Saturday, 19 October 2013

முள்றியின் டைரி 20 : நாங்க வம்பை விலை கொடுத்து வாங்குவோம்ல...

சம்பவம்: 1


1988 – இல் எங்க அப்பா இறந்ததற்குப் பிறகு எனக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் எங்க சுந்தர் மாமாவும் அவர்கள் குடும்பமும்தான். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு இந்தியா வரும்போதும் அவர்கள் வீட்டில் ஜாலியாக ஒரு 10 நாட்கள் டேரா போட்டு விடுவேன். ஊர் சுற்றுவது , ஜாக்கி சான் படம் பார்ப்பது, அடையாறில் உள்ல ஷீலா ரெஸ்ட்டாரெண்டில் சாப்பிடுவது எல்லாம் எங்கள் பிடித்தமான பொழுது போக்குகள். என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.

அது மாதிரி ஒரு முறை அங்கு தங்கியிருக்கும்போது ( 1990 என்று ஞாபகம்) , ஒரு நாள் காலையில் சுமார் 9 மணியளவில், அவர்கள் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டின் பால்கனியும் எங்கள் வீட்டு பால்கனியும் அருகருகே தெரியும். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தேன். அவர்கள் வீட்டின் பால்கனி கதவு லேசாக திறந்திருக்க , உள்ளே ஒரு ஆள் எசகு பிசகா கீழே விழுந்து கிடந்தது தெரிந்தது. முதலில், சரி...தலைவர் ஏதோ மப்பில் இருக்கிறார் போலிருக்கு என்று நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன். திரும்ப ஒரு முறை உற்றுப் பார்க்கும்போதுதான் தெரிந்தது அவர் வாயில் இருந்து நுரை தள்ளியிருந்தது.

ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. உடனே எங்க மாமாவை அழைத்தேன். அன்று அவருக்கு State Planning Commission – இல் CM – உடன் மீட்டிங் என்று பர பரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தார். விஷயத்தைச் சொன்னவுடன், அந்த வீட்டில் ஒரு வட இந்தியர், தன் குடும்பத்துடன் ஏதோ பிரச்சினை என்று தனியே வந்து இங்கு வாடகைக்கு தங்கியிருப்பதாகச்  சொன்னார். மற்றபடி அந்த ஆளைப் பற்றி  அங்கு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. சரி மாமா,  நான் போய் ஏதாவது பண்ண முடியுமா என்று பார்க்கிறேன் என்றேன். “ முரளி ஜாக்கிரதை. சென்னை, உங்க ஊர் மாதிரி கிடையாது. ஏதாவது ஒண்ணுன்னா போலீஸ் கோர்ட்டுன்னு அலைய விட்டு விடுவார்கள். நான் அவசரமாக கிளம்ப வேண்டும் . ஏதாவது உதவி வேண்டுமென்றால் உடனே ஃபோன் பண்ணு” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

அக்கம்பக்கத்தில் யாரும் உதவிக்கு வரப்  பயந்தார்கள். சக்தி என்னும் ஒரே ஒரு இளைஞர் மட்டும் முன் வந்தார், வாங்க சார் என்னனு பார்க்கலாம் என்று. அவர் உதவியுடன் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தோம். வீடு முழுதும் ஏதோ ஒரு பூச்சி மருந்து வாடை வந்தது. உயிர் இருக்கிற மாதிரி தான் தெரிந்தது. சக்தி உதவியுடன் அவரைத் தூக்கி ஒரு ஆட்டோவில் ஏற்றினோம். அந்த ஆட்டோக்காரர் எங்க மாமாவிற்குத் தெரிந்தவர் என்பதால் ஒன்றுமே கேட்காமல் வந்து விட்டார். “ சக்தி, வீட்டுக்கு வந்து கைலியை மாற்றி விட்டு பேண்ட் போட்டுட்டு போடா” என்று அவர் அம்மா குரல் கொடுக்க, கைலியை மற்றப் போன சக்தி திரும்ப வரவேயில்லை. சரி இனி அவருக்காக காத்திருந்தால் சரி வராது என்று நான் மட்டும் கிளம்பினேன்.
இந்திராநகரில் ஒரு மருத்துவ மனைக்குச் சென்றோம். அங்கு இருந்த ஒரு மருத்துவர், இவர் யார், பெயர் என்ன, இவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம், ஏன் இவர் பூச்சி மருந்து சாப்பிட்டார் என்று ஏராளமான கேள்விகள். அவர் கேட்ட எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாதலால், அவர் என்னை சந்தேகமாகப் பார்த்தார் ( ப்ளீஸ் டாக்டர் என்னை அந்த மாதிரிப் பார்க்காதீங்க. நான் அந்த மாதிரி ஆளில்லை).

