Saturday, 2 November 2013

முள்றியின் டைரி 21: பீலிங்க்ஸ் - Part 1 - நானும் எங்க பாட்டியும்October 31, 2013 at 4:53pm
நான் சின்ன வயதில் ரொம்ப ரிசர்வ்ட் டைப்புங்க.ரொம்பவும் பேச மாட்டேன். அதிர்ந்தும் பேச மாட்டேன் ( ம்க்கும் ...ஏதாவது நம்புகிற மாதிரி சொல்லு ராசா).  A Boy of few words.  ஏதாவது  ஓரிரு வார்த்தை பேசினாலும், வார்த்தைகள்  நறுக்குத் தெரிந்தாற்போல் எகத்தாளமாக வந்து விழும். இது எப்படி, யாரிடமிருந்து எனக்கு வந்தது என்று நானும் யோசித்து யோசித்துப் பார்த்து விடை தெரியாமல் விட்டு விட்டேன் ( ஓஓஓ.... Manufacturing Defect - ன்னு சொல்லு).


அப்போது நான் ரெண்டாப்போ மூணாப்போ படிச்சுக்கிட்டிருந்தேன். எங்க பாட்டி ஊரிலிருந்து வந்திருந்தார்கள். தேவகோட்டையில்  எங்கள் வீடு 'பாரதி நிலையம்', பெரிய பங்களா இல்லாவிட்டாலும், நல்ல வசதியான வீடு (' பாரதி நிலையம்' - இந்தப் பெயரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் பின்னால் சொல்கிறேன்). எங்கள் அப்பாவிற்கு தோட்டக்கலையில் நல்ல ஈடுபாடு என்பதால், வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட மரங்கள் வைத்திருந்தார் . ஏழெட்டு தென்னை மரங்கள், 2 மாமரங்கள், ஒரு கொய்யா, ஒரு பப்பாளி, ஒரு கருவேப்பிலை மரம், ஒரு எலுமிச்சை மரம், பத்து பதினைந்து வாழைமரங்கள்  என்று ஒரு தோப்பே உண்டு, வீட்டைச்சுற்றி.


வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு சின்ன கால்வாய் உண்டு. மரங்களுக்குப் போனது போக,  மீதி கழிவு நீர் அந்தக் கால்வாய் வழியாக நகராட்சியின் Sewage சிஸ்டத்தோடு கலந்து விடும். என்னதான் கழிவு நீராக  இருந்தாலும்,  எந்தக் காரணத்தைக் கொண்டும் அதில் உப்பு நீரைக் கலக்கக் கூடாது என்பது எங்க அப்பாவின் கண்டிப்பான உத்தரவு.


ரூல்ஸ் போடுவதே அதை மீறுவதற்குத்தானே. ஒரு நாள் கால்வாயின் ஓரத்தில் நின்று கொண்டு இயற்கையின் முதல் அழைப்பை ஏற்று மரியாதை செய்து கொண்டிருந்தேன் ( என்னவோ காதலுக்கு மரியாதை செய்ற மாதிரி சொல்ற ?????). அப்போது,எங்கிருந்தோ எங்க பாட்டியின் குரல் கேட்டது, "அடேய் , பேதியில போறவனே ....நின்னுக்கிட்டுப்  போகாதடா" என்று. நான் சுத்தி முத்திப் பார்த்தேன். கண்ணுக்குத் தெரிந்த வரை எங்க பாட்டியைக் காணவில்லை. சரி, பாட்டி ஏதோ Assumption - இல் அடிக்குது போல என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு " ஏன்......போனா என்ன ? " என்று நக்கலாக ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு, எதற்கும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் கடமையைத் தொடர்ந்தேன். எங்க பாட்டியும் விடாமல்,  " அட கருமாந்திரம் புடிச்சவனே, நின்னுக்கிட்டுப் போனா பிசாசு வந்து குடிச்சிரும்டா பிசாசு வந்து குடிச்சிரும் " என்றது கடமையாக. நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், " குடிச்சிட்டுப் போகட்டுமே பாட்டி. வேஸ்ட்டாத்தானே போகுது" என்றேன்.  


சொன்னா நம்ப மாட்டீங்கங்க . நம்ம சூப்பர் மேன் ஸ்டைலுல எங்க பாட்டி, எங்க இருந்தோ பாய்ஞ்சு வந்து என் முதுகுல ஒரு அப்பு அப்புச்சு பாருங்க, எனக்குப்  பொறி கலங்கி விட்டது.


அந்த சம்பவத்திற்குப்பிறகு நான் எடுத்த உறுதிமொழியை இங்கு சொல்ல வேண்டாமென்று பார்க்கிறேன்.


வெ. பாலமுரளி.

Saturday, 26 October 2013

Cooking Tips.....October 26, 2013 at 1:22pm
I wrote these wonderful cooking tips in 1997 for our Tamil Magazine in Kenya.Due to high demands among our Nairobi Ladies, I am republishing these tips.


Note :


1. Gentle men .....Please do not read this. அதையும் மீறி வாசித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல.2. Non Tamil Speaking Folks...Please accept my apology for not being able to translate this to English due to some technical problems.


தாய்க்குலங்களுக்கு உபயோகமான சில சமையற்குறிப்புகள் :


1. பழைய இட்லி பூசனம் பிடித்து விட்டதா ? கவலையே வேண்டாம். அதன் மேலுள்ள பூசனத்தை நீக்கி விட்டு , அதை தோசை மாவோடு கலந்து சிறிது சோடா உப்புப் போட்டு , தோசையாக வார்த்து விடுங்கள் ( மறக்காமல், சாப்பிடும்போது (????) வீட்டில்  ரூம் ஸ்ப்ரே அடித்து விடவும்).


2. மதியம் வைத்த சாதம் , தண்ணீர் விட்டுப் போய் லேசாக ஊசிப் போன வாசம் வருகிறதா ? எதற்குக் கவலை? மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து, சோம்பு, மிளகு, வெங்காயம் போன்ற வாசனைப் பொருட்கள் சேர்த்து, வெயிலில் காய வைத்து வடகமாக ஆக்கி விடுங்கள். அதன் சுவையே தனிதான் (?????).


3. இட்லி கல் போல் இருக்கிறதா ( பெரும்பாலும் அப்படித்தானிருக்கும்) ?நோ டென்ஷன். அதை சிறு சிறு பீஸாக கட் பண்ணி , அதன் மேல் க்ரீம் தடவி, லேசாக சர்க்கரையைத் தூவி, அதன் மேல் டூத் பிக்கைக் குத்தி, குழந்தைகளுக்கும், கணவருக்கும் கொடுத்தால், இது ஒரு ஏதோ புது பதார்த்தம் போலிருக்கு  என்று ( வழக்கம்போல்) நினைத்து ( ஏமாந்து) ஒரு நிமிடத்தில் காலி பண்ணி விடுவார்கள்.


4. மதியம் வைத்த கறி கெட்டுப் போய் விட்டதா ? டோண்ட் வொர்ரி ..பீ ஹேப்பி. அதை குழம்புடன் மிக்ஸ் பண்ணி நன்றாக சுட வைத்து, சாத்தத்துடன் பிசைந்து, நிலாச் சோறு என்று   உருட்டி உருட்டிக் கொடுத்தால் அனைவரும் விரும்பிச்  சாப்பிடுவார்கள்  ( முடிந்தால் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்கவும்).


5. காலையில் வைத்த சட்னி சலித்து ( ஊசி) ப்  போய் விட்டதா ? டென்ஷனே வேண்டாம். அதை மதியம் வைக்கும் சாம்பாரிலோ, புளிக் குழம்பிலோ கரைத்து விட்டு விடுங்கள். குழம்பும் கணிசமாக இருப்பதோடு, வாசனையும் ஆளை சும்மா கும்முன்னு தூக்கும். ( முடிந்த வரை , அதை ரசத்தில் கரைப்பதைத் தவிர்க்கவும். அப்படியே  மறந்து போய் கரைத்து விட்டாலும் தவறில்லை).


6. இவை தவிர, வேலைக்காரிகளுக்கு வைத்திருக்கும் பிரெட் கேட்டுப் போனால் அதை வைத்து வெஜிடபிள் பிரியாணி செய்வது, திடீரென்று எதிர்பாராமல் விருந்தினர் வந்து விட்டால், குழம்பிலும் ரசத்திலும் ஏகத்துக்கும் தண்ணீரை ஊற்றி அதன் சுவையை மேலும் கூட்டுவது, உருளைக் கிழங்கையும், முள்ளங்கியையும் தாராளமாகப் போட்டு அதன்  Viscosit யை அதிகரிப்பது போன்ற அடிப்படை குறிப்புகள் அனைவருக்கும் தெரிந்தவை என்பதால் மறுபடியும் விளக்கவில்லை.


