன் கொஞ்சம் கூட அசராமல் உங்களுக்குக் கூட (?????????) தெரிந்த இந்த அல்ப விஷயம் ஜீசஸுக்குத் தெரியாதா…..அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி விட்டு என் கையை குலுக்கி விட்டுப் போய் விட்டான்.
அன்று இரவு எனக்குக் கொஞ்சம் கூடத் தூக்கம் வரவில்லை. நல்ல ஒரு  Candidate –ஐ விட்டு விடோமே என்பதற்காக அல்ல. மஜா படத்தில் விக்ரம் பேசுவதாக ஒரு வசனம் வரும் “இது என்ன ஜென்மம்டா” என்று- அதை நினைத்து.

நண்பர்களே….இப்போது இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு எனக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

வெ.பாலமுரளி.

முள்றியின் டைரி 9 - எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி

1989 - ம் வருடம். நான் ரஷ்யாவில் படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா இறந்து 6 மாதமாகி இருந்தது. என் அம்மாவும் சின்ன அண்ணனும் காரைக்குடியில் தங்கியிருந்தார்கள்.

அப்போது என் அண்ணனிடம் இருந்து ஒரு கடிதம். கடிதம் வேண்டாம், லெட்டர்னு வெச்சுக்கலாமா? வேண்டாம், கடிதமே இருக்கட்டும் (அடச்சீ….விஷயத்துக்கு வா).

கடிதத்தின் சாராம்சம் இதுதான். " எனக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்து விட்டதால் காரைக்குடியை காலி பண்ணி விட்டு நானும் அம்மாவும் சிவகங்கை செல்கிறோம். அடுத்த முறை நீ இந்தியா வரும்போது நேரே சிவகங்கை வந்து விடு. ----------------இதுதான் அட்ரஸ்". எனக்குக் கடிதத்தைப் பார்த்தவுடன் இரண்டு காரணங்களால் டென்ஜனோ டென்ஜன். ஒன்று, காரைக்குடி, தேவகோட்டையைத் தவிர வேறு எந்த ஊரிலும் குடியிருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இரண்டாவது, சிவகங்கை எங்கேயிருக்கிறது? அப்போதெல்லாம் எனக்கு பூளோகம் அவ்வளவாகத் தெரியாது. (இப்ப ரொம்பத் தெரியுமாக்கும் என்று கேட்க வேண்டாம். ஏன்னா இப்பவும் தெரியாது. ஹி..ஹி…ஹி..).

விரைவிலேயே எனக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு வந்தது. எப்படியோ சிவகங்கையும் போய் சேர்ந்து விட்டேன். சிவகங்கை, கிராமமும் இல்லாமல் டவுனும் இல்லாமல் சுஜாதா சொல்வது போல ஒரு மாதிரி கேணத்தனமாக இருந்தது. வீட்டில் டி.வி. இருந்தது. ஆனால், மேலே இருந்த ஆண்டெனாவை திருப்பித் திருப்பி ரூபவாஹினியைத் தேடும் விளையாட்டு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. So, எனக்கு சிவகங்கை ஓரிரு நாளிலேயே பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இருக்கவில்லை. நான் பட்ட பாடைப் பார்த்து விட்டு என் அண்ணன் ( எம்.ஜி.ஆர் நடித்த படமில்லைங்க. My Brother) என்னை அவன் அலுவலகத்திற்கு அழைத்துப் போனான்.

அரசாங்க அலுவலகம் என்றவுடன் எல்லாம் பெரிசுகளாக இருக்கும் என்று நினைத்துச் சென்ற எனக்கு ஆச்சரியம். கிட்டத்தட்ட எல்லோருமே என் அண்ணன் வயதிலேயே இருந்தார்கள். எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தினான்.  கை குலுக்க கை நீட்டிய என்னை ஒரு மாதிரி ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் (கும்பிடணுமோ?). “தம்பி என்ன பண்றான்?” ( டேய்... கொஞ்சம் மரியாதை கொடுங்கடா). இந்தக் கேள்வியை எப்படா கேட்பார்கள் என்று எதிர்பார்த்த மாதிரி இருந்த என் அண்ணன், உடனே, இவன் ரஷ்யாவில் Mechanical Engineeringபடிக்கிறான் என்றான் பெருமையாக. அவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்த மாதிரி தெரியவில்லை. அங்கெல்லாம் என்ன பேசுவார்கள், தமிழ்தானா இல்ல ஹிந்தியா என்றது ஒரு பிரகஸ்பதி. நான் வெறுத்துப் போய் தெலுங்கும் கன்னடமும் மிக்ஸ் பண்ணி ஒரு மாதிரி பேசுவார்கள் என்றேன். அப்படியா, நமஸ்காரண்டி , பாகுன்னாரா.....எனக்கும் தெலுங்கு தெரியுமே,ஹி...ஹி...என்றது
(ஓட்டுராய்ங்கெளோ?).

எனக்கு அந்த இடம் ரொம்ப அந்நியமாகவும் Uneasy – யாகவும் இருந்த்து. சரி, மகேஷ் நான் கெளம்புறேன் என்றேன். சரி எப்படிப் போவ என்றான். என்னடா கேள்வி, நீதான் யாரையாவது அனுப்பி ட்ராப் பண்ணனும் என்றேன். அவன் சிரிக்காமல், இன்னும் என்னுடைய பைக்குக்கு டிரைவர் அப்பாய்ண்ட் பண்ணலையே என்றான் ( அய்யே...ஸோக்கு....). உடனே எல்லோரும் கெக்கே பிக்கே என்று சிரித்து என் எரிச்சலைக் கூட்டினார்கள். அப்ப எப்படிடா போவேன் என்றேன், என் பரிதாப வாய்ஸை காண்பித்துக் கொள்ளாமல். இந்தா நீயே ஓட்டிக் கொண்டு போய் விடு என்று அவன் பைக் சாவியைக் கொடுத்தான். நானா????? என்றேன் அதிர்ச்சியில். ஏன் உனக்கு பைக் ஓட்டத் தெரியாதா என்றது இன்னொரு பிரகஸ்பதி ( சனியன், எப்படிக் கண்டுபிடிச்சுச்சுனு தெரியல). என் அண்ணனுக்கு அந்தக் கேள்வி மானப் பிரச்சினையாகப் போய்விட்டது (டேய்.. டேய்... நானே சும்மா இருக்கேன். நீ ஏண்டா உணர்ச்சிவசப்படுற என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்). அவன் ஃபாரின்ல ஜாவால்லாம் ஓட்டிருக்கான் தெரியும்ல என்றான் மிகுந்த கோபத்துடன் ( ஜாவாவா?????? டேய் போதும்டா....நான் நடந்தே போயிக்கிறேன்....). அவன் சொன்னதை அங்கிருந்த ஒரு பய புள்ளயும் நம்பவில்லை என்பதை அவர்கள் மூஞ்சியே தெளிவாகச் சொன்னது. முரளி கெளம்புடா என்றான். அவர்களுக்கு முன்னால் நான் பைக் ஓட்டி அவர்களை மூக்குடையச் செய்ய வேண்டும் என்ற அவனது ஆசை எனக்குத் தெரியாமல் இல்லை ( அதுக்கு நானா கெடச்சேன்). சரி மகேஷ், ஒரு டீ குடிச்சுட்டு கெளம்புறேன் என்றேன். சத்தியமாக அதை அவன் ரசிக்கவில்லை. அங்கிருந்த கிரகங்கள் நக்கலாக சிரித்துக் கொண்டன (அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்). நான் அந்த டீயை எவ்வளவு மெதுவாக குடிக்க முடியுமோ, அவ்வளவு மெதுவாகக் குடிக்க ஆரம்பித்தேன். (நான் கடவுளை வேண்டிக் கொண்டபடியே) அந்த நேரம் பார்த்து அவர்களின் Senior Officer அங்கு வர, எனக்குக் கட்டையைக் கொடுத்துக் கொண்டிருந்த அனைத்து கிரகங்களும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பின. அப்பாடா....

சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல உடனே டீயை வீசி எறிந்து விட்டு தத்தக்கா பித்தக்கா என்று அந்த பைக்கை ஓட்டிக் கொண்டு ( கொஞ்சம் Gapகிடைத்தாலும் அந்தக் கிரகங்கள் வந்து விடுமோ என்ற பயத்தில்) அந்த இடத்தை உடனே காலி செய்தேன். அந்த ஆஃபிஸ் வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன் எனக்கு ஒரு சின்ன (??????) சந்தேகம். கியர் வைத்த வண்டியை ஓட்டும் போது கியரைப் பார்த்து ஓட்டுவதா இல்லை ரோட்டைப் பார்த்து ஓட்டுவதா என்று......Yes…you are right ..கியரைப் பார்த்தே ஓட்டுவது என்று முடிவு செய்து விட்டேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க. முதல் தடவையே அவ்வளவு சூப்பராக ஓட்டினேங்க. ஆனா ஒரு சின்ன்ன்ன்ன மிஸ்டேக். நான் போக வேண்டிய திசைக்கு மிகச் சரியாக எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்தேன். என்னடா, இவ்வளவு தூரம் வந்து விட்டோம் ஆனால் ஆள் நட மாட்டத்தையே காணோமே என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ( நான்தான் முன்னாலேயே சொல்லியிருக்கேனே, நாங்கல்லாம் ரொம்ப ப்ரைட்டுனு). என்ன....நான் அதை யோசிக்கும்போது கிட்டத்தட்ட 10 கி.மீ. தாண்டியிருந்தேன். 

