Monday 28 January 2013

13. நான் சென்ற விமானத்தில் வெடிகுண்டு….




நான் இதுவரை எத்தனையோ முறை விமானத்தில் பயணத்திருந்தபோதும், கடந்த ( 2011 ) டிசம்பரில்,  சென்னை – மதுரை Spice Jet - ல் பயணித்தது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு ஜில்லிட்ட அனுபவமாகப் போய் விட்டது.

விமானத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அன்று அது நிறைவேறப் போகிறதென்று என் பட்சி சொன்னதால் மிகவும் ஆவலோடு Spice Jet Counter –ஐ அணுகினேன். என் Bad Luck, எல்லா ஜன்னல் சீட்டும் Already Occupied என்று சொல்லி விட்டாள் அந்த அழகி மீனாள். ஒரு நிமிடம் சோர்ந்து விட்டேன்.

அவளே, நீங்கள் அருகில் உள்ளவரைக் கேட்டு மாறிக் கொள்ளுங்கள் சார் என்றாள். எனக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய கேமராவை வெளியில் எடுத்து என்னுடைய பெரிய லென்ஸை Fix பண்ணி ஒரு பெரிய Professional Photographer போல ஒரு போஸ் கொடுத்தால் உடனே ஜன்னல் சீட்டை கொடுத்து விடுவார்கள் என்று முடிவு பண்ணி உள்ளே நுழைந்தேன் ( அடச்சீ…..இவன் இவ்வளவு அல்பையா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது…சரி..சரி..கண்டு கொள்ளாதீர்கள்).

என் சீட்டுக்கு அருகில் ஒரு வட இந்திய இளம் தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். பார்ப்பதற்கு காஷ்மீர் அல்லது பாகிஸ்தானி மக்கள் போலத் தெரிந்தது. நான் ஜன்னலில் உட்கார வேண்டுமென கேட்டுக்கொண்டவுடன் எதற்கு என்று கூடக் கேட்காமல் உடனே நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். இருவருமே என் கேமராவைக் கண்டு கொள்ளவேயில்லை (என் மூஞ்சியைத் துடைத்துக் கொண்டேன் - வழக்கம் போல். பல்பு வாங்கி வாங்கி இப்போவெல்லாம் பழகிப் போச்சுங்க).

விமானம் கிளம்ப சிறிது நேரம் ஆகும் போலத் தெரிந்தது. சும்மா பேச்சுக் கொடுப்போமே என்று, எங்கிருந்து வருகிறீர்கள் என்றேன். திடீரென்று கேட்டதால், இருவருமே இந்தக் கேள்வியை எதிர்பார்க்காமல், கணவன், பாம்பே என்றும், மனைவி காஷ்மீர் என்றும் அவசரத்துடன் சொல்லி விட்டு ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காரணமே இல்லாமல் ஏன் இருவரும் இந்த அளவுக்கு டென்ஷன் ஆகிறார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன். Something Wrong என்று என் உள் மனது சொல்லியது. சரி, நம் தொழிலைக் கவனிப்போமென்று, என் கேமராவை செட் பண்ண ஆரம்பித்தேன். அதேசமயம் அவர்களை ஓரக் கண்ணால் கவனிப்பதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை. கணவன், மனைவி இருவருமே ஏதோ காரணத்தால் அந்த ஃபிளைட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஃபிளைட் கிளம்ப ஆரம்பித்ததும், கணவன் கண்ணால் ஏதோ சைகை செய்ய, இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் கையிலும் முகத்திலும் தெரிந்த இறுக்கம் அவர்களின் நோக்கத்தை எனக்கு மிகத் தெளிவாகப் புரிய வைத்தது. ஃபிளைட்டில் குண்டை வெச்சிட்டாய்ங்கெய்யா…குண்டை வெச்சிட்டாய்ங்கெ….மொழி படத்தில் வருவது போல என் காதுக்கருகில் சங்குச் சத்தமும் செகண்டிச் சத்தமும் மிகத் தெளிவாகக் கேட்டது. அந்த AC குளிரிலும் எனக்கு வியர்த்து ஊற்றியது.