7. மிக முக்கியமாக, மேற்கூறிய குறிப்புகளை உபயோகப்படுத்தி, சுவையான ( ???) சமையல் செய்து விட்டு, எங்க வீட்டு 'இது' நான் என்ன சமைத்தாலும் ஒண்ணும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டுப்  போய் விடும் என்று மற்ற பெண்டிரிடம் Marketing பண்ண மறந்து விட வேண்டாம்.


வெ. பாலமுரளி.


பி.கு: மங்கையர்  மலர்  மன்னிக்கவும்.    

Cooking Tips.....October 26, 2013 at 1:22pm
I wrote these wonderful cooking tips in 1997 for our Tamil Magazine in Kenya.Due to high demands among our Nairobi Ladies, I am republishing these tips.


Note :


1. Gentle men .....Please do not read this. அதையும் மீறி வாசித்து மனம் புண்பட்டால் நான் பொறுப்பல்ல.2. Non Tamil Speaking Folks...Please accept my apology for not being able to translate this to English due to some technical problems.


தாய்க்குலங்களுக்கு உபயோகமான சில சமையற்குறிப்புகள் :


1. பழைய இட்லி பூசனம் பிடித்து விட்டதா ? கவலையே வேண்டாம். அதன் மேலுள்ள பூசனத்தை நீக்கி விட்டு , அதை தோசை மாவோடு கலந்து சிறிது சோடா உப்புப் போட்டு , தோசையாக வார்த்து விடுங்கள் ( மறக்காமல், சாப்பிடும்போது (????) வீட்டில்  ரூம் ஸ்ப்ரே அடித்து விடவும்).


2. மதியம் வைத்த சாதம் , தண்ணீர் விட்டுப் போய் லேசாக ஊசிப் போன வாசம் வருகிறதா ? எதற்குக் கவலை? மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து, சோம்பு, மிளகு, வெங்காயம் போன்ற வாசனைப் பொருட்கள் சேர்த்து, வெயிலில் காய வைத்து வடகமாக ஆக்கி விடுங்கள். அதன் சுவையே தனிதான் (?????).


3. இட்லி கல் போல் இருக்கிறதா ( பெரும்பாலும் அப்படித்தானிருக்கும்) ?நோ டென்ஷன். அதை சிறு சிறு பீஸாக கட் பண்ணி , அதன் மேல் க்ரீம் தடவி, லேசாக சர்க்கரையைத் தூவி, அதன் மேல் டூத் பிக்கைக் குத்தி, குழந்தைகளுக்கும், கணவருக்கும் கொடுத்தால், இது ஒரு ஏதோ புது பதார்த்தம் போலிருக்கு  என்று ( வழக்கம்போல்) நினைத்து ( ஏமாந்து) ஒரு நிமிடத்தில் காலி பண்ணி விடுவார்கள்.


4. மதியம் வைத்த கறி கெட்டுப் போய் விட்டதா ? டோண்ட் வொர்ரி ..பீ ஹேப்பி. அதை குழம்புடன் மிக்ஸ் பண்ணி நன்றாக சுட வைத்து, சாத்தத்துடன் பிசைந்து, நிலாச் சோறு என்று   உருட்டி உருட்டிக் கொடுத்தால் அனைவரும் விரும்பிச்  சாப்பிடுவார்கள்  ( முடிந்தால் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்கவும்).


5. காலையில் வைத்த சட்னி சலித்து ( ஊசி) ப்  போய் விட்டதா ? டென்ஷனே வேண்டாம். அதை மதியம் வைக்கும் சாம்பாரிலோ, புளிக் குழம்பிலோ கரைத்து விட்டு விடுங்கள். குழம்பும் கணிசமாக இருப்பதோடு, வாசனையும் ஆளை சும்மா கும்முன்னு தூக்கும். ( முடிந்த வரை , அதை ரசத்தில் கரைப்பதைத் தவிர்க்கவும். அப்படியே  மறந்து போய் கரைத்து விட்டாலும் தவறில்லை).


6. இவை தவிர, வேலைக்காரிகளுக்கு வைத்திருக்கும் பிரெட் கேட்டுப் போனால் அதை வைத்து வெஜிடபிள் பிரியாணி செய்வது, திடீரென்று எதிர்பாராமல் விருந்தினர் வந்து விட்டால், குழம்பிலும் ரசத்திலும் ஏகத்துக்கும் தண்ணீரை ஊற்றி அதன் சுவையை மேலும் கூட்டுவது, உருளைக் கிழங்கையும், முள்ளங்கியையும் தாராளமாகப் போட்டு அதன்  Viscosit யை அதிகரிப்பது போன்ற அடிப்படை குறிப்புகள் அனைவருக்கும் தெரிந்தவை என்பதால் மறுபடியும் விளக்கவில்லை.


7. மிக முக்கியமாக, மேற்கூறிய குறிப்புகளை உபயோகப்படுத்தி, சுவையான ( ???) சமையல் செய்து விட்டு, எங்க வீட்டு 'இது' நான் என்ன சமைத்தாலும் ஒண்ணும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டுப்  போய் விடும் என்று மற்ற பெண்டிரிடம் Marketing பண்ண மறந்து விட வேண்டாம்.


வெ. பாலமுரளி.


பி.கு: மங்கையர்  மலர்  மன்னிக்கவும்.    

Saturday, 19 October 2013

முள்றியின் டைரி 20 : நாங்க வம்பை விலை கொடுத்து வாங்குவோம்ல...

சம்பவம்: 1


1988 – இல் எங்க அப்பா இறந்ததற்குப் பிறகு எனக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் எங்க சுந்தர் மாமாவும் அவர்கள் குடும்பமும்தான். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு இந்தியா வரும்போதும் அவர்கள் வீட்டில் ஜாலியாக ஒரு 10 நாட்கள் டேரா போட்டு விடுவேன். ஊர் சுற்றுவது , ஜாக்கி சான் படம் பார்ப்பது, அடையாறில் உள்ல ஷீலா ரெஸ்ட்டாரெண்டில் சாப்பிடுவது எல்லாம் எங்கள் பிடித்தமான பொழுது போக்குகள். என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.

அது மாதிரி ஒரு முறை அங்கு தங்கியிருக்கும்போது ( 1990 என்று ஞாபகம்) , ஒரு நாள் காலையில் சுமார் 9 மணியளவில், அவர்கள் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டின் பால்கனியும் எங்கள் வீட்டு பால்கனியும் அருகருகே தெரியும். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தேன். அவர்கள் வீட்டின் பால்கனி கதவு லேசாக திறந்திருக்க , உள்ளே ஒரு ஆள் எசகு பிசகா கீழே விழுந்து கிடந்தது தெரிந்தது. முதலில், சரி...தலைவர் ஏதோ மப்பில் இருக்கிறார் போலிருக்கு என்று நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன். திரும்ப ஒரு முறை உற்றுப் பார்க்கும்போதுதான் தெரிந்தது அவர் வாயில் இருந்து நுரை தள்ளியிருந்தது.

ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. உடனே எங்க மாமாவை அழைத்தேன். அன்று அவருக்கு State Planning Commission – இல் CM – உடன் மீட்டிங் என்று பர பரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தார். விஷயத்தைச் சொன்னவுடன், அந்த வீட்டில் ஒரு வட இந்தியர், தன் குடும்பத்துடன் ஏதோ பிரச்சினை என்று தனியே வந்து இங்கு வாடகைக்கு தங்கியிருப்பதாகச்  சொன்னார். மற்றபடி அந்த ஆளைப் பற்றி  அங்கு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. சரி மாமா,  நான் போய் ஏதாவது பண்ண முடியுமா என்று பார்க்கிறேன் என்றேன். “ முரளி ஜாக்கிரதை. சென்னை, உங்க ஊர் மாதிரி கிடையாது. ஏதாவது ஒண்ணுன்னா போலீஸ் கோர்ட்டுன்னு அலைய விட்டு விடுவார்கள். நான் அவசரமாக கிளம்ப வேண்டும் . ஏதாவது உதவி வேண்டுமென்றால் உடனே ஃபோன் பண்ணு” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

அக்கம்பக்கத்தில் யாரும் உதவிக்கு வரப்  பயந்தார்கள். சக்தி என்னும் ஒரே ஒரு இளைஞர் மட்டும் முன் வந்தார், வாங்க சார் என்னனு பார்க்கலாம் என்று. அவர் உதவியுடன் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தோம். வீடு முழுதும் ஏதோ ஒரு பூச்சி மருந்து வாடை வந்தது. உயிர் இருக்கிற மாதிரி தான் தெரிந்தது. சக்தி உதவியுடன் அவரைத் தூக்கி ஒரு ஆட்டோவில் ஏற்றினோம். அந்த ஆட்டோக்காரர் எங்க மாமாவிற்குத் தெரிந்தவர் என்பதால் ஒன்றுமே கேட்காமல் வந்து விட்டார். “ சக்தி, வீட்டுக்கு வந்து கைலியை மாற்றி விட்டு பேண்ட் போட்டுட்டு போடா” என்று அவர் அம்மா குரல் கொடுக்க, கைலியை மற்றப் போன சக்தி திரும்ப வரவேயில்லை. சரி இனி அவருக்காக காத்திருந்தால் சரி வராது என்று நான் மட்டும் கிளம்பினேன்.
இந்திராநகரில் ஒரு மருத்துவ மனைக்குச் சென்றோம். அங்கு இருந்த ஒரு மருத்துவர், இவர் யார், பெயர் என்ன, இவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம், ஏன் இவர் பூச்சி மருந்து சாப்பிட்டார் என்று ஏராளமான கேள்விகள். அவர் கேட்ட எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாதலால், அவர் என்னை சந்தேகமாகப் பார்த்தார் ( ப்ளீஸ் டாக்டர் என்னை அந்த மாதிரிப் பார்க்காதீங்க. நான் அந்த மாதிரி ஆளில்லை).

