Sunday, 10 June 2012முள்றியின் டைரி - 12

என் முதல் Photography Workshop அனுபவம்இது நடந்தது 1997 என்று ஞாபகம். நைரோபியில் எங்கள் கென்யா தமிழ்ப் பண்பாட்டு மன்றம் சார்பாக அறிவியல் மன்றம் ஒன்று நடத்தலாம் என்று முடிவு செய்யப் பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரு பொது இடத்தில் கூடி யாராவது ஒருவர் அவருக்குத் தெரிந்த சப்ஜெக்ட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் ஐடியா.

முதல் வாரம் நண்பர் ஷண்முகசுந்தரம் கம்ப்யூட்டரைப் பற்றிப் பாடம் எடுக்க, இரண்டாவது வாரம் நண்பர் இளங்கோவன் ISO 9000 பற்றிப் பாடம் எடுக்க, நன்றாகத்தான் ஆரம்பித்தது. மூன்றாவது வாரம்தான் சிக்கல் முளைத்தது - யாரும் முன்வராதலால். இளங்கோதான் முதலில் அந்த பிட்டைப் போட்டார். முரளி, நீங்கதான் கொஞ்சம் சுமாராக (????) ஃபோட்டோ எடுக்குறீங்களே, நீங்க ஏன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி ஒரு செஷன் எடுக்கக் கூடாது என்று. நான் முதலில் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அட போங்க சார், எனக்கு அதெல்லாம் வராது என்று தவிர்க்க முயன்றேன்.

அவரும் விடாமல், உங்களால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும் முரளி என்று உசுப்பி விட்டார் ( இந்த மாதிரி உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் நண்பர்கள் எல்லா ஊரிலும் உண்டு போலிருக்கு). ஆனால், அந்த ஒரு நிமிடம் நான் ஜிவ்வென்று பறந்ததென்னவோ உண்மை. சிறிது நேரம் யோசித்து விட்டு நானும் சரி என்று சொல்லி விட்டேன்.

அடுத்த ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு என்று முடிவு செய்யப்பட்டது (மதியமா என்று தயக்கமாக என்னுடைய பட்சி கேள்வி கேட்டது). அதற்குள் மன்ற உறுப்பினர்கள் அனவைருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதால், என்னால் ஒண்ணும் பண்ண முடியவில்லை. சரி நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

அப்போதுதான் Windows 95  பாப்புலராக ஆரம்பித்த சமயம். Power Point – இல் பிரமாதமாக ஒரு Presentation தயார் பண்ணினேன். அந்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது….நண்பர் இளங்கோ புண்ணியத்தில் கிட்டத்தட்ட 30 பேர் வந்திருந்தார்கள். கொஞ்சம் டென்ஷன், கொஞ்சம் சந்தோஷத்துடன் என்னுடைய Presentation – ஐ ஆரம்பித்தேன்.

ஆரம்பித்து சிறிது நேரம்தான் ஆகியிருக்கும் பாருங்கள், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் முதல் பெஞ்சில் உட்கார்ந்து நன்றாக குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட்டார். எனக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது. சரி, பரவாயில்லை, அவருக்கு என்ன அசதியோ, என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு என்னுடைய Presentation –ஐத் தொடர்ந்தேன்.

அவ்வப்போது மற்ற மக்களோட Reaction –ஐயும் பார்தேன். எல்லோரும் எதையோ பறி கொடுத்த மாதிரி என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு படத்தில் மன்சூர் அலிகான் புலம்புவதாக ஒரு வசனம் வரும்.  “ இவய்ங்கெ என்ன Reaction கொடுக்கறாய்ங்கென்னே தெரியலயேன்னு”. எனக்கு அந்த வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது.

அதற்காக நானும் விடவில்லை. SLR, Aperture, Shutter Speed, ISO, Lens என்று பிரித்து மேய்ந்து விட்டேன். ஒரு இரண்டு மணி நேரம் - ( எனக்கு) நேரம் போனதே தெரியவில்லை. முடிக்கும்போது எனக்குப் பெருமிதம்னா அப்படி ஒரு பெருமிதம். முரளி கலக்கிட்டேடா என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

அதுசரி, எல்லாமே நல்லாத்தானே போயிருக்கு, அப்புறமென்ன ராசான்றீங்களா? இருக்கு….இனிமேத்தானே கதையே இருக்கு.

Prsentation முடித்தவுடன், எல்லோரையும் பார்த்து ஒரு Flat Look விட்டேன். முதல் பெஞ்சில் ஒரு நண்பர் தூங்கிக்கிட்டிருந்தார்னு சொன்னேன்ல. அவர்தான் முதலில் (தூக்கம் கலைந்து) சுதாரித்து எழுந்து வந்தார். அப்படியே என்னை ஆரத்தழுவி, முரளி, Superb. ரொம்ப நாளாச்சு இப்படி…….என்று ஏதோ சொல்ல வந்து அப்படியே விட்டு விட்டுப் போய் விட்டார் ( Yes..You are Right. “ ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு தூக்கம் போட்டு” என்றுதான் சொல்ல வந்திருக்க வேண்டும்). அப்போல்லாம் நான் ரொம்ப பல்பு வாங்கி பழக்கம் இல்லாதலால், திருவிழாவில் காணாமப் போன புள்ள (???) மாதிரி திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தேன்.

மற்ற எல்லோரும் சம்பிரதாயமாக  வந்து நல்லாயிருந்தது, Good, Well Done என்று சொல்லி கை கொடுத்து விட்டுப் போனார்கள்.

சரி எல்லோரும் போய் விட்டார்கள் என்று பார்த்தால், என் நண்பர் சுந்தர் மட்டும் மீதமிருந்தார். அவர் கண்கள் எல்லாம் கலங்கி, முரளி உங்க Presentation ரொம்ப ரொம்ப நல்லாயிருந்தது. என்ன…கொஞ்சம் புரிகிறமாதிரி எடுத்திருக்கலாம் என்று ஒரு சிக்ஸர் அடித்து விட்டுப் போய் விட்டார்.

வெ.பாலமுரளி