என்ன செய்யலாம்? எனக்கு ரொம்ப ஒண்ணும் Options இருக்கவில்லை. ஒன்று, சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவது ( ஊரை என்ன ஊரை….அந்த ஃபிளைட்டில் இருந்த 100 பேரை Alert பண்ணலாம்). இரண்டு, கையில் உள்ள கேமராவை வைத்து சகட்டு மேனிக்கு ஷூட்டித் தள்ளுவது ( ஒருவேளை என் படங்கள் தப்பித்து விட்டால், ஒரு மாபெரும் கலைஞனின் ( ஹி…ஹி…ஹி..என்னைத்தான்) கடைசித் தருணங்கள் என்று என் படங்களுக்குத் தலைப்பு வைத்து யாரேனும் ஒரு Article எழுதலாம். உயிரோடு இருக்கும்போதுதான் இந்தப் பாழாய்ப் போன உலகம் நம்மை கண்டு கொள்ளவில்லை. (ச்சே..இப்படி புலம்ப வெச்சுட்டாய்ங்கெளே…..).

முதல் Option இல் பெரிதாய் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்று தோன்றியதால், Option No. 2 – வை டிக் செய்தேன் ( ஆமா….இவரு பெரிய அமிதாப். நீங்களும் கோடிஸ்வரராகலாம் ப்ரோகிராம் நடத்துறாரு…..). பெரிதாக யோசித்து நேரத்தை வீணாக்காமல், ஃபிளைட்டையும் அதில் உள்ளவர்களையும் தட தடவென்று க்ளிக்கித் தள்ளினேன். அந்தக் காஷ்மீர் தம்பதி, கொஞ்சம் கூட இறுக்கம் தளராமல் பிரார்த்தனை செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். ஒரு Evidence – க்கு இருக்கட்டுமே என்று என் காலுக்கு அருகில் கேமராவை வைத்து அவர்களையும் ஒரு Close Up Shot எடுத்தேன். இப்போ ஒரு சின்ன சந்தேகம். ஃபிளைட்டே வெடிக்கும்போது என் கேமரா மட்டும் எப்படித் தப்பிக்கும்? டமாலென்று ஒரு யோசனை. என் கேமராவில் உள்ள மெமரி கார்டைத் தனியேப் பிரித்தெடுத்து என் ஷூவுக்குள் அடியில் பாதத்தில் தள்ளினேன் (ராஜிவ் காந்தி சம்பவத்தின் போது அவருடைய Lotto Shoe மட்டும் தப்பித்ததாக ஞாபகம்).

இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால், என் பதட்டத்தைக் குறைத்துக் கொண்டு அந்தக் காஷ்மீரித் தம்பதியையே கவனிக்க ஆரம்பித்தேன். இந்த இடைப் பட்ட நேரத்தில் ஃபிளைட்டும் ஒரு நல்ல உயரத்தை எட்ட ஆரம்பித்திருந்தது. அங்கு உள்ள ஏர் ஹோஸ்டஸ்,  குடிக்க ஏதேனும் ஜூஸ் வேண்டுமா என்று கேட்டு அருகில் வந்தாள் ( ஆமா….இப்ப ஜூஸ் ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்). அந்த சத்தத்தால் கொஞ்சம் கவனம் சிதறி அந்த தம்பதி இருவரும் கண்ணைத் திறந்தார்கள். நான் அவர்களையே பார்ப்பதை அறிந்து அவர்கள் இருவரும் ஒரு மாதிரி கூச்சத்தோடு என்னைப் பார்த்து சிரித்து விட்டு “ ஹி..ஹி…எங்கள் இருவருக்கும் ஃபிளைட் பயணம் என்றால் ரொம்பப் பயம். அதுதான் கண்ணை மூடி Prayer பண்ணினோம்” என்றார்கள்.

 பாலச்சந்தர் படத்தில் வருவதுபோல என் முகம் சுக்கல் சுக்கலா கிழிந்தது. வேதம் புதிது ஸ்டைலில் என்னை யாரோ திரும்பத் திரும்ப கன்னத்தில் அறைந்தார்கள். ஆக…இந்த முறையும் பல்புதானா?????? இந்தக் களபரேத்தில் அழகான Sunset - ம் போய்விட்டது. நம்ம பொழப்பே இந்த மாதிரி நாறப் பொழப்பாப் போச்சே என்று என்னை நானே நொந்து கொண்டு காலில் இருந்த மெமரி கார்டை எடுத்துத் திரும்ப கேமராவில் போட்டேன்..

வெ.பாலமுரளி…. 

2 comments:

  1. நான் சென்ற விமானத்தில் வெடிகுண்டு….
    இல்லை இல்லை பதிவின் இறுதியில் தான் ..!

    ReplyDelete
  2. ha ha ha nalla balputhan vanginiinga. atha sonna vitham thaan suparappu

    ReplyDelete