Wednesday, 30 November 2011

முள்றியின் டைரி 5 - என் கன்னிச் சமையல்

அன்புள்ள அப்பா படத்தில் ஒரு பாடல் வரும் “ முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே” என்று. அது போலத்தான் என்னுடைய முதல் சமையல் அனுபவமும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக ஆகிப் போனது.

இது நடந்தது 1987 –ம் வருடம். ஒரு இனிய காலைப் பொழுதில் எனக்கு USSR  Embassy –யில் இருந்து ஒரு கடிதம் வந்தது.  “ உங்கள் அறிவை மெச்சி, உங்களை எங்கள் நாட்டில் பொறியியல் மேற் படிப்பு படிக்க அழைக்க விரும்புகிறோம். உங்களுக்கு விருப்பம் என்றால் உடனே வந்து விசாவுக்கு Apply பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறோம்” ( சரி..சரி…” உங்கள் அறிவை மெச்சி” Was not there). அவனுக்கு கால் தரையில் பாவாது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அன்று முழுவதும் நான் அந்த மன நிலையில்தான் இருந்தேன். காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே என்று ஒரு பாட்டு உண்டு. அதெல்லாம் கனவில் வர ஆரம்பித்து விட்டன. அது ஒரு கனாக் காலம்.

எங்கள் வீட்டில் முதலில் சுதாரித்தது எங்கள் அம்மாதான். அது சரி, சாப்பாட்டுக்கு என்னடா செய்வதாக உத்தேசம் என்று கேட்டார்கள். கொஞ்சம் கூட முன்னால் யோசித்திருக்கவில்லை. ரொம்ப casual –ஆக இருந்தேன். டேய், சமையல் கத்துத்தாரேன். கொஞ்சம் காது கொடுத்துக் கேளு ராசா என்று கெஞ்சினார்கள். ம்ஹூம்…யாருகிட்டே…..அட போம்மா, நான் ஹோட்டலில், இல்லாவிட்டால் காண்டீனில் சாப்பிட்டுக் கொள்வேன் என்றேன் எகத்தாளமாக.. அங்கு என்னவோ தெருவுக்குத் தெரு முனியாண்டி விலாஸூம், உடுப்பியும் இருக்கும் என்று நானாகவே கற்பனை செய்து கொண்டு ரொம்ப தெனாவெட்டாகத் திரிந்தேன் ( yes…அப்பவே தெனாவெட்டுத்தான்). நம்ம Friend Mr 7 ½ க்கு சிரிப்புத் தாங்கவில்லை. அங்கு வா நான் கற்றுத் தருகிறேன் என்று அவர் கிசு கிசுத்திருக்க வேண்டும். பத்தாததுக்கு என் பாட்டி வேற, “ அடேய் கட்டையில போறவனே (செல்லமாத்தான்) , உங்க அம்மா சொல்றதைக் கொஞ்சமாவது கேளுடா….சாம்பார், ரசம், டீ, காப்பி மட்டுமாவது கத்துக்கடா கருமம் புடிச்சவனே என்றார்கள். Me sambar Cooking? No chance பாட்டி? You come Moscow, I give  dinner என்று என் பாட்டிக்கும், எனக்கும்  தெரியாத இங்கிலீசில் உதார் விட்டேன் . என் பாட்டிக்கோ செம கோபம்“ இந்தக் கெரகம் புடிச்சவனை விடுங்க. அங்க போயி நல்லா காயட்டும் (ச்சே…. என்ன்ன்ன்ன ஒரு தீர்க்க தரிசனம்) என்று ஒருவழியாக என்னை கை கழுவினார்கள். (இந்தப் பாட்டி இருக்கே பாட்டி, பயங்கர Violent. இதோட நடந்த ஒரு சுவையான ( ????) நிகழ்ச்சியைப் பின்னால் எழுதுகிறேன்).