Better late, than never என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு யாரிடமாவது கேட்போம் என்று வண்டியை நிறுத்தினேன். ஒரு பெரியவர் வந்தார். நான் ரொம்ப Casual ஆக இருப்பதாக நினைத்துக் கொண்டு, தாத்தா பிள்ளையார் கோவில் தெரு எங்கே இருக்கு என்று கேட்டேன். அவர் ரொம்ப அசால்ட்டாக, எந்த பிள்ளையார் கோவில் தெரு என்றார் ( எந்த பிள்ளையார் கோவிலா??? எத்தனை பிள்ளையார் கோவில் தெரு இங்க இருக்கு???). நான் துபாய் மெயின் ரோடு மாதிரி, மெயின் ரோடுக்குப் பக்கத்தில் என்றேன். அவர் லேசாக எரிச்சலடைந்தார். வேற ஏதாவது அடையாளம் சொல்லு என்றார். நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு (நினைத்துக் கொண்டு என்றுதான் சொல்கிறேன். Note the point) பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோவில் கூட இருக்குமே என்றேன். அவர் எரிச்சல் Stage –இல் இருந்து கோபம் Stage- க்குPromotion ஆகி, பிள்ளையார் கோவில் தெருவில் சிவன் கோவிலா இருக்கும், எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி  என்றார். இந்த Sudden Attack – ஐ நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அது வரை யாரும் என்னை அந்த மாதிரி திட்டியதும் இல்லை ( சரி...சரி.....அதற்கு முன்னால ஓரிரு முறை யாரோ தெருப்போக்கர்கள் அந்த மாதிரி என்னை திட்டியது உண்டு).

Needless to say, உடனே எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறி, கண்கள் சிவக்க, மூச்சுத்திணறி... என்னை அறியாமல் நான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.Yes…தடாலென்று அவர் காலில் விழுந்து, ஐயா, நான் இந்த ஊருக்குப் புதுசு, எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும், ரொம்ப பசிக்குதுனு சொன்னேன்.

அவர் சத்தியமாக அந்த Anti Climax – ஐ எதிர்பார்க்கவில்லை. உடனே, சிரித்து விட்டு, இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு School –இல் என்னத்தைத்தான் சொல்லித்தாராய்ங்கெளோ என்று அலுத்துக் கொண்டே சரியான வழியைக் காண்பித்தார். நாம் College –இல் கட்டடித்த ஏதோவொரு Class – இல் தான் சிவகங்கையில் வழியைக் கண்டிபிடிப்பது எப்படி என்று சொல்லித் தந்திருப்பார்களோ என்று என்னை நானே நொந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.

வெ. பாலமுரளி. 

முள்றியின் டைரி -8 நண்பர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

இன்று கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு நேரத்தில் BBC-யில் இருந்து ஒரு ஃபோன்.

என் பெயர், முகவரி, என் Hobby எல்லாம் கேட்டு சரி பார்த்து விட்டு, நாங்கள் Masai Mara-வில் African Cats- Part II  Documentary Movie பண்ண வேண்டும், 3 மாதம் Project எங்களுடன் சேர்ந்து பணி புரிய இயலுமா என்று கேட்டார்கள். கரும்பு தின்ன கூலியா? யோசிக்காமல் சரி என்று சொல்லி விட்டேன். என் கேமரா மற்றும் லென்ஸ் Details கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு திருப்தி போலத்தான் தோன்றியது.

 என்னை எப்படித் தெரியும் என்றேன். Flick r-இலும் Face Book-இலும் 
பார்த்தார்களாம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்களே, உங்கள் Expenses
 போக இவ்வளவு தொகை தருகிறோம் என்றார்கள். கிட்டத்தட்ட மயக்கமே
 வந்து விட்டது. என்னை அறியாமலேயே எப்போது ஆரம்பிக்க வேண்டும் 
என்று பதட்டத்துடன் கேட்டேன்.” என்னத்த ஆரம்பிக்கப் போறீங்க? எந்திரிங்க…. மணி ஏழாச்சு.நேத்து பொறந்த புள்ள அழகா அதுவா எழுந்து 
School-க்குக் கிளம்பிருச்சு. இத (என்னைத்தான்) நாம வந்து எழுப்பி விட

 வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து” என்றாள் என் மனைவி….
வெ.பாலமுரளி

இந்த கனவு ஒரு நாள் நடக்குமா?