சார் இவருக்கு உயிர் இருக்கு. ஆனால் எந்த விவரமும் இல்லாமல் எங்களால பார்க்க முடியாது. ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால் போலீஸுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாது சார்  என்றார். எனக்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. என்ன டாக்டர், ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது  இவ்வளவு Rules & Regulations  பேசுகிறீர்களே, இது நியாயமா  என்றேன் , சற்று காட்டமாக. என்ன சார் செய்வது நாங்கள் சந்தித்த பிரச்சினைகள் அந்த மாதிரி என்றார் சற்றே பரிதாபமாக. சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, சரி சார் நான்  Treat  பண்ணுகிறேன், ஆனால் ஒரு கண்டிஷன் என்றார் சற்றே கீழே இறங்கி வந்து. என்ன டாக்டர் என்றேன். நான் சொல்லுகிற  வரை நீங்கள் எங்கேயும் போகக் கூடாது, சரியா என்றார் - கிட்டத்தட்ட பிணையக் கைதி மாதிரி. கிட்டத்தட்ட என்ன கிட்டத்தட்ட , பிணையக் கைதியேதான். நானும் வேலை ஆனால் சரிதான் என்பதால் ஒத்துக் கொண்டேன்.

சாருக்கு ஏதாவது வேண்டுமானால் பார்த்துகுங்க என்று 2 சிஸ்டரைப் பார்த்து கண்ணாலேயே சைகை காண்பித்து விட்டு நம்ம சூசைட் பார்ட்டியோடு உள்ளே போய் விட்டார். அந்த 2 சிஸ்டர்களும்  கிங்கரர்கள் மாதிரி  என்னை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை. எனக்கு நேரம் ஆக ஆக நல்ல பசி வேறு. இதற்கு இடையில்  எங்க மாமா பையன் கார்த்திக் வந்து, வாங்க மாமா,  வீட்டுக்கு வந்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போங்க என்றான் என் நிலைமை புரியாமல்.  இல்லப்பா பசிக்கவில்லை என்று அவனை அனுப்பி விட்டு மறுபடியும் காத்திருந்தேன். 

கிட்டத்தட்ட மதியம் 3 மணியளவில் டாக்டர் வெளியே வந்து, பேஷண்ட் அபாயகர நிலையைத் தாண்டி விட்டதாகவும், இனி நான் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு மாலை வரலாம் என்று  Release Order  கொடுத்தார். 
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள்  யாருமே எனக்கு எந்த  அப்டேட்டும் பண்ண மறுத்து விட்டார்கள். அந்த 6 மணி நேரமும்  எனக்கு சரியான மன உளைச்சல். எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவது கருமம்டா, கருமம் புடிச்சவனே என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.  
அன்று மாலை நானும் எங்க மாமாவும் அவரைப் பார்த்து விட்டு வரப் போனோம். எங்களைப் பார்த்தவுடன்  அவர் தன் மூஞ்சியை வெடுக்கென்று மறு புறம் திருப்பிக் கொண்டது தனிக் கதை.
 
சம்பவம் 2 :
1993 - இல் நான் கொஞ்ச நாள் பாம்பேயில்  Vinod House Wares - இல் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை, பாம்பேயில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பால்கர் என்னும் ஒரு சிறிய ஊரில். அந்த ஊருக்கு யாருமே வேலைக்குப் போக மாட்டார்கள் போலிருக்கு. என்னைப் போன்ற ஒரு பொடியனுக்கு தனியே ஒரு வீடு கொடுத்து, யமாஹா பைக் கொடுத்து, மூன்று வேளை சமைத்துப் போடுவதற்கு ஒரு சமையற்காரரையும் கொடுத்து ராஜா மாதிரி வைத்திருந்தார்கள் ( ம்க்கும் ). ஒரு நாள் என்னுடைய  சமையற்காரார் இரண்டு நாள் லீவு எடுத்து விட்டு தன் சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.  Yes...you are right by guessing that he was sent by my close friend Mr. 7 1/2.