கிளம்புகிற சமயத்தில் திடீரென்று ஒரு ஞானோதயம் வந்து சில ரெடிமேட் மசாலாக்களை மட்டும் வாங்கிப் போட்டுக் கொண்டேன் ( ஈகிள் பிராண்டு என்று ஞாபகம்). செப்டம்பர் மாதம் 27 ம் தேதி மாஸ்கோ போய் இறங்கினோம். இறங்குமுன் ஃப்ளைட்டிலேயே ஒரு Trial காண்பித்து விட்டார்கள். காய்ந்து போன கட்லெட்டு, Grilled குதிரைக் கறி, மசிய வைத்த உ.கிழங்கு மற்றும் காய்ந்து கட்டையாகப் போன பிரெட். எதுவும் தொண்டை வைத்த Test –இல் பாஸ் பண்ணவில்லை. அந்த கட்லெட்டை மோந்து பார்த்ததால் மட்டுமே டெல்லியில் சாப்பிட்டதும் சேர்த்தே வாந்தி வடிவில் வெளியில் வந்து விட்டது. பசி மயக்கத்தில் காய்ஞ்சி போய் பாதி நினைவிழந்து மாஸ்கோவில் கால் வைத்தோம். University Hotel –இல் தங்க வைத்தார்கள். அங்கு கிடைத்த சாப்பாட்டிற்கு ஃபிளைட் சாப்பாடே தேவலை போலிருந்தது. பிளாக் டீயும் வாயில் Enter ஆக ரொம்பவும் Polite ஆக மறுத்து விட்டது. So, ரெண்டாவது நாளாகவும் கொலைப் பட்டினி. அப்போதுதான் விஜயகுமாரும் சீனிவாசனும் என்னை வந்து பார்த்தார்கள். என் Status அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்றும் தரவில்லை. இதுபோல ரொம்பப் பார்த்திருப்பார்கள் போல. அவர்கள், சகோதரி சாந்தி வீட்டிற்கு  அழைத்துப் போனார்கள். நானும் சாந்தியும் ஒரே ஊர்- காரைக்குடி. அந்தப் பாசத்தில் எனக்குத் தட புடலாக விருந்து வைத்தார்கள் ( அன்றைக்கு சாந்தியின் அப்பாவிற்கும் பிறந்தநாள் என்று நினைக்கிறேன்). நெல்லுக்குப் பாய்ந்தது புல்லுக்கும் நன்றாகவே பாய்ந்தது. காய்ஞ்ச மாடு கம்புல விழுந்த கதைதான். சாந்தியின் சமையலும் மிக நன்றாக இருக்கும். So, புகுந்து விளையாடி விட்டேன். மறுநாள் காலையில் எங்களில் ஒரு 10 பேரை செலக்ட் பண்ணி கை நிறைய பணம் கொடுத்து வோல்காகிராடு என்னும் நகரத்திற்கு அனுப்பி விட்டார்கள்.

மாஸ்கோ TO வோல்கோகிராடு 24 மணி நேரப் பயணம். பயணம் என்னவோ சுகமாகத்தான் இருந்தது. இறங்கியவுடன்தான் தெரிந்தது. அவர்கள் எங்களை ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்லவில்லை, ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று. அங்கு வரும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் AIDS –இலிருந்து VD வரைக்கும் உலகத்தில் உள்ள அனைத்து கேவலமான வியாதிகளுக்கும் உண்டான டெஸ்ட்டும் பண்ணி, புள்ளைங்க ரொம்ப சுத்தம் என்று உறுதியான பிறகே யுனிவர்சிட்டிக்குள் விடுகிறார்கள் ( அதுக்காக, இந்தப் பால் வடியும் முகத்தைப் பார்த்த பிறகுமாடா “அந்த” மாதிரி டெஸ்ட்டெல்லாம் பண்ணனும்? கொஞ்சம் ஓவர்டா. அது சரி, அங்கே போனதுக்கப்புறம் அந்த மாதிரி வியாதியெல்லாம் வந்தா என்ன பண்ணுவீங்க? கேட்டோமா...........). மொத்தமாக 20 நாட்கள். கிட்டத்தட்ட சிறை வாழ்க்கைதான். மணி அடிச்சா சோறுங்குற மாதிரி, டாண் டாண் என்று சாப்பாடு மட்டும் போட்டார்கள். ஆனால் சாப்பாடுதான் எதுவுமே வாய்க்கு வெளங்கல. வந்தாச்சு உயிர் வாழணுமேனு ஏதோ ஒன்றைக் கொறித்து விட்டு பொழுதைப் போக்கினோம். நான் மட்டும் கிட்டத்தட்ட 8 கிலோ குறைந்து விட்டேன் அந்த 20 நாட்களில். வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு கடிதம் வேறு – பேனாவைக் கண்ணீரில் தோய்த்து. அந்தக் கடிதங்கள் எல்லாம் தொலைந்து விட்டன. இருந்தால், நம்ம நேரு இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் ரேஞ்சுக்கு இருந்திருக்கும் (ம்க்கும்...). சரி..விஷயத்திற்கு வருகிறேன். 20 நாட்கள் கழித்து எங்களை “ரிலீஸ்” செய்தார்கள். Yes….ரிலீஸ்தான் சரியான வார்த்தைப் பிரயோகம். அந்த ஊரில் உள்ள Canteen எல்லாம் ரொம்ப வித்தியாசமாகவும் உனக்கு தில் இருந்தா சாப்பிட்டுப் பாருடா என்று சொல்வது போல ரொம்ப மோசமாகவும் இருந்தது.

எல்லோர் கையிலும் 90 ரூபிள் வேறு. அந்தக் காலத்தில் அது ரொம்பப் பெரிய தொகை. முதல் காரியமாக சமையல் செய்யும் பொருட்கள் அனைத்தும் போய் வாங்கினோம். 10 லிட்டர் (????) பிரஷர் குக்கர் (பின்ன....நம்ம சாப்பாட்டைப் பார்த்து எத்தனை நாளாச்சு), அரிசி, உ.கிழங்கு, கேரட், வெங்காயம் எல்லாம் வாங்கி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தோம். என் அறையில் நான் , சுந்தர், பிரவீன் என்ற 3 தமிழர்கள். இதில் பிரவீனுக்கு சிக்கன் மட்டும்தான் சமைக்கத் தெரியும். வேறு எதுவும் தெரியாது. எனக்கும் சுந்தருக்கும் அதுவும் தெரியாது. So, எங்களுக்கு பிரவீன்தான் “The Boss”. அறைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது சிக்கன் வாங்க மறந்து விட்டோமென்று. சரிVegetarian சமைக்கலாம் என்று முடிவு செய்து, யார் தொடங்குவது என்று விவாதித்தோம் ( ஆமா, இவரு பெரிய சாலமன் பாப்பையா......). வழக்கம்போல நானே களத்தில் குதித்தேன். அறுசுவை நடராஜன் போல மெனுவை அறிவித்தேன்- சாதம், சாம்பார் & ஊறுகாய் . எப்படிடா சாம்பார் பண்ணுவாய் என்று இருவரும் வாய் பிளக்கக் கேட்டார்கள். சஸ்பென்ஸ் என்றேன் ( ரெடிமேட் பவுடர் வெச்சிருக்கோம்ல...).