சார் இவருக்கு உயிர் இருக்கு. ஆனால் எந்த விவரமும் இல்லாமல் எங்களால பார்க்க முடியாது. ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால் போலீஸுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாது சார்  என்றார். எனக்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. என்ன டாக்டர், ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது  இவ்வளவு Rules & Regulations  பேசுகிறீர்களே, இது நியாயமா  என்றேன் , சற்று காட்டமாக. என்ன சார் செய்வது நாங்கள் சந்தித்த பிரச்சினைகள் அந்த மாதிரி என்றார் சற்றே பரிதாபமாக. சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, சரி சார் நான்  Treat  பண்ணுகிறேன், ஆனால் ஒரு கண்டிஷன் என்றார் சற்றே கீழே இறங்கி வந்து. என்ன டாக்டர் என்றேன். நான் சொல்லுகிற  வரை நீங்கள் எங்கேயும் போகக் கூடாது, சரியா என்றார் - கிட்டத்தட்ட பிணையக் கைதி மாதிரி. கிட்டத்தட்ட என்ன கிட்டத்தட்ட , பிணையக் கைதியேதான். நானும் வேலை ஆனால் சரிதான் என்பதால் ஒத்துக் கொண்டேன்.

சாருக்கு ஏதாவது வேண்டுமானால் பார்த்துகுங்க என்று 2 சிஸ்டரைப் பார்த்து கண்ணாலேயே சைகை காண்பித்து விட்டு நம்ம சூசைட் பார்ட்டியோடு உள்ளே போய் விட்டார். அந்த 2 சிஸ்டர்களும்  கிங்கரர்கள் மாதிரி  என்னை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை. எனக்கு நேரம் ஆக ஆக நல்ல பசி வேறு. இதற்கு இடையில்  எங்க மாமா பையன் கார்த்திக் வந்து, வாங்க மாமா,  வீட்டுக்கு வந்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போங்க என்றான் என் நிலைமை புரியாமல்.  இல்லப்பா பசிக்கவில்லை என்று அவனை அனுப்பி விட்டு மறுபடியும் காத்திருந்தேன். 

கிட்டத்தட்ட மதியம் 3 மணியளவில் டாக்டர் வெளியே வந்து, பேஷண்ட் அபாயகர நிலையைத் தாண்டி விட்டதாகவும், இனி நான் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு மாலை வரலாம் என்று  Release Order  கொடுத்தார். 
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள்  யாருமே எனக்கு எந்த  அப்டேட்டும் பண்ண மறுத்து விட்டார்கள். அந்த 6 மணி நேரமும்  எனக்கு சரியான மன உளைச்சல். எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவது கருமம்டா, கருமம் புடிச்சவனே என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.  
அன்று மாலை நானும் எங்க மாமாவும் அவரைப் பார்த்து விட்டு வரப் போனோம். எங்களைப் பார்த்தவுடன்  அவர் தன் மூஞ்சியை வெடுக்கென்று மறு புறம் திருப்பிக் கொண்டது தனிக் கதை.
 
சம்பவம் 2 :
1993 - இல் நான் கொஞ்ச நாள் பாம்பேயில்  Vinod House Wares - இல் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை, பாம்பேயில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பால்கர் என்னும் ஒரு சிறிய ஊரில். அந்த ஊருக்கு யாருமே வேலைக்குப் போக மாட்டார்கள் போலிருக்கு. என்னைப் போன்ற ஒரு பொடியனுக்கு தனியே ஒரு வீடு கொடுத்து, யமாஹா பைக் கொடுத்து, மூன்று வேளை சமைத்துப் போடுவதற்கு ஒரு சமையற்காரரையும் கொடுத்து ராஜா மாதிரி வைத்திருந்தார்கள் ( ம்க்கும் ). ஒரு நாள் என்னுடைய  சமையற்காரார் இரண்டு நாள் லீவு எடுத்து விட்டு தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.  Yes...you are right by guessing that he was sent by my close friend Mr. 7 1/2.

முதல் நாள் மாலை, பொழுது போகாமல் ( ?????) அங்கு உள்ள ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து சென்று அங்கு உள்ள ஒரு உடுப்பி ரெஸ்டாரெண்டில்   இரவு உணவை முடித்து விட்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன். என்  Factory - க்கு வரும் வழியில் மங்கலான விளக்குகள் மட்டும் இரண்டோ மூன்றோ இருந்தன. அங்கு ஒரு மெயின் ரோட்டில்  ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒரு  முதியவரை, ஒரு  ஐந்தாறு பேர் ஏதோ வம்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை ஒரு 30 - 40 பேர் கொண்ட  கும்பல் ஒன்று  மிகவும் நெருக்கமாக நின்று  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் மராத்தியில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில்,   எனக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போகத்தான் நினைத்தேன். நான் அவர்களைக் கடக்கப் போகும் சமயம் நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத தருணத்தில்  அந்த முதியவரை அந்த ஐந்தாறு பேருடன் சேர்ந்து அந்த பெரிய கும்பலும் கன்னா  பின்னா என்று தாக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஒரு நொடியில் என்ன  செய்வதென்றே தெரியாமல்,  " ஏண்டா ஒரு பெரியவரைப் போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்" என்று 'ஹிந்தியில் ' சத்தம் போட்டுக் கோண்டே அவர்களுக்கு குறுக்கே போய் விழுந்து கையில் கிடைத்த ஒரு நாலைந்து பேரைத் தள்ளி விட்டேன் .

அவர்களுடைய விஷயத்தில் நான் தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததலால் அவர்களுக்கு கோபம் வந்ததா, இல்லை நான் பேசிய ஹிந்தியால் அவர்களுக்கு  கோபம் வந்ததா என்று தெரியவில்லை. " ஏ புட்டாக்கோ  சோடுதோ . ஏ குத்தேக்கோ மார்தோ   " என்பது போல யரோ ஒருவன் குரல் கொடுக்க அந்த ஒட்டு மொத்த கும்பலும் என் மேல் பாய்ந்தது. வெறித்தனமான தாக்குதல்.  என்னால் கையில் கிடைத்ததை வைத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே சமாளிக்க முடிந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த முதியவர் பஞ்சாய் பறந்து விட்டார். யாரோ ஒருவன் என் பிடரியில் கம்பு ஒன்றால்  அடிக்க நான் ஒரு நொடியில் நினைவிழந்து கீழே விழுந்தேன். நான் விழுந்ததற்குப் பிறகும் அவர்கள் அனைவரும் ஒரு 10 நிமிடத்திற்கு என் மேல் அவர்கள் வீரத்தை காண்பித்ததாகவும் அதை அங்குள்ள மக்கள் ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருந்தாகவும், ஆனால் யாரும் உதவிக்கு வராததாகவும்  அங்கு இருந்த ஒரு 'வாட்ச்' (?????) மேன் சொன்னார்.  

யாரோ ஒரு புண்ணியவான் என்னை அருகில் இருந்த ஒரு மருத்துவ மனையில் சேர்த்ததும், நான் ஒரு 3 நாட்கள் கோமாவில் கிடந்ததும், அந்த முதியவர், என் பாஸ், யாரும் என்னை வந்து பார்க்காததும், அந்த கும்பல், அந்த ஏரியாவின் தாதா  ராஜா கேட்கர் என்பவனின்  அடியாட்கள் என்பதும்   இந்த டைரிக்குத் தேவையில்லாத விஷயங்கள். 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் நம்ம ஊர் வெறுத்துப் போய்  Hindu பேப்பர் வழியாக Try  பண்ணி  நான் கென்யா வந்தது.

இப்ப நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே ....
1. நான் செய்த விஷயங்கள் சரியா, தவறா ?
2. சரி என்றால்.....அது அசட்டுத் துணிச்சல் இல்லையா ? விட்டால் சங்கு ஊதியிருப்பார்களே ( அட்லீஸ்ட் இரண்டாவது சம்பவத்தில்) ..
3. தவறு என்றால் ......நான் என்ன செய்திருக்க வேண்டும் ? மேலும் பலரைத் திரட்டியோ அல்லது காவல் நிலையத்திற்குச் சென்று அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப்  பதில் சொல்லி விட்டு அவர்களைக் கூட்டி வருவதற்குள்ளோ  பாதிக்கப் பட்டவர்களின் உயிர்கள் தங்கியிருக்குமா? 
4. எனக்கென்ன என்று போயிருந்தால்,  அது மனிதாபிமான செயலாகுமா ? நாளைக்கு, நமக்கே இது போல எதுவும் நடக்காது என்று என்ன நிச்சயம்?  

இந்தக் கேள்விகள் என் மனதை ரொம்ப நாள் அரித்துக் கொண்டிருப்பதால் இந்த டைரியை உங்கள் முன் வைக்கிறேன்....

உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் மகிழ்ச்சியடைவேன். 


வெ. பாலமுரளி
    

Sunday, 6 October 2013


முள்றியின் டைரி 19 : வீழ்வேனென்று நினைத்தாயோ எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும்ங்க. மழைன்னா யாருக்குத்தான் பிடிக்காது ராசான்றீங்களா?...கரெக்ட். ஆனா, என்னோட 'பிடிக்கும்ங்க' வுக்குப் பின்னால  ஒரு  Flash Back  இருக்கே. இப்ப புரிஞ்சிருக்குமே, இந்த டைரி எதை பற்றின்னு.  Very Good.

தேவகோட்டை என்னும் ஊர், திருச்சி  - ராமேஸ்வரம் ஹைவேயில் உள்ளது. என்னுடைய பள்ளிப்பருவம் முழுவதும் கழிந்தது இந்த ஊரில்தான். அப்போது நாங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சீஸனுக்கு சீஸன் மாறும். கிட்டிப்புல், பம்பரம், கோலி, கம்பாத்தா (இது ஒரு சூப்பர் டூப்பர் விளையாட்டு . இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். சரியா? ), ஹாக்கி, பூப்பந்து, எறிபந்து , கால்பந்து, ட்ரையாங்கோ (  I Spy  மாதிரி. ஆனால் விதி முறைகள் வேறு). இந்தியனாகப் பிறந்து விட்டு கிரிக்கெட் விளையாவிட்டால் எப்படி....கிரிக்கெட்டில்தான் நாங்கள் வீதி வீட்டு வீதி , ஊர் விட்டு ஊர் மேட்ச் எல்லாம் நடத்தி வெற்றிக் கொடி நாட்டுவோம். அப்படி ஒரு முறை விளையாட்டாக  விளையாடப் போய் , அது ஒரு பெரிய மானப் பிரச்சினையாகப் போய் விட்டது.

அப்போது நான் 7 - வது படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் டவுனில், ஆர்ச்சுக்கு  அருகில் ஏதோ ஒரு வேலையாகப் போய்க் கொண்டிருந்தேன்.  "ஏ ...பாலமுரளி கோலமுரளி" என்று யாரோ என்னை அழைத்த மாதிரி இருந்தது. இவ்வளவு செல்லமாக யாரடா நம்மை  அழைப்பது என்று திரும்பினேன். பார்த்தால், இருதய ராஜ், ராமதுரை மற்றும் சரவணன் என்னை நோக்கி ஒடி வந்து கொண்டிருந்தார்கள். "என்னடா... நக்கலா" என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டே என் நடையை வேகமாக்கினேன். ( இந்த இருதய ராஜ், ராமதுரை, சரவணன்  மூவரும் எங்கள் ஊருக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ள ராம நகர் கிரிக்கெட் டீமின்  Players. ஒரு மாதத்திற்கு முன்னால்தான்  அவர்களை ஒரு மேட்சில் தோற்கடித்திருந்தோம். அத்தோடு வந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. நாங்கள் ஜெயிச்ச திமிரில் அவர்களை ஏகத்துக்கும்  நக்கல் பண்ணி அனுப்பி விட்டோம். இன்று நான் மட்டும் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டேன் ) .


என் நடையின் வேகத்தைக் கவனித்த பிசாசுகள், எங்கே,  விட்டால் நான் ஒடி விடுவேனோ என்ற பயத்தில் வேகமாக ஒடி வந்து என்னை வளைத்து விட்டார்கள் ( எப்படித்தான் Mind Reading பண்ணுவாய்ங்கெளோ ) . சரி ..சரண்டர் ஆகி விடலாமென்று, என்னடா வேணும் உங்களுக்கு என்றேன் - கொஞ்சம் உதார் டோனில் ( உள்ளே  இருகின்ற உதறலை வெளியே காண்பிக்காமலேயே ).டேய்..போன மேட்சில்தான் ஏதோ லக்குல ஜெயிச்சுட்டீங்க .....இன்னொரு மேட்ச் விளையாடலாம், வர்றீங்களாடா என்றான் இருதயராஜ். ( ப்பூ ...இவ்வளவுதானா ???? நான் கூட என்னவோ ஏதோன்னு நெனச்சுட்டேன். நம்ம வடிவேலு இருந்திருந்தா " நல்லா பீதியக் கெளப்புறாய்ங்கெடான்னு" சொல்லியிருப்பார்.  அதுசரி ..."நம்ம லக்குல ஜெயிச்சது இந்த Dogs - க்கு எப்படி தெரிஞ்சது" ன்னு எனக்கு ஒரே ஆச்சரியம்).

(வழக்கம்போல )  அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், என்ன லக்குலையா? என்னங்கடா ... ...நாங்க அடிச்ச நாலு ஆறெல்லாம் மறந்து போச்சா என்றேன் . நான் அதைச் சொன்னதும் அவெய்ங்கெ அப்படியே டெர்ரர் ஆயிடுவாய்ங்கென்லாம் நான் பேராசைப் படவில்லை. ஏதோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்ற மன நிலையில் மட்டுமே இருந்தேன். அவர்கள் அதை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டார்கள். " நாலு , ஆறா  ????? டேய் இவென் அடிக்கிற ஜோக்கைப் பாருங்கடா....அந்த கேவலமான  De Britto  பிட்சுல  யாரு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்டா " என்றான் சரவணன். " அப்புறம் ஏண்டா நீங்க ஜெயிக்கலை" என்றேன் ( புடிச்சமா ....பாயிண்டை...). " சரி விடுடா....இந்த வாரம் மேட்சுக்கு வர முடியுமா முடியாதா " என்றான் ராமதுரை. " மத்த பசங்களை கேட்டு விட்டுத்தான் சொல்ல முடியும் " என்றேன் ( நல்ல வேளை... நிலைமை  நான் நெனச்ச அளவுக்கு மோசமாக இல்லை)." சரி, வாங்கடா அவன்தான் பயப்படுறான்ல " என்றான் இருதய ராஜ். அவன் என்னை உசுப்பி விடுவது புரியாமலேயே நான் " பயமா, எனக்கா....???? " என்று லேசாக ஒரு ஆச்சரியம் காட்டி விட்டு " சரிடா....வர்ற ஞாயிறு  N.S.M.V.P.S Ground - இல் 9 மணிக்கு மேட்சுடா " என்று கமிட் பண்ணி விட்டேன். நகரத்தார் ஸ்ரீ மீனாட்சி வித்யாஸாலய பரிபாலன சங்கம் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற  N.S.M.V.P.S  எங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள பள்ளி. பெரிய  Ground . 

அவர்கள்  வந்த நோக்கம் நிறைவேறியதில் சந்தோஷமாகப் போய் விட்டார்கள். அவர்கள் போன பிறகுதான் " ஆகா ...கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டு விட்டோமோ" என்று எனக்குத்  தோன்றியது ( அப்பவே லேட் Thinking தான் ).  சரி வருவது வரட்டும் என்று நகர்ந்து விட்டேன். நீங்க சொன்னா நம்ப மாட்டிங்கங்க ...வீட்டுக்கு வந்ததும் " எங்கேடா ஊர் சுற்றி விட்டு வருகிறாய் " என்று எங்க அப்பா போட்ட சத்தத்தில்  நான் நெஜம்மாலுமே அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டேன். சமர்த்தாக படிக்க உட்கார்ந்து விட்டேன்.

அந்த பொல்லாத  Black Sunday"  யும் வந்தது. நான் குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டு எங்க அம்மாவிற்கு ஏதோ உதவி செய்து கொண்டிருந்தேன். வெளியே பார்த்தா " பாலமுரளி , கோலமுரளி , பயந்தாங்கொள்ளி, கொயந்தாங்கொள்ளி என்று ( செல்லமாகக் ) கத்திக் கொண்டிருந்தார்கள்". எனக்கு ஒரு நொடியில் பொறி தட்டியது. ஆ....ஹா.....இந்த ஏழரைகளை மேட்சுக்குக் கூப்பிட்டிருந்தோமெயென்று. தட தடவென்று ஒடி வந்தேன். ( நல்லவேளை வீட்டில் எங்க அப்பா  இல்லை. இருந்தால் பிறந்தநாள் கொண்டாடியிருப்பார் பிறந்தநாள் ).

ரொம்ப கேஷுவலாக .." ஏண்டா இங்க வந்து கத்துறீங்க ? " என்றேன் - எதுவுமே நடக்காதது போல. " ஏண்டா 9 மணிக்கு வரச் சொல்லி விட்டு , என்ன கிண்டலா ?" என்றான் இருதயராஜ். " 9 மணிக்கா ...???? என்ன வெளையாடுறீங்களா ....நான் 10 மணிக்குன்னுல சொல்லியிருந்தேன்..." என்றேன் ரொம்ப கூலாக ( முரளி ...உனக்குத்தான் பொய் சொல்லத் தெரியாதேடா.....எப்படி இது ?????) . அவர்களிடம் ஒரு சிறிய குழப்பம் தெரிந்தது. நம்மதான் ஒரு புள்ளி வெச்சா , கோடு போட்டு ரோடு போட்டு பஸ் விட்ருவோமே. நான் ரொம்ப  Confident - ஆக ஒரு லுக் விட்டேன். அதில் ஒரு கொழுந்து, " ஆமாண்டா அவன் 10 மணிக்குன்னுதான்  சொன்னான்" என்றது ( அவனுக்கு அவெய்ங்கெகிட்ட என்ன காட்டமோ ....) . தில்லானா மோகனாம்பா படத்தில் பத்மினி " நலந்தானா " என்று கண்ணாலேயே கேட்பாரே , அது போல நானும் அவனுக்கு கண்ணாலேயே " நன்றி நண்பா " என்றேன்.

 என்ன தோன்றியதோ, அவர்களும், " சரி ஒழுங்கா 10 மணிக்கு வந்து சேருங்க " , (இல்லாட்டா பிச்சுப்பிட்டோம் பிச்சு) என்று (சொல்லாமல்) சொல்லி விட்டுச்  சென்றார்கள். அவர்கள் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம் , எங்க அப்பா சைக்கிளை ( திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டு  குரங்குப் பெடலைப் போட்டுக் கொண்டு எங்க டீமில் உள்ள அனைவரின் வீடுகளுக்கும் சென்றேன். என் நேரம்....பாதிப் பேர் வர முடியாது என்று சொல்லி விட்டார்கள். " எங்க அப்பா விட மாட்டார்டா" " படிக்கணும்டா" " எங்க மாமா ஊரில் இருந்து வந்திருக்கார்டா" " எங்க அம்மாவோட சந்தைக்குப் போகணும்டா" என்று ஆளாளுக்கு ஒரு காரணம். தேறியவர்கள் மொத்தம் ஐந்தே ஐந்து பேர்தான். நல்லவேளை எங்க டீம் கேப்டன் ரவியும் அதில்  ஒருத்தன்.அவன்தான் அந்த ஐடியாவை முதலில் சொன்னான். " ஏண்டா... நம்ம மேட்சுகளில் எல்லாம் பந்து பொறுக்கிப் போடுவார்களே  சுட்டிக் குமார், குட்டை வெங்கடேசு,  முனீசு, மணி ..அவெய்ங்கெளெயும் சேர்த்துக்கிட்டா என்னடா ? " என்றான்.  " என்னடா சீரியஸாத்தான் சொல்றீயா ?" என்றேன். "ஆமாண்டா....வா கூப்பிடுவோம் " என்றான். மேற்சொன்ன பொடியனுகளுக்கு நம்பவே முடியலை. உற்சாகமாகக் கிளம்பினார்கள். 


இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று நாங்களும் ( சோர்வாக)  Ground -  க்குள் நுழைந்தோம். Ground - இல் நுழைந்ததுதான் தாமதம், ராமநகர் டீமின் அனைவரும் எங்களைப் பார்த்து கெக்கலி போட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் ( எங்களுக்கே சிரிப்பாகத்தான் இருந்தது). " டேய் ...முரளி...என்னடா பால்குடி மறக்காத பச்ச புள்ளைங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திருக்க ? நம்ம விளையாடப் போறது கார்க் பால்லடா , லப்பர் பால்ல இல்ல , தெரியும்ல ???" என்று கொக்கரித்தார்கள் ( எங்க ஊர்ல ரப்பரை லப்பர் என்றுதான் ஸ்டைலாக ( ????) அழைப்போம். லப்பர் பால், அழி லப்பர்.....). தெரியும்டா....சின்ன மொளகாய்க்குத் தான் காரம் ஜாஸ்தின்ற மாதிரி ஏதோ சொல்லிச் சமாளித்த ஞாபகம். 


விளையாட்டு ஆரம்பித்தது. டாஸில் அவர்கள் ஜெயிக்க, பேட்டிங் பண்ண முடிவு செய்தார்கள். அவர்கள் விளையாண்டு முடிக்கும்போது கிட்டத்தட்ட 75 ரன்கள் எடுத்திருந்தார்கள். எங்கள்  ஊரில் உள்ள  மர அறுவை மில்லில் செய்த அந்த கனமான பேட்டையும் , கல்லு போல இருக்கும் அந்த கார்க் Ball -  ஐயும் வைத்து 75 ரன்கள் எடுப்பது என்பது ஒரு பெரிய சாதனைதான். அந்த நிமிடமே எங்கள் தோல்வி எங்கள் கண்களுக்குத் மிகவும் தெளிவாகத்  தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போது எங்க  Turn. வழக்கமாக ஆடும் Opening Batsman  அன்று இல்லாதலால், ரவி என்னைப் போய் விளையாடச் சொன்னான். ( நீதான எல்லாத்துக்கும் காரணம். போடா ...போய் விளையாடு). போறேன் எனக்கென்ன பயமா.....என்னோட கெட்ட நேரத்துக்கு , நம்ம  Sri Lanka  மலிங்கா  போன்ற ஒரு கெரகம் கன்னாபின்னா என்று ஒரு  Fast Bowl  போட தலைவன் முதல் பந்திலேயே அவுட். எங்கள் டீமில் நான் ஒன்றும்  Star Palyer  எல்லாம் கிடையாது. இருந்தாலும் எங்கள் டீமில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். சில சமயம், நம் ஒட்டு மொத்த இந்தியாவே சச்சின் டெண்டுல்கரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது , அவர் போன வேகத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் திரும்பிவருவாரே, அப்போது நம் மக்களோட முகத்தில் தெரியும் அதே அதிர்ச்சி, அதே இயலாமை, அதே ஏமாற்றம், எங்கள் டீமிலும் ( என்ன்ன ....சச்சினா ??????? டேய் ...வாணாம்........).

பெவிலியனுக்குத் திரும்பிய என்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. " நான் ரெடியாவதற்குள் போட்டுட்டாய்ங்கெடா" என்றேன் , ஏதாவது பேச வேண்டுமேயென்று. அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. "ம்க்கும்" என்று மட்டும் ஒரு சப்தம் வந்தது, யாரிடமிருந்தோ. 

வேறென்ன...ஒரு 25 ரன் எடுப்பதற்குள்  5 விக்கெட் போயிருந்தன.  எல்லா மக்களையும் அழைத்து ஒரு சின்ன டிஸ்கஷன் பண்ணினோம்....அதைப் பார்த்த ராமநகர் டீம் லேசாகக் கலவரமானார்கள் . எங்கள்  டிஸ்கஷனில் " தோல்வியை ஒத்துக் கொள்வோம்டா "    என்ற பேச்சே பிரதானமாக இருந்தது. எனக்கும் ரவிக்கும் மட்டும் அது மானப் பிரச்சினை. வேண்டாம்டா விளையாடிப் பார்ப்போம் என்றோம். எங்கள் டிஸ்கஷன் நீள்வதைப் பார்த்த இருதயராஜூம் , சரவணனும் , எங்கே,  விட்டால் வெறியோட ( ???) வந்து விளாசித் தள்ளி ஜெயித்து விடுவார்களோ ( ???) என்று பயந்து " என்னடா வரப் போறிங்களா இல்லையாடா....மழை வர்ற மாதிரி இருக்கு " என்று எங்களை விரட்டத் தொடங்கினான். 


