Wednesday, 30 November 2011

முள்றியின் டைரி 7 - Cooking கொஞ்சம் சொல்லித் தாங்க பாலா சார்....

அப்போது நான் தாஷ்கெண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று என் அறைத் தோழனுக்கு பிறந்தநாள். அங்கு நாங்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது பிறந்தநாளும் ஆங்கிலப் புத்தாண்டும் மட்டும்தான்.

எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். இதைப் படிக்கும் என் தாஷ்கெண்ட் நண்பர்கள் அதை உறுதி செய்வார்கள் ( இவனைப் போட்டுப் பார்க்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு பாலாவா? சமையலா? என்று காமெண்ட் அடிக்காதீங்க ராசாக்களா…ப்ளீஸ்).

அன்று சமைத்த மெனு இன்றும் ஞாபகம் இருக்கிறது. அதிகம் Non Veg  Items தான். (So, Veg மக்கள் அடுத்த இரண்டு வரிகளை Skip பண்ணி விட்டு படிக்கவும்).

கோழிக் குழம்பு, கோழிக்கால் வறுவல், முயல் கறி பிரட்டல் ( சீனி நோ காமெண்ட் ப்ளீஸ்), முட்டை மசாலா + சாம்பார், ரசம் , சன்னா மசாலா, தயிர் + நானே செய்த பூண்டு ஊறுகாய் + சாதம் + Naan .

சமைத்துக் கொண்டிருக்கும் பொது, மல்லித் தளையோ என்னவோ ஒன்று தீர்ந்து விட்டது என்று அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு வாங்கி வரச் சென்றேன். அங்கேதாங்க அவனைப் பார்த்தேன். “ தஹி, Curd, Butter Milk” என்று ரஷ்ய மொழியைத் தவிர மற்ற அனைத்து மொழிகளிலேயும் அங்குள்ள ஒரு காய்கறிக்காரம்மாவிடம் நம்ம தருமி ரேஞ்சுக்கு சொற்போர் புரிந்து கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒரு 1000 Watts பல்பின் வெளிச்சம். வேக வேகமா என்னிடம் வந்து  “ Are you from India?” என்றான் ( ஏண்டா என் நிறத்தைப் பார்த்தா ஐரோப்பாக்காரன் மாதிரியாடா இருக்கு? ஏண்டா எங்கிட்டேயே வந்து எல்லோரும் வம்புக்கு இழுக்கிறீங்க? Wait a minute…. ஒருவேளை இந்தியாவா, ஆப்பிரிக்காவா என்னும் அர்த்தத்தில் கேட்டிருப்பானோ? இருக்கும்…இருக்கும்).

நான் உடனே தமிழில் “ என்ன தமிழா?” என்றேன். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்து விட்டான். தான் வந்து நாலு நாட்கள்தான் ஆகிறதென்றும், தமக்கு ரஷ்யனும் தெரியாமல் சமையலும் தெரியாமல் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தான். அவன் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகக் கூறியதும் நான் கண் கலங்கி விட்டேன். நமக்கு வேற மெல்ட்டிங்க் ஹார்ட்டாச்சா ( அதாங்க இளகிய மனசு), உடனே அவனை எங்கள் ரூமிற்கு அழைத்து வந்து விட்டேன். அங்கு நடந்த தட புடல் சமையலைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயந்து விட்டான் போலிருந்தது. என்ன சார் விசெஷம் என்றான். பயப்படாத ராசா, என் ரூம் மேட்டிற்கு பிறந்த நாள், இன்று மாலை பார்ட்டி. அதுதான் சமையல் போய்க் கொண்டிருக்கிறது என்று விளக்கி விட்டு , அது சரி நீ வெஜ்ஜா நான்-வெஜ்ஜா என்றேன். அவன் உடனே, நான்-வெஜ்ஜே போதும் சார் ( நான்-வெஜ்ஜே போதுமா….அது சரி…என்று நினைத்துக் கொண்டு) கொஞ்சம் பொறு ராசா Friends எல்லோரும் வந்து விடட்டும் என்று சொல்லி விட்டு அவனுக்கு டீயும் சாண்ட்விச்சும் பண்ணிக் கொடுத்தேன்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அவன் பூர்வீகக் கதையெல்லாம் சொன்னான்.
மாலையில் நண்பர்கள் அனைவரும் வந்து Cake எல்லாம் வெட்டி, கோக், ஃபாண்டா எல்லாம் குடித்து முடித்தவுடன், சாப்பிட ஆரம்பித்தோம். ஓரக்கண்ணால் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது….ரசித்து ருசித்து பொளந்து கட்டிக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நல்ல காரியம் செய்கிறோமேயென்று எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். சாப்பிட்டு முடித்ததும் அவனை அறியாமலேயே ஒரு பெரிய ஏப்பம் வேறு வந்து விட்டது. கொஞ்சம் கூச்சப் பட்டுக்கொண்டே ஹி…ஹி…கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டேன் ....அதுதான்...என்று வழிந்தான். நானும் பெருந்தன்மையுடன் ( ???) பரவாயில்லைப்பா என்றேன்.

 அப்பத்தாங்க அவன் வாழைப்பழத்துல ஊசி ஏத்துவது போல மெதுவாக அந்த குண்டைப் போட்டான். “ பாலா சார் எனக்குக் கொஞ்சம் Cooking சொல்லித்தாங்க சார். ரொம்பல்லாம் டேஸ்ட்டா இருக்கணும்னு அவசியமில்லை. இன்னைக்கு நீங்க சமைத்த மாதிரி சுமாராக இருந்தாக் கூடப் போதும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் ” என்றான்.. நான் இந்த Diplomatic Attack-ஐ சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. நான் பிறவியிலேயே ரொம்ப அப்பாவி வேறு என்பதால் என்ன Reaction கொடுக்க வேண்டும் என்று கூடத் தோணாமல் பக் பக் என்று முழித்துக் கொண்டிருந்தேன். என் அறைத்தோழன்தான் முதலில் சுதாரித்தான். “சரி சரி..நீ அடுத்த முறை வரும்போது சமையல் கற்றுக் கொள்ளலாம், இப்ப நீ கிளம்பு. வெளியில் இருட்டாயிடுச்சு பாரு என்றான். அவன் வெளியே கிளம்பியதுதான் தாமதம். மற்ற எல்லோரும் என்னை ஓட்டியே கொன்று விட்டார்கள்.
அங்கு இருந்த மீதி வருடங்களில் எத்தனையோ பார்ட்டிகள், எத்தனையோ கொண்டாட்டங்கள்…..ஆனால் அவனை மட்டும் தப்பித்தவறிக் கூட எதற்கும் கூப்பிடவேயில்லையே….

வெ.பாலமுரளி

2 comments:

  1. மனசை சுட்டுட்டீங்களே பாஸ்....ஆனாலும் நெருப்பில் சுட்ட விஷயங்களோடு கேமிராவில் சுட்ட விஷயங்களையும் பகிருங்கள்.....

    ReplyDelete
  2. "நான் பிறவியிலேயே ரொம்ப அப்பாவி வேறு என்பதால் என்ன Reaction கொடுக்க வேண்டும் என்று கூடத் தோணாமல் பக் பக் என்று முழித்துக் கொண்டிருந்தேன்." ROFL

    ReplyDelete