சரி..எவ்வளவு சாதம் வைப்பது? எல்லோருக்கும் பேய்ப் பசி. ஆளுக்கு இரண்டு கப் ( பெரிய்ய்ய்ய்ய கப்பு) அரிசி என்று கணக்கு பண்ணி, 6 கப் அரிசி வைத்து 12 கப் தண்ணீர் ஊற்றினேன் ( எதுக்கு 10 லிட்டர் குக்கர் வாங்கினோம் என்று இப்போது புரிந்ததா? எதப் பண்ணினாலும் ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணிப் பண்ணனும்). ஒரு சின்ன ப்ராப்ளம். மேற்கண்ட அளவு அரிசியையும் தண்ணீரையும் ஊற்றிய பிறகு குக்கர் நிரம்பி விட்டது. பிரவீன்தான் அந்தக் கேள்வியைக் கேட்டான். டேய், கொஞ்சம் கூட Gap –பே இல்லையே எப்படிடா விசில் வரும்? ( ரொம்பக் கேள்வி கேட்கிறான். இவனிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்). அதெல்லாம் வரும்டா என்று அவனை Off  பண்ணி விட்டு, சாம்பார் பண்ணும் காரியத்தில் இறங்கினேன். இன்னொரு 10 லிட்டர் குக்கரை எடுத்து முக்கால்வாசி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விட்டு, ஈகிள் கவரை எடுத்து செய்முறை பக்குவத்தைப் படித்தேன். கொதிக்கும் நீரில் ஈகிள் பொடியைப் போட்டு இறக்கினால் சுவையும் மணமும் மிக்க சாம்பார் ரெடி. சுவையை அதிகரிக்க தக்காளியையும் சேர்க்கலாம். சத்தியமாகச் சொல்கிறேன் அதில் வேற ஒண்ணுமே எழுதலீங்க. எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். ப்பூ....சாம்பார்னா இவ்வளவுதானா? ( பருப்பு, புளி, காய்கறி, மல்லித்தளை, பெருங்காயம் எல்லாம்  Basic & Common sense என்று விட்டு விட்டார்கள் போலிருக்கு. நமக்குத்தான் அது எப்பவுமே இல்லையே). சந்தோஷமாக கொதிக்கும் நீரில் ஈகிள் பொடியையும், ( அதில் உப்பு சேர்த்திருப்பார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன்) உப்பையும் போட்டு விட்டு அறைக்குள் வந்து உட்கார்ந்து விசில் சத்ததுக்காக காத்திருந்தோம். நாங்கள் எங்கள் Cooking Exercise –ஐ  ஆரம்பிக்கும்போது மணி மாலை ஆறு. ஏகப்பட்ட Discussions & Analysis  ( நாஙகல்லாம் Engineers தெரியும்ல..........) எல்லாம் முடிந்து நாங்கள் அறைக்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தபோது மணி 8. “ஓடுமீன் ஓட...உருமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு” என்று சொல்கிற மாதிரி, ஒரே ஃபோக்கஸூடன்  Wait பண்ணிக் கொண்டிருந்தோம். அவ்வப்போது போய் குக்கரை Monitor பண்ணிக் கொண்டிருந்தோம் (Constant Monitoring is very important while testing any new equipment – படிச்சிருக்கோம்ல.....).

கிட்டத்தட்ட 11 மணி வரைக்கும் ஒரு பொட்டு சத்தத்தையும் காணோம். சுந்தரும், பிரவீனும் பசி மயக்கத்தில் தூங்கியே போய் விட்டார்கள். Something is not right என்று வழக்கம்போல் (லேட்டாக) பட்சி சொன்னது.
வருவது வரட்டும் என்று குக்கரைத் திறந்து பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்கங்க...ஒரு பருக்கையைக் கூட காணோம். வடிகஞ்சி போல ஏதோ ஒரு திரவம் மட்டுமே பாக்கி இருந்த்து. சரி, சாம்பார் என்ன ஆச்சுனு அதைத் திறந்து பார்த்தால், ஒரு மஞ்சள் நிறத் திரவம் மட்டும் எனக்கென்ன உனக்கென்ன என்று கொதித்துக் கொண்டிருந்தது. பசிக் கொடுமையில் எனக்குப் பின்னாலேயே வந்து எட்டிப் பார்த்த சுந்தரும் பிரவீனும் என்னை ஒரு கொலை வெறி பார்வை பார்த்தார்கள். Ofcourse they had the right to do so….

நாம் எங்கே தவறு செய்தோம் என்று அவர்களிடம் Discuss செய்வோமா என்று நினைத்து ஒரு நொடியில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பசியில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இரண்டு திரவங்களையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிக்ஸ் பண்ணி ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்து விட்டு படுத்து உறங்கினோம்.வெ.பாலமுரளி

No comments:

Post a Comment