அடுத்து  ரவி  களமிறங்கினான். இருதயராஜின் வாய் முகூர்த்தம், ரவி இரண்டு ரன் எடுப்பதற்குள் லேசாகத் தூறல் போட ஆரம்பித்தது.  அதைப் பற்றி நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கவலைப் படவில்லை. மழையே வந்தாலும் ஒரு 5 நிமிடத்தில் எங்கள் வீட்டுக்குப் போய் விட முடியும். ஆனால் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். தேவகோட்டையில் இருந்து ராமநகர் போகும் வழி ஒரு காட்டுப்பாதை. சொல்லிக் கொள்ளும்படி ஒரு கட்டிடமும் கிடையாது. ஒரே மரங்களும் பொட்டல் காடும்தான். மழை நேரத்தில், அதில் குரங்குப் பெடலும், டபுள் பெடலும் போட்டு வீடு போய்ச் சேருவதற்குள் விடிந்து விடும். ராமதுரைதான் முதலில் சமாதானத்திற்கு வந்தது. முடிச்சுக்குவோம்டா. விளையாட்டு ட்ரா என்றான். என்ன்ன்ன்னது ட்ராவா? சான்ஸே இல்லை. இனிமேதான் எங்க மெயினான ப்ளேயேர்ஸ் எல்லாம் விளையாடணும் என்றேன் ( யாரு.....சுட்டிக் குமாரு, குட்டை வெங்கடேசு, மணி மற்றும் முனீசு). அவர்கள் ரொம்ப இறங்கி வந்து, டேய் டேய்...மழை வருதுடா ...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கடா என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். நான் ஒரே பிடியாக மறுத்து விட்டேன். அப்போதுதான் நான் தற்செயலாக எங்க பசங்களைப் பார்க்க, அவர்கள் அனைவரும் என்னை ஒரு கொலை வெறியோடு வெறித்துக் கொண்டிருந்தார்கள். மவனே...அவர்கள் மட்டும் ஒத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடட்டும் , நீ செத்தடா என்று கண்ணாலேயே கவிதை பாடிக் கொண்டிருந்தார்கள்.

 நான் உடனே சுதாரித்துக் கொண்டேன். சரிடா...நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சுறதால கேமை முடிச்சுக்குவோம். ஆனால், திரும்ப திரும்ப நீங்க வந்து வம்பு பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் என்றேன் – என்னோட சேஃப்டிக்கு. நாங்க வேணா சத்தியம் பண்ணித் தாறோம் என்றார்கள். எனக்கு அந்த Proposal  பிடித்திருந்தது. World Cup, 20 -20 மேட்சுகளெல்லாம் முடிந்தவுடன் இரண்டு டீம்களும் எதிர் எதிர் திசைகளில் வந்து கை குலுக்கிக் கொண்டே செல்வார்களே , அதே போல, ஆனால் இங்கு ராமநகர் டீமில் ஒவ்வொருவரும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் சத்தியம் பண்ணிக் கொண்டு சென்றார்கள். சுட்டிக் குமார்தான் அந்த பிட்டைப் போட்டான், அண்ணே...சத்தியம் பண்ணியிருக்கீங்க. நீங்க மட்டும் மாறுனீங்க, நாங்க காசு வெட்டிப் போட்டுடுவோம் பார்த்துக்குங்க என்றான் ( எனக்கு, அன்றும் சரி இன்றும் சரி, காசு வெட்டிப் போடுவது என்றால் என்ன என்றே புரிந்ததில்லை). அப்படி எல்லாம் பண்ண மாட்டோம்டா என்று சொல்லி விட்டு அவர்கள் ஓடியே போய் விட்டார்கள் ( அவர்கள் அவசரம் அவர்களுக்கு). பின்னால் அவர்கள் எங்கள் வழியில் குறுக்கிடவேயில்லை.

பந்து பொறுக்கிப் போடும் பொடியனுங்களுக்குத்தான் ஒரே வருத்தம் – ஒரு நல்ல சான்ஸ் போயிடுச்சேன்னு. அவர்களை ரொம்ப புலம்ப விடாமல் கூட்டி வந்து விட்டோம்.

இப்பப் புரியுதாங்க எனக்கு மழைன்னா ஏன் ரொம்பப் புடிக்குதுன்னு.


வெ. பாலமுரளி.


பி.கு: இந்த டைரிக்கு  “வீழ்வேனென்று நினைத்தாயோ” தலைப்பை எடுத்ததற்கு பாரதியார் மன்னிக்க வேண்டும். 

Wednesday, 28 August 2013

முள்றியின் டைரி 18: என் ICU அனுபவங்கள்:


முள்றியின் டைரி 18:
என் ICU  அனுபவங்கள்:

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வெச்சார் வள்ளுவரு சரிங்க...
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு....

என்ற கண்ணதாசனின் பாட்டு ஒன்று உண்டு. ரொம்ப கரெக்ட்.  நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, உட்கார்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியே சிரித்தாலும்,  நம்மை வேறு ஒரு லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள். ஆனால், அதேசமயம், அந்தப்  பிரச்சினை முடிந்து கொஞ்ச நாள் கழித்து அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தால், விழுந்து விழுந்து சிரிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு சின்ன புன்னகையாவது நம் முகத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.

2007 – எனக்கு ஒரு கேவலமான வருடம். ஒரு நாள், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி. நாம் இன்று ஏதாவது வாய்வு ஏற்படுத்தும் சாப்பாடு ஏதேனும் சாப்பிட்டோமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். வாழைக்காய் பொறியல் சாப்பிட்ட ஞாபகம் வந்தவுடன் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தேன் ( நான்தான் முன்னயே சொல்லியிருக்கேன்ல, நாங்கல்லாம் ரொம்ப   ப்ரைட்டுன்னு). ஆனால் வலி வேறு மாதிரி இருந்தது. நண்பர்கள் சிலரின் யோசனையால் நேரே Nairobi Hospital சென்றேன். நம்ம ஊர் Apollo Hospital மாதிரி இங்கு Nairobi Hospital. இந்த நாட்டு President, Vice President, Prime Minister, பாலமுரளி போன்ற பெரிய மக்கள் போகின்ற Hospital ( ஹி…ஹி... ஹி...ச்சும்மா  டமாசு…..).

நான் போய்ப்  பார்த்த டாக்டர், பரேஷ் பட்டேல் என்னும் ஒரு இந்திய வம்சாவளி டாக்டர். ஏகப்பட்ட டெஸ்ட்டுகள் எடுத்து விட்டு, உங்களுக்கு கண்டிப்பாக இதயத்தில் அடைப்பு உள்ளது. அதன் Severity தெரியாதலால் உடனே ஆஞ்சியோ எடுத்துப் பார்த்து விட வேண்டும் என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வைத்து விட்டார் ( நான் ரொம்ப  ப்ரைட்டுன்னு முன்னால் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்).  மறுநாள் காலை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிப் போய் விட்டார்கள்.

சும்மா சொல்லக் கூடாது, ஆபரேஷன் தியேட்டர், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ரொம்ப கலை ரசனையுடைய ஒரு பணக்காரரின் Reading Room போல அமர்க்களமாக இருந்தது ( Don’t judge a book by its cover என்று என் பெண் அடிக்கடி சொல்லும் பழமொழி ஏனோ அன்று எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை). அசந்து விட்டேன் ( நான் ஏன் இவ்வளவு ரசித்து சொல்கிறேன் என்பது பின்னால் உங்களுக்குப் புரியும்). நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று Procedure – ஐ விளக்கினார்கள் ( இங்கு அது ஒரு பொதுவான Practice . சில சமயம் கொஞ்சம் டூ மச்சாக விளக்கி நம்மை பயமுறுத்தியும் விடுவார்கள்).

கொஞ்ச நேரத்தில் தொடையில் ஒரு ட்யூபை சொருகி ஒரு டையை செலுத்தினார்கள். அந்த ‘டை’ இதயத்தில் உள்ள அடைப்புகளை எல்லாம் தனிப்படுத்திக் காட்டிவிடும் என்று எனக்குச் சொல்லியிருந்தார். ஏனோ என் கேஸில் அது வேலை செய்யவில்லை. அவருக்கோ பயங்கர ஷாக். உடனே டாக்டர். கரியூக்கி என்பவருக்கு ஃபோன் பண்ணி அழைத்தார். டாக்டர் கரியூக்கி ரொம்ப சீனியர் போலிருக்கு. வந்த ஒரிரு நிமிடத்திலேயே விஷயம் என்ன என்று கண்டு பிடித்து விட்டார்.  இது Blood Clot. அதை க்ளியர் பண்ணாமல் Blockage – ஐப் பார்க்க முடியாது என்று ஒரு புத்தகத்தை எடுத்து அவருக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டார் ( Yes…எனக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிய போது ஏற்பட்ட அதே அனுபவம்). இது போல விஷயங்கள் எனக்கு மட்டும்தான் நடக்குமா, இல்லை ரொம்பப் பேருக்கு நடக்குமா என்ற குழப்பத்தில் நான் கண்ணை மூடிப் படுத்திருந்தேன்.  அதைக் கரைக்காமல் ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் “ பேக் அப்” ( ???) என்று சொல்லி என்னை ICU – விற்கு அனுப்பி விட்டார்கள்.

