Tuesday, 29 November 2011

முள்றியின் டைரி -3 தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்

இது நடந்தது 1993 –ம் வருடம். அப்போது நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் தங்கி பட்டர்ஃபிளை ஹோம் அப்ளையன்ஸஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு லீவு என்று நானும் எங்க மாமாவும் காரைக்குடி சென்றோம்- அம்மாவைப் பார்த்து வர ( Hallo…நான் எங்கள் அம்மாவைச் சொன்னேங்க).

எனக்கும் எங்கள் மாமாவுக்கும் மீன் என்றால் ரொம்ப இஷ்டம். எங்கள் அம்மா வாழை மீன் குழம்பு வைத்து செந்நகரை ( Red Snappers) வறுத்து வைத்திருந்தார்கள். இன்னும் ஞாபகம் இருக்கு ( மறக்க முடியுமா….?).

இரண்டு பேரும் ரசித்துச் சாப்பிட்டோம். கரெக்டாக சாப்பிட்டு முடிக்கின்ற நேரத்தில் எனக்கு ஒரு முள் போய் தொண்டைக்குள் மாட்டிக்கொண்டது. இது ரொம்பப் பேருக்கு சகஜமாக நடக்கும் என்பதால் நான் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் அம்மா கொஞ்சம் வெறும் சாதத்தை உருட்டி வேகமாக முழுங்கச் சொன்னார்கள். இந்தா போயிரும் அந்தா போயிரும் என்று நானும் கிட்டத்தட்ட 10 உருண்டைக்கு மேல் முழுங்கி விட்டேன். ம்ஹூம்…பயனில்லை.  பக்கத்து வீட்டு பாட்டி வந்து ஒரு வாழைப் பழத்தை டமாலென்று முழுங்கச் சொன்னது. நான் கொஞ்சம் ஸ்பீடாக முழுங்கிட்டேன்னு நினைக்கிறேன். முள்ளு வெளியில வர்றதுக்குப் பதிலாக என் கண்ணு வெளியில வந்துருச்சு. படா அவஸ்தை. முன்னாலேயே வயிறு Full. அதுக்கு மேல வெறும் சாதத்தையும் வாழைப் பழத்தையும் வேறு எக்குத்தப்பாக முழுங்கி மூச்சு முட்ட ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட மேலுலகம் சென்று விட்டேன். அரக்கர்கள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டார்கள் ( பின்ன…? நம்ம பண்ணிய பாவங்களுக்கு தேவர்களா காட்சி தருவார்கள்?).

வெறும் சாதமும் வாழைப் பழமும் பண்ணிய வேலையில், முள் எசகுபிசகாகப் போய் மாட்டிக் கொண்டு ஒரு மரண வலியைத் தர ஆரம்பித்தது. பாரதிராஜா படத்தில் வருவது போல அந்தத் தெருவில் உள்ள பெண்மணிகள் எல்லோரும் வேறு எங்கள் வீட்டில் கூடி விட்டார்கள். அதில் யாரோ ஒரு பொம்பளை “ வெளி ஊருல படிச்சிருக்குன்னு பேருதான். ஒரு மீனைக் கூடச் சாப்பிடத்தெரியலை, என்ன புள்ளையோ” என்று காமெண்ட் வேறு ( ஏண்டா ஆ ஊன்னா படிப்பை படிப்பை இழுக்கறீங்க?  நான் என்ன 30 நாட்களில் மீன் சாப்பிடுவது எப்படின்னு படிக்கவா அங்க போனேன்? ச்சே…).

எனக்கு அன்றே சென்னை திரும்ப வேண்டிய ஒரு சூழ்நிலை வேறு. எச்சில் முழுங்கவோ துப்பவோ முடியவில்லை. தலையை லேசாகத் திருப்பினால் கூட வலி உயிர் போனது. எப்படியோ சமாளித்து சென்னை வந்து விட்டேன். முதல் காரியமாக வீட்டிற்கு அருகில் உள்ள VHS ஹாஸ்பிட்டலுக்குச் சென்றேன். வழக்கம் போல் அழையா விருந்தாளியாக Mr 7 ½ -யும் கூடவே அன்போட என்னுடன் வந்தார். அன்று Duty – யில் இருந்தவர் பெயர் Dr. வாசுதேவன். நான் பட்ட பாட்டைப் பார்த்து விட்டு, உடனே என்னை Operation Theatre –க்கு (????????) அழைத்துச் சென்றார். P.C. ஸ்ரீராம் ரேஞ்சுக்கு ஏகப்பட்ட ஸ்பெஷல் லைட்டிங் வைத்து என்னைச் சோதித்தவர் முகத்தில் அதிர்ச்சி + சந்தோஷம் கலந்த ஒரு Reaction. எனக்கோ ஒண்ணுமே புரியலை. எனக்குத் தொண்டையில முள் குத்திருச்சுன்னா இவர் ஏன் சந்தோஷப்படணும்னு ஒரே குழப்பம். வேக வேகமா பக்கத்து அறைக்குப் போனார். சரி, ஏதோ ஒரு டூல் எடுத்து வந்து நம்மை ரட்சிக்கப் போனாருன்னு நானும் காத்திருந்தேன். பார்த்தா, அங்க போய் Dr. ஃபரூக்குன்னு ஒருத்தர்கிட்ட ஃபோன்ல பேசிறாரு. “ Dr. ஃபரூக், இங்க ஒரு வினோதமான கேஸ் வந்திருக்கு ( கே……..ஸா………??????????????). MMC –யில Practicals பண்ணிக்கிட்டிருக்கிற நம்ம 3rd Year Students –எல்லோரையும் உடனே இங்க வரச் சொல்லுங்க” என்றார். ஆஹா…நம்மளை வெச்சு இன்னிக்கு கிளாஸ் எடுக்கப் போறாய்ங்கெ. முரளி பறந்துறு என்று நம் ஏழாம் அறிவு நமக்கு ஒரு இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணியது. நான் சுதாரித்து கிளம்புவதற்குள் Dr வாசுதேவன் திரும்ப வந்து விட்டார்.

எனக்கு ஒரு லோக்கல் அனஸ்தீஸியாவைக் கொடுத்து விட்டு வாய்க்குள் ஒரு இடுக்கியை வேறு போட்டு விட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதோ வந்துர்றேன் என்று ஒரு Sister –ஐ காவலுக்கு (????) வைத்து விட்டு வெளியே போய் விட்டார். நான், ஒரே ஓட்டமாக ஓடி விடலாம் என்று சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன். Bad luck. MMC –யில் இருந்த பக்கிகள் அதற்குள் வந்து விட்டார்கள். என்னை அந்தத் தியேட்டரில் படுக்க வைத்து விட்டு ஏறத்தாழ 20 பேர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டார்கள். எனக்கோ பயத்தில் தலை சுற்றி மயக்கமே வந்து விட்டது. Dr. வாசுதேவன் மெதுவாகச் சூழ்நிலையை விளக்க ஆரம்பித்தார். கத்தி மாதிரி ஒரு சாதனத்தை வைத்து அந்த முள்ளை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இடறி எப்படியெல்லாம் அது மூவ் ஆகியிருக்கிறது என்று Explain பண்ணினார். எனக்கு சுளீரென்று ஒரு வலி வலித்தது. கூண்டுக்குள் அடை பட்ட பறவையைப் போல கையைப் பட படவென்று அடித்தேன் ( அதான், வாயை இடுக்கி வைத்துக் கட்டிப் போட்டு விட்டார்களே). டாக்டர் ரொம்ப கேஷூவலாக, லோக்கல் அனஸ்தீசியா டயம் முடிஞ்சி போச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் Add பண்ணலாம், அந்த Bracket –ஐ எடுங்க இந்தா வந்திர்றேன் என்று சொல்லி விட்டு அகன்றார். அதை அகற்றி விட்டு ஒரு Student பிரகஸ்பதி “ என்ன சார் சாப்பிட்டீங்க, இப்படிப் போய் வகையாக மாட்டியிருக்கு?” என்றான். எனக்கோ அப்ப்ப்ப்ப்ப்ப்படி ஒரு எரிச்சல். என் சக்தியை எல்லாம் திரட்டி எச்சிலை முழுங்கி விட்டு, ம்ம்ம்…. சிக்கன் சாப்பிட்டேன், மீன் முள் மாட்டிருச்சு மூஞ்சியைப் பாரு என்றேன் High Pitch- இல். அட… ஒரு பெரிய Relief…தொண்டையில் வலி இல்லை. முள்ளு உள்ளே போயிருச்சு போலிருக்கு (ச்சே..இந்த சூட்சுமம் முன்னாலேயே தெரிந்திருந்தால் நாலு பேரைக் கட்டு ஏறு என்று ஏறியிருக்கலாமே…).

வந்து பார்த்த டாக்டருக்குப் பெரிய ஏமாற்றம். படங்களில் வரும் வசனத்தைப் போல “ It is a medical miracle. நாம் ஒண்ணுமே செய்யாமல் முள்ளு உள்ளே போய் விட்டது” என்றார் ( ஆமா…வேற எப்படித்தான் சமாளிப்பது? ). வயிற்றில் ஏதும் வலி வந்தால் உடனே வந்து விடுங்கள் என்று எனக்கு Warning வேறு. திரும்ப வர்றதுக்கு எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிறுக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சரி சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு சிட்டாகப் பறந்து விட்டேன்.

வெ.பாலமுரளி.

5 comments:

 1. sir adhanaaldhaan ungal name muralikku bhadhil mulri aachaa

  ReplyDelete
 2. Super comment by Mr.Pattabhiraman. :D :D

  ReplyDelete
 3. lol.. Appa always used to tell me this incident . pavam rhomba kashtapatutan'nu soluvar. but ivalo kashtapateenga'nu ippo dhaan theriyudhu

  ReplyDelete
 4. வலைப பதிவுக்கு வாழ்த்துக்கள். நிறைய நகைச்சுவைப் பதிவுகளை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

  ReplyDelete
 5. “ Dr. ஃபரூக், இங்க ஒரு வினோதமான கேஸ் வந்திருக்கு ( கே……..ஸா………??????????????). MMC –யில Practicals பண்ணிக்கிட்டிருக்கிற நம்ம 3rd Year Students –எல்லோரையும் உடனே இங்க வரச் சொல்லுங்க” - நன்றாக ரசித்தேன். உங்கள் அனுபவங்களை சுவைபட பகிர்கிறீர்கள். இந்த முயற்சிக்கு நன்றி..

  ReplyDelete