முதல் நாள் மாலை, பொழுது போகாமல் ( ?????) அங்கு உள்ள ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து சென்று அங்கு உள்ள ஒரு உடுப்பி ரெஸ்டாரெண்டில்   இரவு உணவை முடித்து விட்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன். என்  Factory - க்கு வரும் வழியில் மங்கலான விளக்குகள் மட்டும் இரண்டோ மூன்றோ இருந்தன. அங்கு ஒரு மெயின் ரோட்டில்  ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒரு  முதியவரை, ஒரு  ஐந்தாறு பேர் ஏதோ வம்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை ஒரு 30 - 40 பேர் கொண்ட  கும்பல் ஒன்று  மிகவும் நெருக்கமாக நின்று  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் மராத்தியில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில்,   எனக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போகத்தான் நினைத்தேன். நான் அவர்களைக் கடக்கப் போகும் சமயம் நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத தருணத்தில்  அந்த முதியவரை அந்த ஐந்தாறு பேருடன் சேர்ந்து அந்த பெரிய கும்பலும் கன்னா  பின்னா என்று தாக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஒரு நொடியில் என்ன  செய்வதென்றே தெரியாமல்,  " ஏண்டா ஒரு பெரியவரைப் போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்" என்று 'ஹிந்தியில் ' சத்தம் போட்டுக் கோண்டே அவர்களுக்கு குறுக்கே போய் விழுந்து கையில் கிடைத்த ஒரு நாலைந்து பேரைத் தள்ளி விட்டேன் .

அவர்களுடைய விஷயத்தில் நான் தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததலால் அவர்களுக்கு கோபம் வந்ததா, இல்லை நான் பேசிய ஹிந்தியால் அவர்களுக்கு  கோபம் வந்ததா என்று தெரியவில்லை. " ஏ புட்டாக்கோ  சோடுதோ . ஏ குத்தேக்கோ மார்தோ   " என்பது போல யரோ ஒருவன் குரல் கொடுக்க அந்த ஒட்டு மொத்த கும்பலும் என் மேல் பாய்ந்தது. வெறித்தனமான தாக்குதல்.  என்னால் கையில் கிடைத்ததை வைத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே சமாளிக்க முடிந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த முதியவர் பஞ்சாய் பறந்து விட்டார். யாரோ ஒருவன் என் பிடரியில் கம்பு ஒன்றால்  அடிக்க நான் ஒரு நொடியில் நினைவிழந்து கீழே விழுந்தேன். நான் விழுந்ததற்குப் பிறகும் அவர்கள் அனைவரும் ஒரு 10 நிமிடத்திற்கு என் மேல் அவர்கள் வீரத்தை காண்பித்ததாகவும் அதை அங்குள்ள மக்கள் ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருந்தாகவும், ஆனால் யாரும் உதவிக்கு வராததாகவும்  அங்கு இருந்த ஒரு 'வாட்ச்' (?????) மேன் சொன்னார்.  

யாரோ ஒரு புண்ணியவான் என்னை அருகில் இருந்த ஒரு மருத்துவ மனையில் சேர்த்ததும், நான் ஒரு 3 நாட்கள் கோமாவில் கிடந்ததும், அந்த முதியவர், என் பாஸ், யாரும் என்னை வந்து பார்க்காததும், அந்த கும்பல், அந்த ஏரியாவின் தாதா  ராஜா கேட்கர் என்பவனின்  அடியாட்கள் என்பதும்   இந்த டைரிக்குத் தேவையில்லாத விஷயங்கள். 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் நம்ம ஊர் வெறுத்துப் போய்  Hindu பேப்பர் வழியாக Try  பண்ணி  நான் கென்யா வந்தது.

இப்ப நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே ....
1. நான் செய்த விஷயங்கள் சரியா, தவறா ?
2. சரி என்றால்.....அது அசட்டுத் துணிச்சல் இல்லையா ? விட்டால் சங்கு ஊதியிருப்பார்களே ( அட்லீஸ்ட் இரண்டாவது சம்பவத்தில்) ..
3. தவறு என்றால் ......நான் என்ன செய்திருக்க வேண்டும் ? மேலும் பலரைத் திரட்டியோ அல்லது காவல் நிலையத்திற்குச் சென்று அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப்  பதில் சொல்லி விட்டு அவர்களைக் கூட்டி வருவதற்குள்ளோ  பாதிக்கப் பட்டவர்களின் உயிர்கள் தங்கியிருக்குமா? 
4. எனக்கென்ன என்று போயிருந்தால்,  அது மனிதாபிமான செயலாகுமா ? நாளைக்கு, நமக்கே இது போல எதுவும் நடக்காது என்று என்ன நிச்சயம்?  

இந்தக் கேள்விகள் என் மனதை ரொம்ப நாள் அரித்துக் கொண்டிருப்பதால் இந்த டைரியை உங்கள் முன் வைக்கிறேன்....

உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் மகிழ்ச்சியடைவேன். 


வெ. பாலமுரளி
    

No comments:

Post a Comment