அதைக் கரைப்பதற்காக மருந்து கொடுத்து விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக் கொண்டு போய் Blood Clot கரைந்து விட்டதா என்று செக் பண்ணினார்கள். கரையவில்லை என்றதும் திரும்ப ICU –விற்குக் கூட்டி வந்து விடுவார்கள்.  ஒவ்வொரு முறையும் அதே  Procedures…எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது....சில சமயம் நானே கூட அவர்களை ஞாபகப் படுத்தியதும் உண்டு – என்ன இன்னைக்கு ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போகவில்லையா என்று. கிட்டத்தட்ட 10, 15 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கே இந்த நாடகம் போரடித்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக Ballooning என்னும் ஒரு ப்ராசஸ் மட்டும் பண்ணி விட்டு என்னை Discharge செய்து விட்டார்கள். மறுபடியும் வலி வந்தால் உடனே வந்து விடுமாறும், இன்னும் ஒரு வாரத்திற்கு எங்கேயும் ட்ராவல் பண்ண வேண்டாமென்றும் அட்வைஸ். நான் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.
உடனே ஆளாளுக்கு “ நான்தான் அப்பவே சொன்னேன்ல இந்தியா போகச் சொல்லி” என்று அட்வைஸ் மழை. நாமாகப் போகாவிட்டால் இவெய்ங்கெளே நம்மை பார்சல் பண்ணி அனுப்பி விட்ருவாய்ங்கென்னு நானும் உடனே கிளம்பி விட்டேன். இந்தியாவுக்குப் போய்ப் பார்த்தாத்தான் தெரியுது, நைரோபியே தேவலை என்று. அவ்வளவு கேலிக் கூத்துகள்.

இந்தியாவில் நான் போய் இறங்கிய இடம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை. அந்தக் காலத்தில் வாரச் சந்தை என்று ஒன்று நடக்கும். இப்ப உள்ள  Generation அதையெல்லாம் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி யாரேனும் பார்த்ததில்லை என்று வருத்தப் பட்டால், உடனே மதுரை மீனாட்சி  மிஷனைப் போய் பாருங்கள். வாரச் சந்தை என்றால் என்ன என்று புரிந்து விடும். அப்புறம் எதுக்கு ராசா அங்க போன என்கிறீர்களா? சில தவறான கணக்குகள்தான்....வேறென்ன. வீட்டிற்குப் பக்கத்தில் உள்ளது. அங்கு உள்ள Senior Cardiologist  எங்கள் உறவினர். So, Special Treatment கிடைக்குமே என்ற ஒரு நப்பாசை.

அவர், நான் நைரோபியிலிருந்து கொண்டு போன மெடிக்கல் ரிப்போர்ட்டை எல்லாம் பார்த்து விட்டு, உடனே ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போய் விட்டார். நான் இந்த இடத்தில் அந்த ஆபரேஷன் தியேட்டரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சென்னையில் ஒரு தெரு முழுக்கக் காயலான் கடைகளாகவே இருக்குமே – அது என்ன பெயர், கண்ணம்மா பேட்டையா சௌகார்பேட்டையா? எனக்கு அது போல ஒரு தெருவுக்குள் நுழைந்த மாதிரியே ஒரு ஃபீலிங். ஏதோ, முரளி வர்றாரு, முரளி வர்றாரு இடத்தைக் கொஞ்சம் க்ளீன் பண்ணுங்க என்று யாரோ
சொன்னாற்போல கொஞ்சூண்டு இடத்தை மட்டும் ஒதுக்கி ஒரு ஆபரேஷன் டேபிளைப் போட்டு வைத்திருந்தார்கள். இந்த ( அவ) லட்சணத்தில் ஏ.ஸி. வேற. எனக்கு லேசாக உதறல் எடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கோழி குருடாயிருந்தா என்ன, நமக்கு குழம்புதானே முக்கியம் என்று என்ன நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நைரோபியில் ஆஸ்பத்திரி சூப்பர், ஆனால் வைத்தியமோ.... ???? நம்ம இந்தியாவில் எதிர்மறை போலிருக்கு என்று நினைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன்.

வழக்கமான ( ????) Procedures. டையை செலுத்திய சில வினாடிக்குள்ளாகவே, இதயத்தில் உள்ள அடைப்புகள் எல்லாம் “உள்ளங்கை நெல்லிக்கனி” போல தெள்ளந் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது ( கொஞ்சம் டூ மச் செந்தமிழோ? ). நம்ம தமிழ்ப் படங்களில் எல்லாம் “ Congratulations !!  நீங்க அப்பாவாயிட்டீங்க “ என்று ஒரு டாக்டர் சந்தோஷமாகச் சொல்லுவாரே, கிட்டத்தட்ட அதே டோனில், “ Very Good. உங்களுக்கு 4 Blockages இருக்கு “ என்றார் (ஏண்டா Blockages – க்கெல்லாம் இந்த டோன் கொஞ்சம் ஓவர்னு உங்களுக்கே தெரியலை? ). சரி டாக்டர்.... என்ன செய்யலாம் என்றேன் ( கேக் வெட்டச் சொல்லுவாரோ?). நான் என்னவோ ரொம்ப கவலைப்படுகிற மாதிரி, “ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைங்க முரளி. ஸ்டெண்ட் வைத்து சரி பண்ணி விடலாம்” என்றார். இந்த இடத்தில்தாங்க என் ரியல் கிரகம் வேலை செய்ய ஆராம்பித்தது.

பக்கத்தில் உள்ள ஒரு நர்ஸை அழைத்து, “ கௌரி, நம்பர் 2, 5, 6 , 7 ஸ்டெண்ட் எடுத்திட்டு வாம்மா” என்றார். அந்த கௌரியோ நகர்வது போலத் தெரியவில்லை. அவர் திரும்ப ஒரு முறை “ போம்மா போய் எடுத்திடு வா” என்றார், இந்த முறை கொஞ்சம் சூடாக. அந்த கௌரி ரொம்ப மெதுவாக “ ஸ்டெண்ட் டெலிவரி எடுக்கப் போன நம்ம தாமு இன்னும் வரலை சார்” என்றது. என்ன தா.......மு.....வரலையா ? என்றார் அதிர்ச்சியாக – நான் அருகில் இருப்பதை மறந்து போய். ஃபோனைக் கொண்டு வா என்றார். திடீரென்று என்ன நினைத்தாரோ, இந்தா வந்துர்றேன் முரளி என்று சொல்லி விட்டு, பக்கத்து அறைக்குச் சென்றார். அவர் அங்கிருந்து பேசுவது எனக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது ( இதுக்கு ஒழுங்கா ஆபரேஷன் தியேட்டரில் இருந்தே பேசியிருக்கலாம்). ஃபோனில் தாமு என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால், நம்ம S.Ve. சேகர் நாடகத்தில் வருவது போல மறு பக்கத்தில் பேசுவதை இவர் திரும்ப ஒரு முறை சொல்லி சரி பார்த்து விட்டுத் திட்டிக் கொண்டிருந்தார். “ எங்கடா இருக்க?” “ என்ன டீக்கடையில இருக்கியா ?” “ ஏண்டா பன்னு திண்ணு காப்பி குடிக்கிற நேரமாடா இது” “ சரி, வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்?” “ என்ன அரை மணி நேரமாகுமா?” “ ஏண்டா , இங்க நான் ஒரு உயிரோட போராடிக்கிட்டிருக்கேன், உனக்கு அங்கே பன்னும் காப்பியும் கேட்குதா ( ???????) ?” . எனக்கு அந்த ஏ.ஸி.யிலும் வியர்த்து ஊற்றுவதைத் தடுக்க முடியவில்லை. அவர் அத்தோடு நிற்கவில்லை. “ என் பேஷண்டுக்கு மட்டும் ஏதாவது ஓண்ணு ஆச்சு, மவனே உன்னை நடு ரோட்டுல வச்சு வெட்டியே கொன்னுடுவேண்டா “ என்றார் உச்சஸ்தாயில். எனக்கு வியர்வையோடு கை காலும் லேசாக நடுங்க ஆரம்பித்தது. உடனே என் அறைக்குள் வந்தவர் “ இது வேற ஒரு பிரச்சினைங்க   முரளி” என்றார்  ( கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்கெ). பிறகு  அவரே நேராக ஸ்டோருக்குப் போய் ஸ்டாக்கில் இருக்கிற ஸ்டெண்டை எடுத்து வந்தார் ( 7 ம் நம்பர் இல்லாவிட்டால் என்ன, அதான் நம்மகிட்ட  10 – ம் நம்பர் ஸ்டாக்ல  இருக்குல்ல ...). அந்தக் குளறுபடியில, ½ மணியில முடிகிற ஆப்ரேஷன் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது. ஒரு வழியாக என்னை CICU – வில் கொண்டு போய் வைத்தார்கள். என்னைத் தவிர அங்கு இருந்தவர்கள் எல்லோருமே ரொம்ப வயதானவர்கள். கிட்டத்தட்ட எல்லோருக்குமே பை பாஸ் பண்ணியிருந்தார்கள். கிராமத்தில் இருந்து வந்திருப்பார்கள் போலிருக்கு.  ஆனால், சர்வ சாதாரணமாக லோ ஷூகர், ஹை ஷுகர், LDL, HDL என்று  பேசிக் கொண்டிருந்தார்கள் ( இப்பல்லாம் கிராமங்களில் ரொம்ப முன்னேற்றம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்).

எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலித்ததா இல்லை ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ட்ராமாவினால் நெஞ்சு வலி போன்ற ஒரு பிரமையா என்று இனம் பிரிக்க முடியவில்லை. ஆனால் அந்த இரவு முழுவதும் ஒரு மூச்சுத் திணறலும், வலியும் இருந்து கொண்டே இருந்தன. உடனே டாக்டரைப் பார்த்து என் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். ஏனோ அங்கிருந்த Sisters  யாரும் அந்த நேரத்தில் டாக்டரை அழைக்க மறுத்து விட்டார்கள் ( திட்டுவார் சார்...). காலில் ஒரு பெரிய Bandage போட்டிருந்தலால் , காலை கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது என்று வேறு கண்டிசனாகச் சொல்லி விட்டார்கள். அதுதான் உள்ளதிலேயே ரொம்பக் கொடுமையாக இருந்தது. இரவு முழுவதும் அந்த அவஸ்தையில் இருந்து விட்டு, நான் எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவியல்லை. கண் விழித்துப் பார்க்கும்போது காலை 7 மணியாகி இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து விடுவார் என்று ராஜாவிற்கு பராக் சொல்வது போலச்  சொன்னார்கள். என்னால் அவரைப் பார்க்கப் போகும் பரபரப்பை ( ?????) கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.

எங்க மதுரைப் பக்கம், டாக்டர்களும் நோயாளிகளும் பேசிக் கொள்வதைப் பார்க்க வேண்டும். ஏதோ குடும்ப மெம்பர்கள் பேசிக்கொள்வது போலவே ரொம்ப தமாஷா இருக்கும். நான் இதற்கு முன்பே சில முறை அதைப் பார்த்திருந்தாலும், இந்த முறைதான் அதை பொறுமையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
டாக்டர் வந்ததும் நேரே ஒரு முதியவரிடம் போனார். “ என்ன பெரிசு...எப்படி இருக்கு” என்றார் பொத்தாம் பொதுவாக. அதற்கு அந்தப் பெரியவர் “ எதக் கேக்குற ?” என்றார் கொஞ்சம் விட்டேத்தியாக. டாக்டருக்கு சுர்ரென்று ஏறி விட்டது “ ம்ம்ம்ம்ம்...உங்கிட்ட நான் என்ன பொண்ணா கேட்கப் போறேன். நேத்து பைபாஸ் பண்ணோம்ல. அதுதான் எப்படி இருக்கு என்று கேட்கிறேன்” என்றார். அந்த இடம் லேசாகச் சூடேறியது. பெரியவர் ரொம்ப அஸால்ட்டாக “ ஒரு வித்தியாசமும் இல்ல. அப்படியேதான் இருக்கு” என்றார். டாக்டருக்கு ரொம்ப கோபமாகி விட்டது” ஏன் பெரிசு...விழுந்து விழுந்து ( ??????) பை பாஸ் பண்ணியிருக்கோம் கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியலேன்ற? “ என்று ஒரு எரிச்சலோடு சொல்லி விட்டு, அடுத்து ஒரு பாட்டியிடம் சென்றார். “ என்ன பாட்டி, எப்படி இருக்கீங்க ?” என்றார். அந்தப் பாட்டி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ சொன்னா நம்ப மாட்ட,  அந்தப் பெரியவருக்கு மாதிரிதான், எனக்கும் ஒரு வித்தியாசமும் தெரியல” என்றது. அவரு ரொம்ப டென்ஷனாகிட்டாருங்க. “ என்ன எல்லோரும் சொல்லி வச்சுட்டு வந்திருக்கீங்களா” என்று எகிறினார். சொல்லி விட்டு அவரும் விடல. “ அது சரி, இப்ப இருக்கிற உன் உடல் நிலைக்கு 10 மார்க் போடச் சொன்னா எத்தனை மார்க் போடுவ பாட்டி என்றார் ?”. நான் நோயாளிகளிடம் இந்த மாதிரி யாரும் ஒரு Assessment Report கேட்டுப் பார்த்ததில்லை. So, நான் என் வலியை மறந்து அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாட்டி இந்தக் கேள்வியைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்கும் போல. உடனே, “ 8 மார்க் போடுவேன்” என்றது. டாக்டரோடு சேர்ந்து எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் அசந்து விட்டார். “ அடேங்கப்பா 80%. இதுக்கு மேல என்ன வேணும்” என்று கேஷுவலாகச் சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.

அந்த நேரம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் வந்தது ( ICU – வில் மொபைல் ஃபோன், லேப்டாப் எல்லாம் அனுமதியில்லை என்று அங்கிருந்த போர்டு, நோயாளிகளுக்கு மட்டும்தான் போலிருக்கு). தான் ICU – வில் இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், ரொம்ப சத்தமாக பேச ஆரம்பித்தார். “ ம்ம்ம்.....சொல்லுங்க சிவா” என்றார். “ என்ன ..மல்ட்டி விட்டமினா?” “ COBADEX  போடுங்க... நல்லது “ என்றார். அவர் சொன்னது சிவாவுக்குக் கேட்கலை போலிருக்கு. COBADEX –ஐ இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார். அப்படியும் சிவாவுக்கு சரியாகக் கேட்கலை. “ C for Cake, O for Orange, B for Ball, A for Africa, D for Donkey E for Elephant, X for X Ray”  என்றார்.
சிவா, மாத்திரை பெயர் ரொம்ப நீளமாக இருக்கே என்று சொல்லியிருக்க வேண்டும். “ என்ன மாத்திரை பேர் நீளமா ???? என்னய்யா எழுதினே” என்றார் பயங்கர கோபத்துடன். “ என்ன  Cake orange Ball Africa…வா ??? மூதேவி மூதேவி....நான் சொன்ன வார்த்தையில் எல்லாம் இருக்க முதல் எழுத்தை மட்டும் எழுதச் சொன்னேன்யா. நீயெல்லாம் என்னத்தைய்யா படிச்சிருக்க. வைய்யா ஃபோனை” என்று Literally கத்தினார் உச்சஸ்தாயில். “ இன்னிக்கு என்னமோ தெரியல... எல்லாம் ஒரே கெரகமா வந்திருக்கு” என்று புலம்பிக் கொண்டே என்னிடம் வந்தார். “ சொல்லுங்க முரளி உங்களுக்கு எப்படியிருக்கு” என்றார் ஒரு விரக்தியும் எரிச்சலும் கலந்த டோனில்.

நான் இங்க வர்றதுக்கு முதல் நாள் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன் சார் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு “ சூப்பர் சார். செம Improvement” என்றேன். (அவருக்கு இருந்த கடுப்பில், நான் மட்டும் உண்மையைச் சொல்லியிருந்தால், பளார் என்று ஒரு அறை விட்டிருப்பார் ). அவருக்கு உடனே வாயெல்லாம் பல்.

“ I Know …I know…நான்தான் சொன்னேன்ல, ஸ்டெண்ட் வச்சா எல்லாம் சரியாயிரும்னு. இன்னும் இரண்டு நாளில் Discharge ஆயிடலாம். ஆனால் ஒரு 2 வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு , பிறகு கென்யா செல்லுங்கள், சரியா ?” என்றார். சரி சார்...என்று பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டினேன்.

இனி எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போவது என்று யோசித்துக் கொண்டே மீனாட்சி மிஷனை விட்டு Discharge  ஆனேன்.

வெ.பாலமுரளி.

பி.கு. " இவனுக்கு ஜாதகத்தில்தான் ஏதோ கோளாறு" என்று நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது.