Wednesday, 30 November 2011

முள்றியின் டைரி 6 - Excuse me..what did you say?

அப்போ நான் கென்யா வந்த புதுசு. A Typical Bachelor. அப்போது என்னிடம் ஒரு SUZUKI Sports Car இருந்தது – 4 Wheel Drive. கிட்டக்க வந்தா அறைஞ்சிருவேன் என்று சொல்கிற மாதிரி ஒரு வெறிக்கிற சிவப்புக் கலர். ஆனால் அதில் உள்ள Music System சூப்பராக இருக்கும். Technics Make. வெறும் Cassette Player தான். ஆனால், காரின் கண்ணாடியைத் திறந்து வைத்துக் கொண்டு மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லரை சத்தமாக கேட்டுக் கொண்டே காரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனால்…நம்ம தலைவர் பாஷையில் சொல்வதானால், சும்மா அதிரும்ல….அந்தக் கால கட்டத்தில் அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ( ஆமா இவரு பெரிய Period Film எடுக்கிறாரு...).

ஒருநாள் காலையில் அந்த மாதிரி மியூஸிக்கைச் சத்தமாக வைத்துக் கொண்டு காரில் வேகமாக ஆஃபிஸிற்குச் சென்று கொண்டு இருந்தேன் ( சும்மா ஃபண்ட்டா….டயத்துக்கு ஆஃபிஸிற்குப் போக வேண்டும் என்றெல்லாம் இல்லை). மணி சுமார் 7.30 இருக்கும். அப்போது ஒரு இந்தியன், டிப் டாப்பாக கோட், சூட், டை எல்லாம் போட்டுக் கொண்டு ஒரு விலையுயர்ந்த காரில் ( BMW என்று ஞாபகம்) என்னுடைய காரை Overtake பண்ணி என்னைப் பார்த்து கையைக் காண்பித்து ஏதோ சத்தமாகச் சொல்லி விட்டு விரைந்து சென்று விட்டான். என் காரில் மியூஸிக் சத்தமாக இருந்ததால் அந்த ஆள் என்ன சொன்னான் என்று சுத்தமாகக் கேட்கவில்லை. ஆனால் அவன் வாயசைப்பை வைத்துப் பார்க்கையில், ஹிந்தியில் உள்ள “ பெஹன்………த்” என்ற ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னது மிகத் தெளிவாகப் புரிந்தது. ஏன் அப்படி ஒரு வார்த்தையைச் சொன்னான் என்று புரியவில்லை. “ நமக்கே தெரியாமல் வழியில் ஒருவேளை அவனை ஏதாவது Irritate பண்ணி விட்டோமோ?”. அதற்கும் சான்ஸ் இல்லை. ஏனென்றால், கென்யாவில் சாலை விதிகளை மதித்து கார் ஓட்டும் மிகச் சிலரில் நானும் ஒருவன் ( இவன் விடுகின்ற பீலாக்களைத் தாங்க முடியலப்பா என்று சொல்வது கேட்கின்றது. சரி…சரி..குறைத்துக் கொள்கிறேன்).

வேறு காரணம் என்னவாக இருக்கும்? எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே. எதற்குக் கெட்ட வார்த்தை? அதுவும், அதிகாலையில்… என்ன ஆனாலும் சரி…இவனை இன்று விடக் கூடாது என்று முடிவெடுத்தேன். காரை Sports Gear –இல் போட்டு விட்டு அவனை விரட்ட ஆரம்பித்தேன். ரோடு, சைடு பிளாட்ஃபாரம் என்றெல்லாம் பார்க்கவில்லை. ஒரு குத்துமதிப்பாக அவன் போன திசையில் பறந்தேன் ( அன்று நான் போன வேகத்திற்கு அதுதான் சரியான சொற்பதம்).

ஹா…..ஹா…….ஹா…… ….. அவன் காரைப் பார்த்துட்டோம்ல….நைரோபி சின்ன ஊருங்க….
ஆங்கிலப் படத்தில் வருவதுபோல, ஒரு வளைவில் அவன் காரை வழிமறித்து விட்டு இறங்கினேன். படு கடுப்பில் அவனை நெருங்கி “ EXCUSE ME….WHAT DID YOU SAY?” என்றேன். நான் பல்லைக் கடித்துக் கொண்டுக் கேட்ட விதத்தில் அவன் ஆடிப் போய் விடுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதற்குப் பதிலாக அவன் முகத்தில் ஒரு மாதிரியான குழப்பம்தான் தெரிந்தது. I SAID YOUR BACK WHEEL HAS A PUNCTURE என்றான். பேக் வீலு ..பஞ்சரா?????? அடக் கடவுளே…..அவன் பேக்குனு சொன்னதைத்தான் நான் பெஹன்…என்று புரிந்து கொண்டு விட்டேனா…….அட நாதாரி…. என்று என்னை நானே நொந்து கொண்டு என் பேக் வீலைப் பார்த்தேன். அவன் முதலில் சொல்லும்போதே பார்த்திருந்தால் வெறும் டியூபோடு போயிருக்கும். நான் பண்ணிய ஹீரோயிசத்தில் இப்போது டயரும் கிழிந்து ரொம்ப கேவலமாக தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது அவன் Turn. “ EXCUSE ME…ANY PROBLEM?” என்றான். உடனே சுதாரித்துக் கொண்ட நான்  “ NO. NOT AT ALL. I JUST CAME TO SAY THANK YOU. I REALLY APPRECIATE IT. HAVE A WONDERFUL DAY”  (ம்க்கும் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) என்று சொல்லி விட்டு அவன் காரை வழி விட்டேன். நான் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் வழிந்திருக்கிறேன். ஆனால் அன்று மாதிரி என்றும் வழிந்ததில்லை.

வெ. பாலமுரளி. 

1 comment: